ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 4-வது இடம்

செவ்வாய், 12 ஜூன் 2012 (17:12 IST)
FILE
ஐ.சி.சி.வெளியிட்டு உள்ள டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இங்கிலாந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. சமீபத்தில் மேற்கிந்திய தீவுடன் விளையாடிய டெஸ்ட் தொடரை 2-0 என்றுல் இங்கிலாந்து அணி வென்றது.

இதனால் டெஸ்ட் வரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இங்கிலாந்து அணி 117 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

116 புள்ளிகள் பெற்று தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்தையும் 112 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவும் பெற்றுள்ளது. இந்தியா 111 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தைப் பெற்றிருக்கிறது.

முதலிடத்தில் இருந்த இந்திய அணி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் 4ஆம் இடத்திற்கு தேய்ந்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா அணிகளிடம் வாங்கிய 8- 0 உதையே இதற்குக் காரணம்.

தற்போது மேற்கிந்திய அணி கூட இங்கிலாந்தில் தோல்வி தழுவினாலும் இந்தியாவை ஒப்பிடும்போது சிறப்பாகவே விளையாடுகிறது என்று கூறவேண்டும்.

இந்திய அணியில் மிகப்பெரிய 'பெயர்கள்' இருந்தும் அவை கவைக்குதவாமல் போனது. இங்கிலாந்தில் திராவிட் தேறினார். ஆஸ்ட்ரேலியாவில் ஒருவரும் தேறவில்லை. தோனியின் டெஸ்ட் தலைமையேற்பு செயல்பாடுகள் முற்றிலும் திருப்திகரமாக இல்லை என்பதே இந்தப் பின்னடைவுக்குக் காரணம்.

வெற்றி பெற முடியாவிட்டாலும், எதிரணியை திணறடிக்க வாய்ப்புக் கிடைத்தும் தனது மோசமான பந்து வீச்சு மாற்றம், பீல்டிங் வியூகம் ஆகியவற்றினால் அந்தக் கணங்களிலிருந்து எதிரணியை மீட்டுக் கொடுத்தார் தோனி. பாண்டிங் திணறிக்கொண்டிருந்தார். ஹஸ்சி டீமில் இடம்பெறுவோமா என்று திக்கித் திணறினார். ஆனால் அவர்களுக்கு வாழ்வு கொடுத்த பெருமை நம் இந்திய் அணியின் கேப்டன் தோனியையே சாரும்!

அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் பயணத்தில் பாண்டிங் அரைசதம் எடுக்க திணறினார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 3- 0 என்று உதை வாங்கியது. ஆனால் பல ஸ்டார்களைக் கொண்டதாக மார்தட்டும் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு வாழ்வு கொடுத்ததோடு, மடிந்து கொண்டிருக்கும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு புது வாழ்வு கொடுத்தது.

இந்த ஆண்டில் இனிமேலாவது வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தனது தீவிரத்தைக் காட்ட அணித் தலைமையில் மாற்றம் தேவை.

வெப்துனியாவைப் படிக்கவும்