உலகக் கோப்பை 2011: இலங்கை வீரர்களுக்கு இன்னமும் சம்பளம் வழங்கப்படவில்லை

வியாழன், 1 டிசம்பர் 2011 (12:34 IST)
கடந்த ஏப்ரலில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியின் வீரர்களுக்கு இன்னும் போட்டிகளுக்கான கட்டணங்கள் , உடன்படிக்கைத் தொகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் தலைமை நிர்வாகி டிம் மே கூறுகையில், இலங்கை கிரிக்கெட் சபை நிதிப் பிரச்சினையில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த சம்பள தொகைகள் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திடம் இருந்து 4.3 மில்லியன் டாலர்களை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் சபை பல்லேகல மற்றும் பிரேமதாஸ மைதானங்களை புனரமைக்க அதிக நிதிகளை செலவிட்டதாகவும் எனினும் போட்டிகளில் எதிர்ப்பார்த்த வருமானத்தை ஈட்டமுடியவில்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை அரசாங்கத்திடம் 23 மில்லியன் அமெரிக்க டாலர்களை கோரியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்