இந்தியா படு தோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!

வியாழன், 3 ஜனவரி 2013 (20:12 IST)
கொல்கட்டாவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தங்களது அபாரமான பந்து வீச்சினால் 250 ரன்களை திறம்பட காத்து இந்தியாவை 165 ரன்களுக்குச் சுருட்டி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒருநாள் தொடரை வென்றது. 3போட்டிகள் கொண்ட தொடரில் 2- 0 என்று முன்னிலை வகிக்கிறது பாகிஸ்தான்.
FILE

சென்னை போட்டி போலவே தோனி தனி மனிதனாக போராடினார் அவருக்கு உறுதுணையாக ஒருவர் கூட இல்லை அவர் 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகி மிகுந்த ஏமாற்றத்துடன் தலையை தொங்கபோட்டபடி வெளியேறினார்.

4வது முறையாக கொல்கட்டாவில் விளையாடும் பாகிஸ்தான், 4 முறையும் இந்தியாவை மண்ணைக் கவ்வச் செய்துள்ளது.

கொல்கட்டா நிலைமைகளை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் திறம்பட பயன்படுத்திக் கொண்டனர். நல்ல பந்து வீச்சு அதே வேளையில் மோசமான ஷாட் தேர்வு பேட்டிங் இந்திய வீழ்ச்சிக்குக் காரணமாயின.

குறிப்பாக கம்பீர், கோலி, யுவ்ராஜ், அஷ்வின், ஜடேஜா பேட்டிங் படு மோசமாக அமைந்தது. அவுட் ஆன விதம் படு கேவலமாக அமைந்தது.

கோலி வைடு பந்தை தொட்டு அவுட் ஆனார். யுவ்ராஜ் வெளியே சென்ற பவுன்சரை தப்புத் தப்பாக ஹூக் ஆட முயன்று அவுட் ஆனார். கம்பீர் வைடு பந்தை சேஸ் செய்து பந்தை உள்ளே வாங்கி விட்டுக் கொண்டார்.

பாகிஸ்தான் தரப்பில் மீண்டும் ஜுனைத் கான் 3 விக்கெட்டுகளையும் சயீத் அஜ்மல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குறிப்பாக அஜ்மல் ஒரு ஓவரில் ஜடேஜா, புவ்னேஷ் குமார், டிண்டா ஆகியோரை வீழ்த்தினார்.

உமர் அக்மல் மீண்டும் அபாரமாக வீசி யுவ்ராஜ், சேவாகை வீழ்த்தினார். ஹபீஸின் வைடு பந்தை காலைத் தூக்க்ப் போட்டு ஆடி பேலன்ஸ் தவறி ரெய்னா ஸ்டம்ப்டு ஆனார்.

இந்திய பேட்டிங்கின் மோசமான நிலை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது. ஒரு பார்ட்னர் ஷிப் கூட இல்லை.

தோனியும் ரெய்னா, நிற்பார், அஷ்வின் நிற்பார், ஜடேஜா நிற்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். ஒருவர் கூட நிற்கவில்லை. யாராவது ஒருவர் நின்றிருந்தால் ஓவருக்கு 10 ரன்கள் என்பது தோனிக்கு பெரிய விஷயமில்லை.

ஆனாலும் பாகிஸ்தான் இங்கிலாந்து போலவே பிரஷரைப் போட்டு இந்தியாவின் பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

அடுத்த போட்டி வெறும் ஃபார்மாலிட்டிதான். 6ஆம் தேதி டெல்லியில் 3வது போட்டி அதில் ஜெயித்து ஓரளவுக்காவது மரியாதையைக் காப்பற்றுமா இந்தியா என்பதைப் பார்க்கவேண்டும்.

ஐ.பி.எல். போன்ற மோசமான தரமுடைய ஆட்டங்களில் அதிக அளவில் விளையாடி ஒருவருக்கும் கால்கள் நகரவில்லை, அணுகுமுறை படு மோசமாக ஆகிவருகிறது.

குறிப்பாக இளம் வீரர்களான கோலி, கம்பீர், ஜடேஜா, அஷ்வின் ஆகியோரது அணுகுமுறை கவலையளிப்பதாக உள்ளது.

இந்திய அணிக்கு சீரியசான மறுகட்டுமானம் தேவை. அம்பாட்டி ராயுடு, ரஹானே, மனோஜ் திவாரி, இர்பான் பத்தான், யூசுப் பத்தான் ஆகியோரை அணிக்குள் அழைக்கவேண்டியதுதான். மேலும் புஜாராவையும் அணிக்கு அழைக்கலாம்.

ஸ்விங் பந்து வீச்சை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் எதிலும் எதிர்கொள்ள ஆட்களில்லை. ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராகவும் மோசமான அணுகுமுறையே நீடித்து வருவதுதான் தோல்விக்குக் காரணம்.

இரண்டு போட்டிகளிலும் குறைந்த ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழப்பதுதான் பிரச்சனை, 20 ஓவர்களில் 100 ரன்கள் என்றாலும் கூட விக்கெட்டுகள் சரிந்தல் கடைசி 10 ஓவர்களில் சர்க்கிளில் 5 பீல்டர்கள் நிற்கும்போது 90 ரன்கள் அடிப்பது பெரியவிஷயமில்லை என்கிறார் தோனி. அவர் கூறுவது சரிதான். ஆனால் ஸ்டாண்ட் கொடுக்க ஆளில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்