இந்தியா - இங்கிலாந்து இன்று முதல் டெஸ்ட்!

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (09:58 IST)
வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் அறுவை சிகிச்சையின் காரணமாக இத்தொடரில் ஆடப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மேத்யூ ஹோக்கார்ட் முதுகு வலியுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், துவக்கத்திலேயே பெரும் சோதனையுடன் இந்திய அணியை சந்திக்கப் போகிறது இங்கிலாந்து அணி!

லார்ட்சில் இந்திய-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கவுள்ள நிலையில், பலம் வாய்ந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் ஏதுமின்றி, இளம் வீரர்களின் துணையுடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

ஹோக்கார்டிற்கு பதிலாக ஜேம்ஸ் ஆண்ட்ரசன் அல்லது கிறிஸ் டிரம்லெட் ஆகிய இருவரில் ஒருவர் பந்து வீச்சைத் துவக்குவார்கள் என்றும், ஹார்மிசனுக்கு பதிலாக புதிய வீரர் ஸ்டூவர்ட் பிராட் களமிறக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான ஹார்மிசன், ஹோக்கார்ட், ஃபிளிண்டாஃப், சைமன் ஜோன்ஸ், ஆஷ்லி ஜைல்ஸ் ஆகிய எவரும் ஆடாத நிலையில் அனுபவமற்ற புதிய வீரர்களுடன் சவாலான ஒரு சூழலை சந்திக்கப் போவதாக மைக்கேல் வான் கூறியுள்ளார்.

லார்ட்ஸ் மைதானம் இந்திய அணிக்கு தொடர்ந்து தோல்வியைத் தந்த சவாலான மைதானமாகும். ஆனால் தங்களுடைய டெஸ்ட் வாழ்க்கையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசித் தொடரை ஆடப் போவதாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்கூலி, ராகுல் திராவிட், வெங்கட்சாய் லக்ஷ்மண் ஆகியோர் இந்த வாய்ப்பை தங்களுடைய திறனை முழுமையாக வெளிப்படுத்த பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்விங் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற இங்கிலாந்து ஆட்டக்களங்கள், இந்திய அணியின் ஜாஹீர் கான், ஸ்ரீசாந்த், அஜீத் அகார்கர் ஆகியோரின் வீச்சிற்கு மிகவும் துணைபுரியும் என்று எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்