மன உளைச்சலில் சிக்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்! – தடுக்க என்ன செய்யலாம்?
சனி, 28 மார்ச் 2020 (09:37 IST)
கொரோனா வைரஸ் ஒருபக்கம் பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனால் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலும் இன்னொரு பக்கம் பிரச்சினையாகி வருகிறது.
கொரோனா பாதிப்பை குறைக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மேலும் கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறாக தனிமைப்படுத்தப்படுபவர்கள் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனால் சிலர் மன பிறழ்வு அடைவது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்படுபவர்கள், கொரோனா இருப்பதால் தனிமைப்படுத்தப்படுபவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் இருக்க மனநல மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
அதன்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளலாம். தங்களது வீட்டில் புத்தகங்கள் இல்லாவிட்டாலும் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கும் புத்தகங்களை மொபைலில் டவுன்லோட் செய்து படிக்கலாம். புத்தகம் படிக்க அதிக நேரம் பிடிக்கும் மற்றும் பொழுது கழிவது தெரியாது என்பதால் இதை முயற்சிக்கலாம்
படிப்பதில் ஆர்வம் இல்லாதவர்கள் படங்கள் பார்க்கலாம். ஸோம்பி படங்கள், த்ரில்லர் வகை படங்களை தவிர்த்து மற்ற படங்களை பார்ப்பது நல்லது.
சமூக வலைதளங்களை அதிகம் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் கொரோனா குறித்து தொடர்ந்து அதில் வரும் பலத்தரப்பட்ட செய்திகளும் மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
தங்களுக்கு பிடித்தமான இசையை, பாடல்களை கேட்கலாம்.
முக்கியமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் விழித்திருக்கும்போது பல சிந்தனைகளும் ஏற்பட்டு தூக்கம் கெடுவதுடன், மன உளைச்சல் அதிகமாகும். அதுபோலவே காலை சீக்கிரமாகவே எழுந்து சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது சுறுசுறுப்பை அளிக்கும்.