உலக வரலாற்றில் புகழ்பெற்ற பேரரசர்களில் இஸ்ரவேலை ஆண்ட சாலமோன் ஒருவர் என்பதை அறிவோம். அவருக்குப் பின் இஸ்ரவேல் முடியரசு இரண்டாக உடைந்து ஏறக்குறைய 400 ஆண்டுகள், அதாவது கி.மு. 587 வரை சிற்றரசர்கள் வசம் இருந்தது. அந்நாட்களில் பல தீர்க்கதரிசிகள் தோன்றி தமக்கு வெளிப்பட்ட இறைவனின் தரிசனங்களை மக்களுக்கு தெரிவித்து வந்தனர். அவர்களில் கி.மு. 7-ம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய ஏசாயா மீகா என்னும் தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்திய தரிசனங்களில் முக்கியமான ஒன்று மேசியாவின் பிறப்பாகும். இச்செய்தியை விவிலியத்தில் இவ்வாறு காணலாம் :
1. ஏசாயா (7 : 14) - "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்".
2. ஏசாயா (9 : 16) - "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும். அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும்".
ரோம பேரரசு : கி.மு. முதலாம் நூற்றாண்டில் இஸ்ரவேல் நாடு ரோம பேரரசின் கீழ் இருந்தது. அப்போது ரோம பேரரசின் கிழக்குப் பகுதியை மார்க் அந்தோணியும், மேற்குப் பகுதியை ஆக்டேவியனும் ஆண்டு வந்தனர். மார்க் அந்தோணி ஆக்டேவியனின் சகோதரி ஆக்டேயாவை மணந்திருந்தான். இந்த மார்க் அந்தோணிதான் சரித்திரப் புகழ்பெற்ற ஜூலியஸ் சீசரை கி.மு. 44 ஆம் ஆண்டு காசியஸ் , புரூடஸ் என்பவர்களால் கொலை செய்ய உதவியாய் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
காலம் செல்ல, அந்தோணி ஆக்டேவியாவை பிரிந்து எகிப்து அரசி கிளியோபாட்ராவை அடைந்து தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளையும் பாலஸ்தீன நாட்டின் பகுதிகளையும் அவளுக்குக் கொடுத்தான். இது எகிப்து நாட்டு ஏரோது மன்னனுக்கும், ஆக்டேவியனுக்கும் பிடிக்கவில்லை. ஆத்திரமடைந்த ஆக்டேவியன் கி.மு. 31-30ல் அந்தோணி-கிளியோபாட்ராவை ஆக்டியம், அலக்ஸாந்திரயா போர்களில் தோற்கடிக்க, இருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த வெற்றிக்குப் பின் பாலஸ்தீன எல்லைப் பகுதியும் ஆக்டேவியனின் ஆட்சியில் கீழ் வந்தது. தன் பெயரை அகஸ்துராயன் என்று மாற்றி முதல் ரோம பேரரசனானான் என்பது வரலாறு.
யோசேப்பும் - மேரியும்
webdunia photo
WD
அந்நாட்களில் ரோம அரசின் எல்லைக்குள் அடங்கிய வட இஸ்ரவேல் பகுதியிலுள்ள நாசரேத் என்னும் ஊரில் சாதாரண ஒரு குடும்பத்தில் மேரி என்னும் ஒரு பெண் இருந்தாள். மேரிக்கு வயது வந்தபோது, பெற்றோர் அவ்வூரில் தச்சுத்தொழில் செய்யும் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நியமித்தனர். அவள் கன்னிகையாயிருக்கையில் ஒரு நாள் காபிரயேல் என்னும் தேவதூதன் வெளிப்பட்டு - "மரியாளே, நீ கர்ப்பவதியாகிஒரு குமாரனைப் பெறுவாய். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக" என்று சொல்லி மறைந்தான். (லூக்கா 1 : 31) மேரி திகைத்தாள். உடனே இச்சம்பவத்தை தன் இனத்தாராகிய, வயதில் மூத்த எலிசபத் குடும்பத்தாருக்கு தெரிவித்தாள். அவர்கள், பிறக்கப் போகும் ராஜாவின் தாயாக மேரியை, கடவுள் தெரிந்து கொண்டதை அவளுக்கு விளக்கினர்.
நாட்கள் சென்றது. மேரி கர்ப்பவதியானாள். இதைக் கண்டு யோசேப்பு குழப்பமடைந்தான். ஒரு நாள் கர்த்தருடைய தூதன் அவனுக்கு சொப்பனத்தில் வெளிப்பட்டு, கர்த்தன் தன் "குமாரனை இவ்வுலகிற்கு அனுப்ப மேரியை தெரிந்து கொண்டதை" அறிவித்தான். யோசேப்பின் மனக்கலக்கம் தீர்ந்தது. கர்த்தர் கட்டளையின்படி வழி நடத்தப்படுவதை தெரிந்துக் கொண்டான்.
இயேசுவின் பிறப்பு :
இந்நிலையில் ரோம அரசனான அகஸ்துராயன் உலகமெங்கும் முதலாம் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று கட்டளைப் பிறப்பித்தான். எல்லாரும் தங்கள் தங்கள் ஊருக்குப் போனார்கள். யோசேப்பு, தாவீதுராஜாவின் வம்ச வழியில் வந்தவராதலால் தாவீதுராஜா பிறந்த ஊராகிய பெத்லகேமுக்கு தன் மனைவி மேரியை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. மேரி கர்ப்பமாயிருந்தபடியால் அக்காலத்து நீண்ட பிரயாணத்திற்குப் பயன்படுத்தும் கழுதை மூலம் தொலை பயணப்பட்டனர்.
பெத்லகேமை அடைந்து தங்குவதற்கு எங்கும் இடம் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு மாட்டுத் தொழுவத்தில் மட்டுமே இடம் கிடைத்தது. அங்கு அன்றிரவு தங்கினர். இரவில், மன்னர்களின் மன்னன் ஏழை கோலமெடுத்து, மாடுகள் மத்தியில், தன்னையே தாழ்த்தினவராய் பல நூறு ஆண்டுகளுக்கு முன் உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேற இவ்வுலகில் வந்துதித்தார்.
இயேசு பிறந்தபோது நடந்தவைகள் :
1. மேய்ப்பர்களுக்கு செய்தி : அந்நாட்களில் பெரும்பாலான மக்கள் மேய்ப்பர்களாகவே இருந்தனர். அவர்கள் தங்கள் மந்தைகளுடன் வயல்வெளியிலேயே தங்கி வாழ்ந்தனர். இந்த பாமர மக்களுக்கே இயேசுவின் பிறப்பின் செய்தி கொடுக்கப்பட்டது. இதனை விவிலியத்தில் இவ்வாறு காணலாம் :
"எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" (லூக்கா 2 : 10)
2. நட்சத்திரம் : இயேசு பிறந்தபோது "கிழக்கே நட்சத்திரம் தோன்றி பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் நின்றது". (மத்தேயு 2 : 9)
இயேசுவை காண வந்த ஞானிகள் (றுளைநஅநn) அந்த நட்சத்திரத்தை பின் தொடர்ந்து "கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்துக் கொள்ள வந்தோம் என்றார்கள்". (மத்தேயு 2 : 2)
இப்பிரபஞ்சத்தின் அதிகாரி என்பதற்கு சான்றாக அவரின் பிறப்பின்போது ஒரு நட்சத்திரம் ஒளி வீசியதை, "அவருடைய நட்சத்திரம்" என்று விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதை காணலாம்.
3. ஏரோது ராஜா: ரோம ஆட்சியில், பாலஸ்தீன பகுதியை ஏரோது ஆள, அனுமதிக்கப்பட்டிருந்தான். இந்த பூலோக மன்னன், பிரபஞ்ச மன்னன் பிறப்பை கேட்டு கலக்கமுற்றான். கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு சொப்பனத்தில் தோன்றி ஏரோது பிள்ளையை கொலை செய்யத் தேடுவான். ஆகவே எகிப்துக்கு ஓடி நான் சொல்லும் வரை அங்கே இரு என்றான். யோசேப்பும் அவ்வாறே செய்தான்.
அந்நாட்டு மன்னனான ஏரோதுவால் இறையரசர் இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; தடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் இயேசுவின் உலக வாழ்க்கை, மோசேயின் காலத்தில் முன்னுரைக்கப்பட்டு (உபாகமம் 19 : 15-18) ஏரோதின் காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்தது (யோவான் 6 : 14).