இந்த ஆண்டு சுற்றுலா, தொழில் பொருட்காட்சியை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், 2008ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 34வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சி தீவுத்திடலில் நடைபெறவிருப்பதால் அதற்காக நடைபெறும் பணிகளை தமிழக சுற்றுலா, பதிவுத்துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் பார்வையிட்டார்.
அப்போது சுற்றுலா, பண்பாட்டுத்துறை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலாத்துறை இயக்குனர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனர் மருத்துவர் எம்.ராஜாராம், துணை இயக்குனர் பக்தவச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுரேஷ்ராஜன், வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் துவங்கும் பொருட்காட்சி இம்முறை கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பை முன்னிட்டு கிறிஸ்மஸ்சுக்கு முன்னரே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.