அந்நாட்களில் யூத மதவாதிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் எப்பொழுதும் இயேசுவிற்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர். காரணம் இயேசு வாழ்க்கைப் பாதையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடி வந்தார். எனவே இயேசுவை தந்திரமாக பிடித்து கொலை செய்ய முடிவு செய்தனர். இதன்படி இயேசுவைப் பிடிக்க அவருடன் இருந்த பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாசுக்கு (துரனயள) பெருந்தொகையை கொடுத்தனர். யூதார் நள்ளிரவில் இயேசு இருக்கும் கெத்சமனே தோட்டத்திற்கு சென்றான். அவன் பின்னே ஒரு கூட்டமும் சென்றது. தவறுதலாக வேறு யாரையும் காட்டிக் கொடுக்காமலிருக்க முன் கூட்டியே திட்டமிட்டு இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தான்.
இயேசுவின் அன்பு :
மக்கள் கூடி விட்டனர். அங்கு சூழ்ந்திருந்தவர்களில் ஒருவன் பட்டயத்தை உருவி இயேசுவை பிடிக்க வந்த பிரதான ஆசாரியரின் வேலைக்காரனுடைய காதை வெட்ட, இயேசு அவனை தொட்டு சுகமாக்கினார். வெட்டியவனை நோக்கி "பட்டயத்தை உரையில் போடு, பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தால் அழிவான்" என்றார்.
உலகம் கைவிடுதல் :
இயேசு பிடிக்க வந்தவர்களை நோக்கி கள்வனைப் பிடிக்க வருவது போல் வந்தீர்களே. நான் தினமும் தேவாலயத்தில் உங்களுடன் இருக்கையில் நீங்கள் ஏன் பிடிக்கவில்லை. "இதுவோ உங்கள் வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது" என்றார். அவர் சீடர்களில் ஒருவரான பேதுருவைத் தவிர மற்ற யாவரும் ஓடிவிட்டனர்.
கூட்டத்தினர் பேதுருவை அடையாளம் காட்டினர். ஆனால் பேதுருவோ நான் அல்ல என்று ஒரு முறையல்ல, மூன்று முறை கூறிவிட்டான். இந்த அறியாமைக்கு தனிமையிலே மனங்கசந்து அழுதான் என்று விவிலியம் கூறுகிறது.
சட்டம் கட்டழிந்த காட்சி :
மக்கள் கூட்டத்தினர் இயேசுவை குட்டினார்கள், முகத்தில் காறி துப்பி அறைந்தனர். உன்னை அடித்தவன் யார் என்று ஞான திருஷ்டியில் சொல் என்று ஏளனம் பண்ணினார்கள்.
இரவில் ஆலோசனை சங்கத்தின் முன் :
இயேசுவை பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டு சென்றனர். மற்ற மதவாதிகளும் அங்கிருந்தனர். கொலை செய்ய பொய் சாட்சிகளைத் தேடினர். அகப்படவில்லை. கடைசியில் நீ "தேவனுடைய குமாரனா" என்றனர்.
இயேசு : "நீங்கள் சொல்கிற படியே நான்" என்றார். உடனே வேறு சாட்சி தேவையில்லை. இவரே தன் வாயினால் சொல்லக் கேட்டோமே என்றனர்.
ரோம தேசாதிபதியாகிய பிலாத்துவின் முன்:
பொழுது விடிந்துவிட்டது. ஆலோசனைச் சங்கத்தினர் இயேசுவை பிலாத்துவிடம் அழைத்துச் சென்று அவர் பேரில் சாட்டிய குற்றச்சாட்டுக்கள் :
- தன்னை கிறிஸ்து என்னப்பட்ட ராஜா என்பது.
- ராயருக்கு வரி கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லி மக்களை கலகப்படுத்துவது.
பிலாத்து யாவற்றையும் கேட்டு, இயேசுவை நோக்கி "நீ யூதருடைய ராஜாவா" என்று கேட்க, "நீர் சொல்கிறபடி தான்" என்றார்.
யூதார் மரணம் :
இதற்கிடையில் யூதார், ஒரு குற்றமுமில்லாத இயேசுவை தான் காட்டிக் கொடுத்ததினாலே அவர் மரண தண்டனை அடைவதை உணர்ந்து மனம் உடைந்தான். அவன் காட்டிக் கொடுக்கப் பெற்ற பணத்தை தேவாலயத்தில் எறிந்து விட்டு தூக்கில் உயிர்விட்டான்.
ஏரோதுவின் விசாரணை :
webdunia photo
WD
மதவாதிகளையும், மக்கள் கூட்டத்தினரையும், பிலாத்து பார்த்து நான் இயேசுவிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்றான். அதற்கு அவர்கள் கலிலேயா தொடங்கி யூதேயா தேசம் வரை உபதேசம் பண்ணி ஜனங்களை கலகப்படுத்துகிறான் என்று கூறினார். இயேசு கலிலேயாவை சேர்ந்தவர் என்பதை கேட்ட பிலாத்து, கலிலேயா நாடு ஏரோது ராஜாவின் அதிகாரத்திற்குள் வருகிறது என்று கூறி ஏரோதுவிடம் அனுப்பி வைத்தான்.
பிலாத்துவின் விசாரணை தொடர்கிறது :
ஏரோது இயேசுவை இதுவரைக் கண்டதில்லை. அவரை பார்க்க சமயம் கிடைத்தது. பல காரியங்களை இயேசுவிடம் கேட்டான். மதவாதிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். ஏரோது ராஜா இயேசுவுக்கு மினுக்கான உடை அணிவித்து பிலாத்துவிடம் திரும்ப அனுப்பி வைத்தான்.
முன்பு ஏரோதுவும் பிலாத்துவும் பகைவர். ஆனால் இயேசுவின் விசாரணையில் நண்பர்களானார்கள். பிலாத்து யாவரையும் அழைத்து நீங்கள் கூறிய குற்றச்சாட்டை உங்கள் முன் விசாரித்தேன். நான் ஒரு குற்றமும் காணவில்லை. ஏரோதும் ஒரு குற்றமும் காணவில்லை. ஆகவே விடுதலையாக்குகிறேன் என்று பிலாத்து கூறினான்.
பரபாஸ் விடுதலை :
பரபாஸ்என்பவன் ஒரு கொலை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டிருந்தான்.
அந்நாட்களில் பண்டிகை தோறும் ஒருவனை விடுதலையாக்குவது வழக்கம். இதன்படி பிலாத்து இயேசுவை விடுதலையாக்க முனைந்தான். இதனைக் கேட்ட ஜனங்கள் பரபாஸை விடுதலையாக்கும் என்றனர். பிலாத்துவோ, இயேசு மரணத்துக்கு கேதுவான ஒரு குற்றமும் செய்யவில்லையே என்று கூறியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. மாறாக சிலுவையில் அறையும் என்று உறத்த சத்தத்தோடு கூறினார்கள். பிலாத்துவும் மக்களின் எண்ணத்திற்கிசைய மனம் மாறினான்.
இயேசுவின் மேல் பழி :
கலகம் வலுவடைவதை பிலாத்து கண்டான். தன் பிரயாசத்தினால் பிரயோசனமில்லை என்று கண்டு, பிலாத்து தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி, இந்த நீதிமானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தான்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த இவ்வழக்கின் முடிவே உலக வரலாற்றை இரண்டாக பிரித்து விட்டது.