கிறிஸ்மஸ் தாத்தாவின் கதை

திங்கள், 24 டிசம்பர் 2012 (18:22 IST)
கிறிஸ்மஸ் உலகெங்கும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் ஒரு அற்புதமான பண்டிகையாகும். ஏசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் இப்பண்டிகையின் முக்கிய அம்சமாக திகழ்வது சான்டா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தாவும் அவரின் பரிசு பொருட்களும்தான்.



சான்டா க்ளாஸ் என்னும் சொல் செயின்ட் நிகோலாஸ் என்னும் பெயரை தழுவி நிறுவப்பட்டது.செயின்ட் நிகோலாஸ் என்பவர் நான்காம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க கிறிஸ்துவ பாதிரியாவார். ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இவரின் கொள்கையை பறைசாற்றும் விதத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஒரு பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. அது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதெல்லாம் சான்டா க்ளாஸ் ஒவ்வொருவர் வீட்டிற்கும் வருகைதந்து அனைவருக்கும், குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பார் என்பது தான். பல்லாயிரமாண்டுகளாக கிறிஸ்துவர்கள் நம்பும் பாரம்பரியமாக கருதப்படும் இந்த வழக்கத்தை நடைமுறைபடுத்த கிறிஸ்துமஸ் தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு பரிசு பொருட்கள் வழங்கி இனிப்புகள் பகிர்ந்துகொள்வது வழக்கம்.

சிவப்பு மற்றும் வெள்ளை உடைகள், வெள்ளை நிற தாடி, பருமனான உடல்வாகு என கிறிஸ்மஸ் தாத்தாவை நினைக்கும்போதெல்லாம், உண்மையான மகிழ்ச்சி என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது தான் என்னும் உண்மையை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.

எட்டு மான்கள் பனியில் சறுக்கும் வாகனத்தை இழுக்க, அதில் ஒய்யாரமாய் அமர்ந்துவரும் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள்தான் அனைவரது வீட்டிற்கும் வருகை தருவார்.

பரிசு பொருட்கள், இனிப்பு வகைகள், சுவை மிகுந்த கிறிஸ்மஸ் கேக்குகள், மனமெங்கும் மகிழ்ச்சி என கிறிஸ்மஸ் தாத்தாவின் வருகைக்கு இன்றிரவு காத்திருங்கள்.......
 

வெப்துனியாவைப் படிக்கவும்