இந்தியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கி அறிவித்துள்ளார் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்.
கத்தோலிக்கத்தைச் சார்ந்து உள்ளம் முழுவதும் ஏசுவை நினைத்து அவரது வழியில் தனது வாழ்க்கையை செலுத்திய அல்போன்சாவின் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம்.
1910ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோட்டயம் அருகில் முட்டாதுபனது என்ற இடத்தில் ஜோசப் - மேரி தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளையாகப் பிறந்தார்.
தனது உறவினர் அன்னம்மா முரிக்கனுடன் வாழ்ந்து வந்த அல்போன்சா, கன்னியாஸ்திரியாக மாற வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்ததால் திருமணத்தை மறுத்தார்.
குடும்பத்தினருடன் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு 1927ஆம் ஆண்டு அவரை கன்னியாஸ்திரிகளின் பள்ளியில் சேர்த்தனர் பெற்றோர்.
இதனைத் தொடர்ந்து பரநங்கனம் பகுதியில் 1928ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2ம் தேதி அவருக்கு அல்போன்சா என்று பெயரிடப்பட்டு கன்னியாஸ்திரியாக மாறினார்.
அதன்பிறகு சங்கனச்சேரி என்ற இடத்தில் இருக்கும் பள்ளிக்கு உயர் கல்வி கற்கச் சென்றார். அங்கு படித்து அல்போன்சா பின்னாளில் அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சகோதரி அல்போன்சா எப்போதும் இறை நம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டினார். அவர் கன்னியாஸ்திரியாக மாறியதில் இருந்து அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. பணமும், புகழும் அவரை எந்த விதத்திலும் மாற்றவில்லை.
மற்றவர்களுக்கு உதவுவதிலும், சமூக நல பணிகளிலுமே எப்போதும் தனது நேரத்தை செலவிட்டு வந்தார். வெகு விரைவிலேயே நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார்.
webdunia photo
WD
இந்த பூமியில் அவர் பிறந்து வாழ்ந்தது சிறிது காலமே. தனது 36ஆம் வயதில் 1946ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இவரை பற்றி ஒரு சிலரே அறிந்திருந்தனர்.
அவர் இருக்கும் வரை அவரது அருஞ்சேவையைப் பற்றி அறிந்திருந்தவர்கள் அனைவரையும் அவரது மரணம் பாதித்தது. அவரது சேவைகளைப் பற்றி வெளி உலகுக்கு எடுத்துக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து நடந்த மாமுயற்சிகளின் பலனாக தற்போது போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக், கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.