என் உயிர் மழலையே, சுக(பிரசவ)மாய் நீ வெளி வருவாய்யென்று நினைத்திருக்கையில், சுதந்திரமாய் தான் - நீ வருவேனென்று ஆசைப்பட்டதால், நான் கத்தி போராடாமல், கத்தியோடு போராடினேன் - என்றாலும் என் பத்து மாத சுகம், பத்தே நிமிடத்தில் வெளி வந்த - உன் வீல் என்ற அழுகையை கேட்ட அந்த நொடி - இறைவா என்னென்று சொல்வேன் - என் கண்கள் மூடியிருந்தாலும், கருவிழிகள் உன்னைக் காண பட்டாம்பூச்சியாய் ஆனந்தக் கண்ணீரோடு துடித்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். என் மூச்சுக்காற்று - உன் வாசத்தை தேடியதை - யாரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். என் உதடுகள் அரைகுறை மயக்கத்தில் -உன்னை அழைத்ததை - யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் - என் செவிகள் மீண்டும் உன் குரலை கேட்க தவம் கிடந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் - என் உடம்பெல்லாம் மறத்துப்போனாலும் உயிர் மட்டும் உன்னைக் காண உனக்கே உனக்காய் வாழ்ந்து கொண்டிருந்ததை - யாரும் மறுக்க மாட்டார்கள்.
இந்த பூமிக்கு - நீ ஒரு புதுப்பிறவி - உன்னால் எனக்கும் ஒரு மறுபிறவி - இப்படியே இறைவனுக்கு நன்றி சொல்லி - ஒரே ஒரு வேண்டுகோளுடன் வீட்டிற்கு ஒரு மரம் என்பது போல் எல்லோர்க்கும் ஓர் குழந்தை நிச்சயம் என்று - உன் படைப்பினில் ஒரு சட்டம் வைத்தால் என்ன? பிரசவ வலியை விட பிறர் சொல்லின் வலியால் இப்பிறவியில் ஏங்கித் துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கொடுப்பாயா இறைவா மறுபிறவி?