அவன் தாயாரும் ஜிங்ஜுவின் கோபத்தை குறைக்க என்னென்னவோ மன வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாயிற்று. முடிவு கடுகளவும் பிரயோஜனம் தரவில்லை.
அப்போது அந்த ஊருக்கு புகழ் பெற்ற ஜென் துறவி வந்திருந்தார். அவரிடம் அனுப்பி வைத்தால் மகனின் கோபத்துக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும் என்று ஜிங்ஜுவின் தாயார் நம்பினார். மகனை துறவியிடம் அனுப்பி வைத்தார்.
நேராக துறவியிடம் போய் "மாஸ்டர், என்னிடம் அடக்க முடியாத கோப உணர்வு இருக்கிறது. அதை நான் எப்படி சரி செய்வது?'' என்று கேட்டான்.
"உன்னிடம் ஏதோ மிகவும் வித்தியாசமான ஒன்று இருக்கிறது. அதுதான் கோபம்! எங்கே, அதை சற்று என்னிடம் காட்டு பார்க்கலாம்'' என்றார் துறவி.
`இப்பொழுது என்னால் காட்ட முடியாது.'- இது ஜிங்ஜு
`எப்போதுதான் என்னிடம் காட்ட முடியும்' - இது துறவி.
`அது எதிர்பாராமல் வரும். அப்போதுதான் கோபத்தை அடக்க என்ன செய்வது என்று தெரியவில்லை' என்றான் ஜிங்ஜு
"கோபம் என்பது உண்மையானது, இயல்பானது என்றால் எந்த சமயத்திலும் அதை என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை. உன் பெற்றோரும் கொடுத்தது இல்லை. பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது?'' என்று கேட்டார்.
ஜிங்ஜு குழம்பினான்.
துறவியே விளக்கினார், "கோபம் என்பது ஏமாற்றத்தில் விளைந்த ஒரு பின்செயல். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது. ஏமாற்றத்திலிருந்து கோபம் உண்டாகிறது'' என்று புரியவைத்தார்.
நீதி: பொன், புகழ், செல்வம் என்று ஒவ்வொன்றின் மேல் எதிர்பார்ப்பு வைப்பதால் ஏமாற்றம் உருவாகிறது. ஏமாற்றம் கோபமாகிறது. வெறுங்கையுடன் வந்தோம். வெறுங்கையுடனேயே செல்கிறோம். இடையில் வந்து போகும் செல்வங்களின் மீது எதிர்பார்ப்பு வைக்காமல் வாழ்ந்தால் சலனமில்லாத நிம்மதியான வாழ்வு உருவாகும்.