வாசுகிப் பாட்டி இன்றைக்கும் ஒரு நரியின் கதையைத்தான் உங்களுக்குக் கூற வந்திருக்கிறேன்.
சரி ஆரம்பிக்கலாமா குழந்தைகளா? கதையை ஆரம்பிக்கும் முன்னர் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும், ஓடியாடி விளையாடும் குழந்தைகள் வீட்டிற்குள் வந்ததும் கை, கால்களை நன்கு சுத்தம் செய்து கொண்ட பின்னரே இயல்பான வேலைகளை செய்யத் துவங்க வேண்டும்.
webdunia photo
WD
சரி கதையைச் சொல்லுகிறேன், முன்னொரு காலத்தில் காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு நாள் நகரத்திற்கு உணவு தேடிச் சென்றது. அப்போது சில நாய்கள் அதனைத் துரத்த ஆரம்பித்தன. அவைகளிடமிருந்து தப்பி ஓடும் போது நரி ஒரு சாயத் தொழிலாளியின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த நீல நிற சாயத் தொட்டியில் விழுந்து விட்டது. அதன் உடல் முழுவதும் தலை முதல் கால் வரை நீல நிறமாகிவிட்டது. அது காட்டிற்கு திரும்பிய போது மற்ற விலங்குகள் அதைக் கண்டு அடையாளம் தெரியாமல் பயந்து நடுங்கின. அதனை பயன்படுத்திக் கொண்ட நரியானது, தான் ஒரு வகை ராட்சத ஆந்தை எனவும், கடவுளரின் அரசனான இந்திரனால் காட்டை காப்பதற்காக அனுப்பப்பட்டவன் எனக் கூறியது.
மற்ற விலங்குகள் நரி கூறியதை பயத்துடன் கேட்டன. அதனால் நரி சிங்கத்தை முதல் அமைச்சராகவும், புலியை தன்னுடைய படுக்கையறை காவலாளியாகவும், யானையை வாயில் காப்போனாகவும் அறிவித்தது. தன் இனமான நரிகளை வைத்து பிறர் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க அனைத்து நரிகளையும் காட்டை விட்டு துரத்தியது. தன்னைத்தானே அரசனாக அறிவித்துக் கொண்ட நரிக்காக பிற விலங்குகள் வேட்டையாடி உணவுப் பொருட்களை கொண்டு வர, அந்த உணவினை உண்மையான அரசனைப் போல் நரி அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தது. இவ்வாறு நரி சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வந்தது
ஒரு நாள் அவ்வழியாக சென்ற நரிகள் கூட்டம் ஒன்று ஊளையிட்டுக் கொண்டே சென்றது. அதனைக் கேட்ட அரசன் வேடத்தில் இருந்த நரியால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தானும் ஊளையிடத் துவங்கியது.
இதனைக் கேட்ட மற்ற விலங்குகள் நரியின் ஏமாற்றுத்தனத்தை அறிந்து அதனை அடித்துக் கொன்றன.