சுறுசுறுப்பான எறும்புகள் பற்றி அறிவோம்
திங்கள், 1 மார்ச் 2010 (12:39 IST)
சுறுசுறுப்பாக வாழ்வதற்கு எறும்புகளை நாம் எடுத்துக்காட்டாகக் கூறுவோம். மிகச்சிறிய உயிரினமான எறும்பிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. வருங்காலத்திற்காக இப்போதே சேர்த்து வைக்கும் மனப்பான்மை மற்ற அனைத்து உயிரினங்களையும் விட எறும்பிடம் அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் என்ன நிகழப் போகிறது என்று நன்கு அறிந்து அதற்கேற்ற வகையில் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதால்தான், இவ்வளவு புயல், வெள்ளம் ஏற்பட்டும் இதுவரை எறும்பு என்ற உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதாவது எறும்பு என்பது 10 கோடி ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வாழ்ந்து வரும் இனம் என்பதில் இருந்தே அதன் சமயோஜித சக்தி என்னவென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவை கூட்டமாக வாழும் தன்மை கொண்ட உயிரினமாகும். எனவே, இதனை சமூகப் பிராணி என்று கூட அழைக்கலாம். ஒன்றுடன் ஒன்று ஒத்துமையாக செயல்பட்டு, தங்களுக்கான உணவுத் தேவையையும், வசிப்பிடத் தேவையையும் இவை நிறைவேற்றிக் கொள்கின்றன. எறும்புகளில் நமக்குத் தெரிந்தது சில வகைகள்தான். ஆனால் எறும்புகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. நம் வசிப்பிடங்களில் இருக்கும் எறும்புகளைத் தவிர ஏனைய எறும்பு வகைகள் காட்டிலும், மனிதர்கள் வசிக்காதப் பகுதிகளிலும் வசிக்கின்றன. எறும்புகள் முட்டையிடும் வகையைச் சேர்ந்தவையாகும். எறும்புகளின் உடல் அமைப்பு மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கும். இவற்றிற்கு நுரையீரல் கிடையாது. தோல் வழியாகவே சுவாசிக்கின்றன. இவற்றின் ரத்தம் நிறமற்றதாகும். பொதுவாக எறும்பு முட்டையில் இருந்து வெளி வந்தது முதல் சில மாதங்கள் வரைதான் உயிர் வாழும். ஆனால் சில வகை எறும்புகள் உள்ளன. அவை 30 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும் தன்மை கொண்டவையாக இருக்கும். எறும்புகளின் தலைப்பகுதியில் ஆன்டெனா என்ற உறுப்பு உள்ளது. இதன் மூலம் ஒலி, சுவை, வாசனை மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றை அறிகின்றன.
எறும்புகள் ஒன்றைப் பின்பற்றி ஒன்றாக செல்லும் சுபாவமுடையவை. இவை புற்றுகளைக் கட்டி வசிக்கும் பழக்கம் உடையவை. சில வகை எறும்புகள் 15 அடி உயர புற்றுகளைக் கூடக் கட்டும் திறன் வாய்ந்தவை. எறும்புகளுக்கு கண்கள் மிகத் துல்லியமாகத் தெரியும். மேலும் உழைப்பதில் எறும்புகளுக்கு ஈடு இணை எதுவும் வராது. சொல்லப் போனால் எறும்புகள் அதன் எடையைப் போல 20 மடங்கு எடையைக் கூடத் தூக்கிச் செல்லும் திறன் பெற்றிருக்கும். எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது பழமொழி. அதாவது ஒருக் கல்லில் தொடர்ந்து எறும்புக் கூட்டங்கள் சென்று கொண்டிருந்தால், அவ்வழியில் கல் தேய்ந்து போய்விடும் என்று கூறப்படுகிறது. அப்படியிருக்க மனிதனால் முடியாதது என்று உலகில் எதுவும் இல்லை. எறும்பைப் போல் எப்போதும் சுறுசுறுப்பாகவும், முயற்சியுடனும் வாழ்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.
செயலியில் பார்க்க x