கிரீடம் வெட்கி தலை குனிந்தது

செவ்வாய், 14 ஜூலை 2009 (16:22 IST)
வாசு‌கி பா‌ட்டி ஒரு புராண‌க் கதை சொ‌ல்ல இ‌ன்று வ‌ந்‌திரு‌க்‌‌கிறா‌ர்.

கே‌ட்போமா...

ஒரு சமயம் வைகுண்டவாசனான திருமாலின் தலையில் இருந்த கிரீடம், அவரது பாத அணிகளைப் பார்த்து ஏளனம் செய்தது.

நான் திருமாலின் தலை மீது அமர்ந்திருக்கிறேன், நீயோ அவரது காலடியில் கிடக்கிறாய். அதுமட்டுமல்லாமல், மானிடர்கள் கூட அவர்களது வீட்டிற்குள் உன்னை அனுமதிப்பதில்லையே? வீட்டுக்கு வெளியேதான் விட்டுவிட்டு செல்கிறார்கள்.

ஆனால் என்னைப் போன்ற கிரீடங்களை மிகவும் பாதுகாப்பான இடத்திலும், தகுதியான இடத்திலும் அமர வைக்கிறார்கள். உன்னைப் போன்று வெளியே போட மாட்டார்கள் என்று கூறி பாத அணிகளை எள்ளி நகையாடியது கிரீடம்.

பாவம் செருப்புகள், எம்பெருமான் நடக்கும்போது அவைகள் அழுதன. அதைக் கேட்ட திருமால், எனது பாதங்களைப் பாதுகாத்து வரும் பாதுகைகளே, உங்களுக்கு ஏற்பட்ட துக்கம் என்ன என்று கேட்டார்.

அதற்கு, பாதுகைகளும், தங்களது குறைகளைக் கூறின.

குறைகளைக் கேட்ட திருமால், இதற்கா நீங்கள் அழுகிறீர்கள்? கவலையை விடுங்கள். நான் ராம அவதாரத்தின் போது உங்களை 14 ஆண்டுகள் அரியாசனத்தில் அமர வைத்து அரசாட்சி செய்யும்படி செய்கிறேன் என்று வாக்களித்தார்.

அதன்படியே, ராம அவதாரம் எடுத்து, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்ட போது, பரதன் ராமரின் பாதுகைகளை பெற்று, அவற்றை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்தான். அப்போது பாதுகைகள் தங்களது நிலையை எண்ணி மகிழ்ந்தன.

ஒவ்வொரு நாளும் பரதன் சிம்மாசனத்தின் முன்பு அமர்ந்து பாதுகைகளை வணங்கிய போது, அவனது தலையில் இருந்த கிரீடம் வெட்கி தலை குனிந்து தனது தவறுக்கு மானசீகமாக வருந்தியது.

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், எவரையும் இழிவாக எண்ணிப் பேசக் கூடாது. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பதுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்