குழந்தைகளா இன்று வாசுகிப் பாட்டி ஒரு நல்லக் கதையை உங்களுக்காக கூற வந்துள்ளேன். அதாவது, இறைவன் எங்கும் இருக்கிறார் என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இந்தக் கதை. இது ஒரு இறை நம்பிக்கை திணிப்பு என்று யாரும் கருத வேண்டாம். ஏன் என்றால், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற பயத்தால்தான் பலரும் தவறு செய்ய பயப்படுகிறார்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே ஒரு நல்ல விஷயத்தை இருக்கிறது என்று நம்புவதில் எந்த தவறும் இல்லையே?
சரி கதைக்கு வருவோம், காடு என்றால் முயல், கரடி, நரி, புலி, சிங்கம் என பலவும் வாழும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு காட்டில் ஒரு நாள் நரி ஒன்று, தனது இரைக்காக முயலைத் துரத்தியது. நரியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று பாய்ந்து ஓடி வந்தது முயல்.
இருபுறமும் புதர் மண்டிக் கிடந்த பகுதிக்குள் சட்டென மறைந்து கொண்டது. மிக வேகமாக ஓடி வந்ததால் அதன் சுவாசச் சத்தம் அதிகமாகக் கேட்டது. அதன் நிலையை நினைத்து வருந்தியது. இப்படி ஒவ்வொரு நாளும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோமே? இது என்ன வாழ்க்கை என்று வெறுப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஆண்டவனே, என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்? உயிர்ப் பயம் காட்டிக் காட்டி என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக வதைக்கிறாயே, இது நியாயமா? நான் நிம்மதியாக வாழவே முடியாதா? நீ எங்கும் நிறைந்திருப்பது உண்மையானால், என்னை விடாது துரத்தி வரும் அந்த பாழாப்போன நரியிடம் இருந்து காப்பாற்று என கண்ணீர் மல்க மனம் உருகி வேண்டியது. அதன் வேண்டுதல் எவ்வித சந்தேகமும் இல்லாமல், நம்பிக்கையுடன் அமைந்தது.
அதேசமயம் முயலைத் துரத்திக் கொண்டு வந்த நரி, புதரில் இருந்து லேசான அசைவுகள் ஏற்படுவதைக் கண்டு, ஏளனக் குரலில், "என்ன கோழை முயலே.. இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கிறாயா? மரியாதையாக வெளியே வந்துவிடு. கோழைப்பயலே! நீயாக வெளியே வருகிறாயா அல்லது நான் உள்ளே வரட்டுமா? என கொக்கரித்தது நரி.
"உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா, என்னை கோழை என்று சொல்வாய்... முதலில் உன்னை போக வேண்டிய இடத்திற்கு அனுப்புகிறேன் என்று கர்ஜித்தபடியே நரி மீது பாய்ந்தது. அதைச் சிறிதும் எதிர்பார்க்காத நரி, தப்பி ஓட முற்பட்டது. ஆனால் பலன் ஒன்றும் இல்லை...
அதைக் கண்ட முயல், எங்கும் நிறைந்திருக்கும் இறைவன், இந்த புலியின் வடிவில் வந்து என்னைக் காப்பாற்றி விட்டான். இறைவா, உனக்கு என் நன்றிகள் என்று கூறியபடி தன் இருப்பிடம் நோக்கி மகிழ்ச்சியோடு ஓடியது.