தியா மூணாவது படிக்கும் பொண்ணு. அவள் எப்பவும் நல்ல மார்க் வாங்குவா. விளையாட்டுலயும் சுட்டி. துறுதுறுன்னு இருப்பா. அதனால எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்.
ஆனா அவகிட்ட ஒரு கெட்ட பழக்கம். கோவம் வந்தா கையில இருக்கற பொருள் எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைப்பா. வீட்டுல இருக்கற விளையாட்டு பொருட்கள், காமிரா, சி.டி.பிளேயர், ஹால்ல இருக்கற சாமி படங்கள்ன்னு எல்லாத்துலயும் அவ கோவத்தோட கைவண்ணம் இருக்கும். ஒருமுறை டி.வி.யக் கூட உடைக்கப் போனா. அம்மா தடுத்துருக்கலேனா அன்னைக்கும் டி.வி. போயிருக்கும்.
இதனால, அவங்க அம்மா, அப்பாவுக்கு ரொம்ப கவலை. தியாகிட்ட சொல்லி பார்த்தாங்க. அந்த நேரத்துல கேட்டுப்பா. ஆனா, கோவம் வந்தா எல்லாம் மறந்து போயிடும். அம்மா கவலையோட சாமிகிட்ட ‘தியாவோட கோபத்தை தீர்த்துவை சாமி’ ன்னு சாமிகிட்ட அடிக்கடி கேட்டுப்பாங்க. குழந்தைங்களுக்குப் பிடித்த சாமி, தும்பிக்கை கொண்ட பிள்ளையார் தானே? அதனால, பிள்ளையாரும் நல்ல சமயம் பார்த்துக்கிட்டு இருந்தார்.
ஒருநாள் ராத்திரி, தியா தூங்க போனா. அதுக்கு முன்னாடி வழக்கம் போல பிள்ளையார வேண்டிக்கிட்டா. அன்னிக்கு அவ வீட்டு வாசலுக்குப் பிள்ளையார் வந்தார். வந்ததும், தியாவ வெளியே வான்னு கூப்பிட்டார். தியாவும் அவர் பின்னாடி போனாள்.
“என்ன எங்க கூட்டிட்டு போற சாமி…” அப்படின்னு கேட்டா. எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னார் பிள்ளையார். தியாவுக்கு ஒரே சந்தோஷம். பிள்ளையார் வீடு கைலாசத்துலதானே இருக்கு. அங்க சிவன் - பார்வதியும் இருப்பாங்க. சிவன் கழுத்துல பாம்பும் இருக்கு. பிள்ளையார்கிட்ட மூஞ்சுறுவும் இருக்கு. அதுவுமில்லாம, கைலாசத்துல புகையெல்லாம் போட்டு அழகா இருக்கும். நந்தி மாதிரி ஆளுங்களும் இருப்பாங்க. தியா இதெயெல்லாம் டி.வி.ல பார்த்துருக்கா. அதனால ரொம்ப சந்தோஷமா கிளம்பினா.
பிள்ளையார், தியாவ தன்னோட தும்பிக்கையில வைத்துக்கொண்டு, வேகமா பறந்தார். அப்போ அவங்க எதிர்ல ஒரு பெரிய பூதம் வந்துச்சு. அத பார்த்ததும் தியா பயந்துட்டா. அந்த பூதத்துக்கு பல்லெல்லாம் அசிங்கமா இருந்துச்சு. ஒரு கண்ணுதான். பெருசா வேற இருந்துச்சு. அது இவங்க ரெண்டு பேரையும் பார்த்து வேகமா வந்துச்சு.
தியா பயந்து போயிட்டா.
தும்பிக்கைய கெட்டியா பிடிச்சுண்டா. பூதம் பக்கத்துல வந்துச்சு. “இவ உன் ஃப்ரெண்ட் இல்ல. என் ஃப்ரெண்டு. அவளை விடு”ன்னு பிள்ளையார்கிட்ட கத்திச்சு பூதம்.
“அதெல்லாம் இல்ல. என் ஃப்ரெண்டு”ன்னார் பிள்ளையார்.
“இல்ல, கோவம் வந்தா அவ என்ன வேணும்னாலும் பண்ணுவா. கோவம் வர்றவங்க எனக்குதான் ஃப்ரெண்டு. அதுவுமில்லாம, அவளுக்கு உன்ன புடிக்காது. பாரு, அவ உடைச்ச உன் படத்தோட துண்டு”ன்னு பூதம் காட்டிச்சு. பூதம் கையில தியா போன வாரம் உடைச்ச பிள்ளையார் படத்தோட துண்டு இருந்தது.
தியா அழ ஆரம்பிச்சா. அப்படியே பிள்ளையாரைப் பார்த்து ‘என்ன காப்பாத்து’ன்னு சொன்னா. பிள்ளையார் அவள பிடிச்சுண்டு, “இல்ல இவ நல்லவ. கோபத்துலதான் அப்படி பண்ணுவா. மத்தபடி நல்லா படிப்பா. நல்லா விளையாடுவா. தினமும் என்ன வேண்டிப்பா. அதோட அவ உன்ன பார்த்தாலே பயப்படறா. அதனால அவ எனக்குதான் ஃப்ரெண்டு”ன்னு சொன்னார்.
பூதம் கேக்கல. பிள்ளையார் தும்பிக்கையிலேர்ந்து தியாவ பறிச்சுச்சு. ரெண்டு பேரு சண்டை போட ஆரம்பிக்க, தியா வானத்துலேர்ந்து ‘தொபுகடீர்’னு கீழே விழுந்தா. ‘அம்மா….’ன்னு கத்தினா.