ஒரு நாள் தெனாலிராமன் வீட்டிற்கு அண்டை நாட்டு ஒற்றன் ஒருவன் (மன்னர் கிருஷ்ண தேவராயரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவன்) வந்தான். அவன் தெனாலிராமனிடம், தான் ஏதோ ஒரு வழியில் உறவு என்று சொல்லிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
அப்படி ஒரு உறவு தனக்கில்லை என்று சந்தேகம் கொண்டாலும், அவனை வீட்டில் தங்க சம்மதித்தான் தெனாலிராமன்.
ஒரு நாள் தெனாலிராமனும் அவன் குடும்பத்தினரும் உறவினர் வீட்டுத் திருமணத்துக்காகப் பக்கத்து ஊர் சென்று விட்டனர். அப்போது அந்த ஒற்றன் தெனாலிராமன் எழுதுவது போலவே ஒரு கடிதம் மன்னருக்கு எழுதி இல்லத்துக்கு வந்தால் ஒரு அதிசயம் காண்பீர்கள் என்று தெரிவித்திருந்தான்.
அந்த கடிதம் உண்மைதான் என்று எண்ணிய மன்னரும் தெனாலிராமன் வீட்டிற்கு விரைந்து வந்தார். உள்ளே நுழையும் சமயம் அந்த ஒற்றன் மன்னரைக் கொல்ல வாளை ஓங்கினான். உடனே மன்னர் வாளை மறித்து அந்த ஒற்றனையே கொன்று விட்டார். போரில் எத்தனை எதிரிகளின் தலையை வெட்டி வீழ்த்தும் மன்னர், ஒருவனிடம் அகப்பட்டு சாவது எளிதா என்ன?
தெனாலிராமன் தான் மன்னரைக் கொல்ல இவ்வாறு சூழ்ச்சி செய்தான் என்று மன்னர் உட்பட அனைவரும் நம்பினர்.
இது குறித்து தெனாலிராமனை அழைத்து விசாரித்தனர். இதில் தனக்கு எந்த விதத்திலும் பங்கு இல்லை என்று பலவாறு மன்றாடிப் பார்த்தான் தெனாலி. பலன் இல்லை. இறுதியில் தெனாலிராமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
webdunia photo
WD
மன்னரும் தெனாலிராமனை அருகில் அழைத்து, நீ எவ்வாறு சாக விரும்புகிறாய் என்று கூறு. உன் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.
அதற்கு தெனாலிராமன் நான் வயதான பிறகு கிழவனாக சாக விரும்புகிறேன் என்றான்.
இதைக் கேட்டதும் மன்னர் நகைத்துவிட்டார். பின் இப்போதும் உன் சாமர்த்தியத்தால் தப்பி விட்டாய் என்று மனதாரப் பாராட்டினார். உண்மையை தெனாலிராமன் மூலமாக கேட்டறிந்து கொண்டார்.