சிறு, குறு தொழில்களுக்கு உடனே கடன் பெறலாம்! – பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)

வியாழன், 9 ஜூன் 2022 (18:26 IST)
சிறு, குறு தொழில்கள், அமைப்பு சாரா தொழில் செய்பவர்கள் எளிதில் கடன் பெற உதவும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் குறித்து காண்போம்.

இந்தியாவில் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர் உள்ள நிலையில் அவர்களது வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டதுதான் இந்த பிரதம மந்திரி முத்ரா யோஜனா (Prime Minister Mutra Yojana). இந்த திட்டத்தின் மூலம் மூன்று வகையான கடனுதவிகள் மூலம் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை கடன் பெறலாம்.

முத்ரா (MUTRA - Micro Units Development and Refinance Agency) மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது அரசின் மூலம் வங்கிகளில் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

ரூ.10 லட்சத்திற்கு குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில்கள், அமைப்புசாரா உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடமை வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக இந்த கடன் வழங்கப்படுகிறது.

முத்ரா கடன் வகைகள்:

மூன்று விதமான வகைகளில் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. நீங்கள் மேற்கொள்ளும் அல்லது மேற்கொள்ள உள்ள தொழிலுக்கான திட்டப்பட்டியலை கொண்டு வங்கி மேலாளர் எந்த வகையில் கடன் வழங்குவது என்பதை முடிவு செய்வார்.

சிசு (SISHU) திட்டத்தின் மூலமாக ரூ.50 ஆயிரம் வரை கடனுதவியும், கிஷோர் (KISHOR) திட்டத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கடனுதவியும், தருண் (TARUN) திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடனுதவியும் பெறலாம்.

யாரெல்லாம் இந்த கடன் பெறலாம்?

பலவகையான சிறு, குறு மற்றும் நடுத்தொழில் அமைப்புகளும் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உதாரணமாக சிற்றுண்டி கடைகள், காய்கறி பழக்கடைகள், தேநீர் விடுதி, பேக்கரி போன்றவற்றை அமைக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏஜெண்சி அமைப்பது தன்னுடைய தொழில் மூலப்பொருட்களை எடுத்து செல்ல வாகனம் வாங்குவது, ஏற்கனவே உள்ள கடையை மேம்படுத்த போன்ற தேவைகளுக்கும் கடன் பெறலாம், பண்ணை சார்ந்த தொழில்களுக்கு இந்த கடனுதவியில் கடன் பெற இயலாது.

கடன் பெற எப்படி விண்ணப்பிப்பது?

இந்த திட்டத்தில் கடன் பெற அருகில் உள்ள வங்கி கிளையை அணுகி இதற்கான முத்ரா படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://www.mudra.org.in/Home/PMMYBankersKit இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வங்கி கிளையில் அளிக்கலாம்.

இந்த திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் அளிக்கப்படாது. இந்த திட்டத்தில் கடன் பெறுபவர்கள் 12 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்கப்படும். இதற்கான மாதம்தோறும் பணம் செலுத்தும் EMI முறை கணக்கீட்டையும் வங்கி தெரிவிக்கும். அதற்கு முன்பாக விண்ணப்பத்தை வழங்கும்போது தொடங்கவிருக்கும் தொழிலின் திட்ட அறிக்கையை வங்கிக்கு வழங்க வேண்டும். அதை கொண்டு எவ்வளவு கடன் வழங்கலாம் என்று வங்கி மேலாளர் நிர்ணயிப்பார்.

விண்ணப்பத்துடன் அடையாள சான்று, இருப்பிட சான்று, புகைப்படம், உபகரணங்கள் வாங்குவதாக இருந்தால் அதற்கான ரசீது, சப்ளையர் விவரங்கள், சாதி சான்று உள்ளிட்ட விவரங்களை இணைக்க வேண்டும். மேலும் வங்கிகளை பொறுத்து வேறு சில ஆவணங்களும் கேட்கப்படலாம்.

முத்ரா கடன் கிடைத்தவுடன் பயனாளருக்கு முத்ரா கடன் அட்டை வழங்கப்படும். அந்த அட்டையை பொருட்கள் வாங்க கிரெடிட் கார்டு போல பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கார்டு மூலம் அதிகபட்சம் ரூ.10 ஆயிடம் வரை பயன்படுத்தலாம்.

மேலும் தகவல்களுக்கு https://www.mudra.org.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்