இந்தியாவில் கொரோனாவிற்கு பின் ஓடிடி தளங்களில் வளர்ச்சி வேகமாக அதிகரித்துள்ளது. பலரும் திரைப்படங்கள், வெப்சிரிஸ்களை வீட்டில் இருந்தபடியே காண விரும்புவதால் ஏராளமான ஓடிடி தளங்கள் பல இணைய தொடர்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் ஜியோ நிறுவனத்தின் ஜியோ சினிமா ஓடிடி தளமும் பல வெப் சிரிஸ், திரைப்படங்களை வழங்கி வருகிறது. ஐபிஎல் இலவச ஒளிபரப்பு மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஜியோ சினிமா சமீபத்தில் HBO Max உடன் ஒப்பந்தம் செய்து கேம் ஆப் த்ரோன்ஸ், ட்ரூ டிடெக்டிவ், ஹவுஸ் ஆப் ட்ராகன் உள்ளிட்ட பல தொடர்களை ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
தற்போது சிறுவர்கள், இளைஞர்கள் இடையே அனிமே தொடர்கள் பிரபலமாகி வரும் நிலையில் பல ஓடிடி தளங்களும் ஜப்பானிய அனிமே தொடர்களை தங்கள் ஓடிடியில் ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஜியோ சினிமாவும் 30க்கும் மேற்பட்ட அனிமே தொடர்களை தனது ஓடிடியில் ஒளிபரப்புவதற்கு உரிமம் பெற்றுள்ளது.
அதன்படி டீமன் ஸ்லேயர், ஸ்பை ஃபேமிலி, டோக்கியா ரிவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பிரபலமான அனிமே தொடர்கள் முதல், ஜிஞ்சி இடோவின் அமானுஷ்ய அனிமே தொடர்கள் வரை பல தொடர்களை ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. இதில் மிகவும் வக்கிரமான காட்சிகள் உள்ள அனிமே தொடர்கள் சென்சார் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.