அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள்

திங்கள், 8 டிசம்பர் 2008 (19:36 IST)
இதுவரை எத்தனையோ வித்தியாசமான விஷயங்களை இந்த நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களுக்கு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை உங்களுக்கு அளித்ததிலேயே மிக வித்தியாசமான ஒரு சம்பவத்தை இந்த வாரம் உங்களுக்கு அளிக்கிறோம்.

பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதனும், விலங்குகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் தாங்கள் வளர்க்கும் வீட்டு பிராணிகள் மீது அளவு கடந்த அன்பைப் பொழிவார்கள். இதில் ஒரு சில சமயங்களில் ஒரு சில மனிதர்கள் தங்கள் வளர்ப்புப் பிராணிகள் மீது கொண்ட அன்பினால், வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அது எல்லோரையும் கவரும் விதத்தில் அமைந்து விடுகிறது.

நாயும், பூனையும் ஒன்றுக்கொன்று விரோத போக்குக் கொண்ட விலங்குகள் என்றுதான் நாம் அறிவோம். ஆனால் ஒரு நாய் தனது குட்டிக்கு சமமாக ஒரு பூனையையும் வளர்த்தது என்று சொன்னால் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்த ஒரு குடும்பத்தில் பில்லு என்ற நாய் வளர்க்கப்பட்டு வந்தது. அதற்கு ஒரு குட்டியும் உண்டு. ஒரு நாள் அந்த வீட்டின் அருகே பில்லுவின் முகச் சாயலைக் கொண்ட பூனைக் குட்டியைப் பார்த்த வீட்டின் எஜமானர், அதனை வீட்டிற்கு கொண்டு வந்தார். பூனைக்கு நான்சி என்று பெயரிட்டனர்.

webdunia photoWD
ஆனால், இந்த பூனையைப் பிடிக்காமல் பில்லு ஒரு வேளைபூனையைக் கொன்று விடுமோ என்று கூட பயந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக பில்லு தனது பப்பிக்கு அடுத்தபடியாக நான்சியிடம் அதிகப் பிரியமாக இருந்தது.

அவ்வளவு ஏன் பில்லு, நான்சிக்கும் பால் கொடுத்தது என்பதுதான் மிகுந்த ஆச்சரியமே. நாயின் பாலை பூனை குடிப்பதால் பூனைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது பற்றி வீட்டின் எஜமானர் கால்நடை மருத்துவரிடமும் ஆலோசனை செய்தார்.

ஆனால் இந்த பாசப்பிணைப்பு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. 10 மாதத்திலேயே அந்த பூனை இறந்துவிட்டது. குடும்பமே சோகத்தில் மூழ்கியது. அப்போதுதான் ஒரு புதிய நாடகம் துவங்கியது.

இறந்த பூனைக்கு மனிதர்களைப் போல இறுதிச் சடங்கு நடத்துவது என்று அந்த குடும்பம் முடிவு செய்தது. இறுதிச் சடங்கு என்றால் சாதாரணமாக அல்ல, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பூனையின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

விலங்குகள் மீது கருணையும், அன்பும் காட்டப்பட வேண்டும் என்பது உண்மையான விஷயம்தான். ஆனால், அந்த அன்பைக் காட்டுவதற்கு இது போன்ற வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவது அவசியமா? சிலர் ஒரு விளம்பரத்திற்காகவே விலங்குகள் மீது அன்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள்.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், எங்களுக்கு எழுதுங்கள்.

புகை‌ப்பட‌த் தொகு‌ப்பு