உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா - பாகிஸ்தான் அணிகளிடம் பலத்தைக் காட்டும் மழை
சனி, 15 ஜூன் 2019 (21:21 IST)
கடந்த இரண்டு தினங்களாக கடும் பயணம் செய்து வருகிறேன். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு, கண்டங்களை கடந்து மற்றும் உலகக் கோப்பை போட்டி நடத்திய இரண்டு நாடுகளுக்கு இடையில் என ஒரு நீண்ட பயணம்.
இது மிகவும் களைப்பானதாக உள்ளது. ஆனால் கிரிக்கெட் உங்கள் கனவாக இருக்கும்பட்சத்தில் அது எதுவுமே பெரிதாக தோன்றாது. இன்று நாட்டிங்காமில் இருந்து மான்செஸ்டருக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டிக்காக செல்கிறேன்.
ஓல்ட் ட்ரஃபோர்டில் இந்தியா பாகிஸ்தான் அணியை ஞாயிறன்று எதிர்கொள்கிறது. ஆனால் இரண்டாம் நாளாக இந்த வானிலை என்னை சிறிது ஏமாற்றம் அடைய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
இன்று நான் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் திடீரென மும்பையில் இருப்பது போன்றும், மழைக்காலம் தொடங்கிவிட்டது போன்றும், சிறிது நேரம் உணர்ந்தேன். அதன்பின் சட்டென இது மும்பையில்லை நாட்டிங்காம் என்று உணர்ந்தேன்.
நேற்றிலிருந்து நாட்டிங்காமில் மழை பெய்து கொண்டுதான் வருகிறது. மான்செஸ்டருக்கு செல்ல நான் ரயில் ஏறியபோது என்னுடன் இந்திய குடும்பம் ஒன்று பயணிப்பதை பார்த்தேன். அகில், ஜோதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறும் போட்டியை காண வந்துள்ளனர்.
அகில் தான் எனக்கு அந்த நல்ல செய்தியை சொன்னார். ஆம். மான்செஸ்டரில் மழை இல்லை என்று. அவர் சொல்லவில்லை மகிழ்ச்சியில் சிறிது அதிக சத்தத்துடனே கத்தினார் என்று சொல்லவேண்டும்.
உலகக் கோப்பை போட்டிகளுக்கு மழை ஒரு பெரும் இடையூராகத்தான் இருந்து வருகிறது. மழையால் போட்டிகள் ரத்தாவது குறித்து ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றே கூற வேண்டும்.
நானும் அகிலும் மகிழ்ச்சியில் பேசிக் கொண்டிருப்பதை தடுப்பது போன்றே இருந்தது கெவினின் செய்தி. ஆம். பிரிட்டனை சேர்ந்த கெவின், மெல்லிய குரலில், "இன்றைக்கு மழையில்லை என்பது குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு புரிகிறது. ஆனால் நாளை மழை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது," என்றார்.
ஞாயிற்றுக் கிழமை 2 மணிக்கு மேல் மழை வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது என்றார். அவ்வளவுதான். அகில் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் நம்பிக்கை அனைத்துமே சட்டென மறைந்து விட்டது.
அதன்பின் எட்டு மணி நேரங்களுக்கு பிறகு அதே மாதிரியான உணர்வை நான் காண நேர்ந்தது. இன்று மழை பெய்யவில்லை என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
வானிலை கணிப்புகள் பொய்யாகி போகும் என்ற நம்பிக்கையே இங்கு உள்ளது. தவறான நேரத்தில் தவறான இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு சமூக வலைத்தளங்களில், ஐசிசியை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால் இது ஏன் இங்கிலாந்தில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியமானது.
கெவின்தான் எனக்கு இந்த யோசனையை வழங்கினார். எனவே இன்று அதனை நான் செயல்படுத்த முடிவு செய்துவிட்டேன்.
இங்கிலாந்து ஒரு தீவு நாடு. அது நான்கு வேறு பிராந்தியங்களால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் ஆர்க்டிக், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல், கிழக்கில் ஐரோப்பா மற்றும் தெற்கில் ஆப்ரிக்க மழைக்காடுகள். எனவே வெவ்வேறு பகுதியில் இருந்து வரும் பலதரப்பட்ட காற்று இங்கிலாந்து முழுவதும் வீசும். அது ஒன்றோடு ஒன்று உரசி வானிலையை கணிக்க முடியாதபடி செய்கிறது.
இங்கிலாந்தில் தற்போது வெயிற்காலம் ஆனால் மேற்கு மற்றும் வடக்கிலிருந்து வரக்கூடிய காற்று ஒன்றோடு ஒன்று சேர்ந்து வானிலையை குளிர்ச்சியாக்குவதுடன் மழையையும் பொழியச் செய்கின்றன.
உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் என்ன பருவமாக இருந்தாலும், இங்கிலாந்தில் அடிக்கடி மழை வரும், அதனால் இங்கு மக்கள் பெரும்பாலும் எந்த சமயத்திலும் குடை எடுத்து செல்கின்றனர்.
ஞாயிறன்று மழை பெய்யுமா?
தற்போது மான்செஸ்டரில் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமையும் மழை பெய்யும் என்னும் வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் முக்கியமாக ஞாயிறு காலையும், மதியமும் மழை பெய்யாது என்று கூறப்பட்டுள்ளது ஆனால் ஞாயிறன்று மதியம் இரண்டு மணிக்கு மேல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தூரலா கடும் மழையா என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.
கார் ஓட்டுநரான ஷாஹித் ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார். அவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் அவரின் குடும்பம் இஸ்லாமாபாத்தை பூர்விகமாக கொண்டது. "ஐசிசி போட்டியை நிறுத்தும் முடிவை எடுக்கக்கூடாது. ஐம்பது ஓவர்களில் இல்லை என்றாலும் 20 ஓவர் போட்டியாவது நடத்தப்பட வேண்டும்." என்றார் ஷாஹித்
போட்டி தடைபடாமல் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் விரும்பமாகும். ஆனால் தற்போது மான்செஸ்டரில் மழைதான் தனது பலத்தை காட்டிக் கொண்டிருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் வெற்றிகரமாக நடப்பது மழையின் கையில்தான் உள்ளது.