இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு மிக்கதா கத்தார்?
புதன், 8 ஜூன் 2022 (14:33 IST)
இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துகள் இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன.
முகமது நபிகள் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் பட்டியலில் கத்தார் முன்னணியில் நிற்கிறது. இந்தியா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கத்தார் வலியுறுத்தியுள்ளது. இந்தியத் தூதரை அழைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.
"இத்தகைய இஸ்லாமிற்கு எதிரான வெறுப்பு கருத்துகளுக்கு தண்டனையே வழங்காமல் அவற்றை தொடர அனுமதிப்பது, மனித உரிமைகள் பாதுகாப்பு மீதான கடும் ஆபத்துகளை ஏற்படுத்தும்", என கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முரண் இரு நாடுகளின் உறவில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சில கேள்விகள் வாயிலாக புரிந்து கொள்ள முடியும்.
கத்தாரின் முக்கியத்துவம் என்ன?
உலக வரைபடத்தில் சிறிய இடத்தைப் பிடித்திருக்கும் கத்தாரின் ஒட்டுமொத்த பரப்பளவு 11,437 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 25 லட்சமாக இருந்தாலும், அதில் பெண்களின் எண்ணிக்கை 7 லட்சம் மட்டுமே.
இதற்கு காரணம் கத்தாரில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் வருகின்றனர். தற்போது கத்தாரின் மக்கள் தொகையில் 90% வெளிநாட்டினரே. பெட்ரோலிய வளமும், அரசியல் செல்வாக்கும் கத்தாருக்கு சர்வதேச முக்கியத்துவத்தை வழங்குகின்றன.
கத்தாருடனான இந்திய உறவு எப்படி இருக்கிறது?
இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்வதில் கத்தார் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) அதிகமாக வழங்கும் நாடு கத்தார் என்று இந்தியத் தூதரகத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையே வலுவான வர்த்தக மற்றும் அரசுமுறை உறவுகள் உள்ளன. 2021-22 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையே 15 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான வர்த்தகம் நடந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி 2016 இல் தோஹாவுக்குச் சென்றபோது கத்தாரை தனது இரண்டாவது வீடு என்று விவரித்தார். 2017 ஆம் ஆண்டு சௌதி அரேபியா-கத்தார் நெருக்கடியின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவம் வெளிப்பட்டது.
கத்தாரில் எவ்வளவு எண்ணெய் வளம் இருக்கிறது?
இரான் மற்றும் ரஷ்யாவுக்கு பிறகு, மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளத்தைக் கொண்ட கத்தாரிடம் பெட்ரோலிய வளங்களும் அதிகமாகவே இருக்கிறது. கத்தார் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளது. ஒரு நாளைக்கு 850 ஆயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய், ஒரு நாளைக்கு 18 பில்லியன் கன அடி எரிவாயுவை கத்தார் உற்பத்தி செய்கிறது.
கத்தாரின் பொருளாதார நிலைமை என்ன?
கத்தாரின் தனிநபர் வருமானம் 124 முதல் 900 டாலருக்கு இடையில் உள்ளதை வைத்து அந்த நாட்டின் செல்வ நிலையை அறிந்து கொள்ளலாம். உலகிலேயே மிகவும் அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடு கத்தார் என்று உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் கூறுகின்றன.
இருப்பினும் கத்தாரின் வளங்கள் சமத்துவமானதாக இல்லை. முன்னாள் அரசரான ஷேக்-ஹமத்-பின்-காலிஃபா-அல்-தனியின் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டாலர்களாக இருந்த போதிலும் அங்கு குடிபெயர்ந்தவர்களை பிபிசி நேர்காணல் செய்த போது அவர்கள் மாதம் வெறும் 350 டாலர்கள் மட்டுமே சம்பாதிப்பதாக தெரிவித்தனர்.
ஆட்சியில் உள்ள அல்-தானி குடும்பத்தினர் பிரிட்டனில் மட்டும் 50 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆடம்பரமான, வானளாவிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள் முதல் ஒலிம்பிக் கிராமங்கள் வரை கத்தாரின் பரந்த செல்வம் உலகம் முழுவதும் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், 'த ஷார்ட்' என்ற லண்டனின் மிகப்பெரிய கட்டிடம், ஊபர் மற்றும் லண்டனின் ஹைரெட்ஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என கத்தார் அரசர் பல பெரிய அளவிலான முதலீடுகளை செய்திருக்கிறார்.
இதைத்தவிர, உலகின் மிகப் பெரிய நிறுவனங்களிலும் கத்தார் பங்குதாரராக இருக்கிறது.
லண்டனின் பிரபல உயரமான கட்டிடத்தில் `ஷார்ட்`இல் அல்-தானி குடும்பத்தினருக்கு 95 சதவீத பங்கு இருக்கிறது
கத்தாரின் சர்வதேச அரசியல் செல்வாக்கு என்ன?
உலகின் மிக முக்கியமான பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்யும் இடமாக இருக்கிறது கத்தார். இஸ்லாமிய நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளிலும் பங்கு வகிக்கிறது.
2008ல் ஏமன் அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கத்தார் மத்தியஸ்தம் செய்தது. 2008ல் லெபனானின் போரிடும் பிரிவுகளுக்கு இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தை, அதைத் தொடர்ந்து 2009ல் ஒரு கூட்டணி அரசு அமைய உதவியது.
2009ஆம் ஆண்டில், கிளர்ச்சியாளர்கள் பிரச்னையில் சூடான் மற்றும் சாட் இடையேயான பேச்சுவார்த்தையில் கத்தார் பங்கேற்றது. இதுமட்டுமல்லாமல், 2011 ஆம் ஆண்டில், தோஹா ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் தார்ஃபூர் ஒப்பந்தம், சூடான் அரசுக்கும் கிளர்ச்சி குழுவான லிபரேஷன் அண்ட் ஜஸ்டிஸ் இயக்கத்திற்கும் இடையே கத்தாரின் மத்தியஸ்தத்துடன் கையெழுத்திடப்பட்டது.
2012 ஆம் ஆண்டில், அமைதி மற்றும் இடைக்கால அரசை அமைப்பதற்கான ஹமாஸ் மற்றும் ஃபதாஹ் குழுக்களுக்கிடையிலான ஒப்பந்தத்தில் கத்தார் முக்கிய பங்கு வகித்தது.
தாலிபன்களுடனான பேச்சுவார்த்தையிலும் கத்தார் மத்தியஸ்தம் செய்து வைத்தது.
அல்-ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் மூலமாக அரபு நாடுகளில் செய்திகளை தரும் தனது முயற்சியால் பல மாற்றங்களை கத்தார் ஏற்படுத்தியது. அல்-அல்-ஜஸீராவின் மூலமாக கத்தார், உலகம் முழுவதும் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை உருவாக்கிக் கொண்டது.
உலகின் முக்கியமான விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் வளர்ந்திருக்கிறது என்பதும், 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அந்நாடு நடத்தவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.