செளதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது?
புதன், 12 ஆகஸ்ட் 2020 (23:55 IST)
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு செளதி அரேபியாவின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால், பாகிஸ்தான் செளதி அரேபியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது.
அண்மையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, "செளதி அரேபியா, காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக ஓஐசி எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை" என்று பகிரங்கமாக விமர்சித்தார்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது ஷா மஹ்மூத் குரேஷி, "வெளியுறவு அமைச்சர்கள் சபையின் கூட்டத்தை கூட்டுமாறு நான் மீண்டும் OIC ஐ கேட்டுக்கொள்கிறேன். நீங்கள்அதைத் திட்டமிடவில்லை என்றால், காஷ்மீர் பிரச்சினையில் எங்களுடன் இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை அழைத்து ஒடுக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் இம்ரான் கானிடம் நான் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பேன்" என்றார்.
"காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவை நீக்குவது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம்" என செளதி அரேபியா ஏற்கனவே தெரிவித்து விட்டது.
இருப்பினும், ஜூன் மாதத்தில் ஓஐசி வெளியுறவு அமைச்சர்களின் அவசர கூட்டத்தில், "2019, ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு, இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் மற்றும் அங்கு நிலவும் நிலைமை கவலை தருகிறது" என தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக 2019, ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்திய அரசு எடுத்த முடிவு குறித்து கூட்டத்தில் கூறப்பட்டது. புதிய குடியேற்ற நிபந்தனைகள் அமல்படுத்தப்பட்டன. இவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள், நான்காவது ஜெனீவா மாநாட்டு அம்சங்கள் உள்ளிட்ட சர்வதேச சட்ட விதிகளை மீறியுள்ளன.
அதே நேரத்தில், ஐ.நா பாதுகாப்புக்குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாடும் மீறப்பட்டுள்ளது. OIC இல் செளதி அரேபியா முக்கிய செல்வாக்கைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்த விமர்சனக் கருத்துக்களுக்குப் பிறகு, செளதி அரேபியா ஒரு பில்லியன் டாலர் கடனை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில், செளதி அரேபியா, பாகிஸ்தானுக்கு 3.2 பில்லியன் டாலர்களை கடனாகக்கொடுத்தது. அந்த கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படாததால், கடந்த மே மாதம் முதல் பாகிஸ்தானுக்கு எண்ணெய் விநியோகத்தை செளதி அரேபியா நிறுத்தியது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஊடகங்களும் ஷா மஹ்மூத் குரேஷியின் அறிக்கையை விமர்சிக்கின்றன, ஏனெனில் அந்த அறிக்கை காரணமாக, கடனை திருப்பித் தருமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் அதிகரித்தது.
பாகிஸ்தான் தொடர்பாக செளதி அரேபியாவின் அணுகுமுறையில், இது ஒரு பெரிய மாற்றம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
சமன்பாடுகளின் மாற்றம்
பாகிஸ்தானைப் பற்றிய செளதி அரேபியாவின் அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்காசியா ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய்பரத்வாஜ், "இது உலகளவில் நிகழும் மாற்றங்களாகவே பார்க்கப்பட வேண்டும்" என்கிறார்.
ஆசிய நாடுகளுக்கு இடையிலான சமன்பாடுகள் மாறுவதே இதற்குக் காரணம். அமெரிக்காவும் சீனாவும் ஆசிய நாடுகளில் தங்களது சமநிலைகளை வெவ்வேறு காரணங்களுக்காக உருவாக்குகின்றன.
"செளதி அரேபியா பாரம்பரியமாக அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது மேலும், இஸ்லாமிய நாடுகள் உலகில் ஒருவித ஆதிக்கத்தை செளதி அரேபியா கொண்டுள்ளது."
இப்போது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு புதிய பனிப்போர் போன்ற சூழ்நிலை நிலவும் போது, சீனா ஆசிய நாடுகளில் தனது செயல்பாடுகளின் மூலம் ஊடுருவமுயற்சிக்கிறது. அதற்கான புதிய சமன்பாடுகளை உருவாக்குகிறது.
"சீனா ஈரானுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்யப் போகிறது. குவாடர் துறைமுகம் மற்றும்சிபிஇசி எனப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகியவற்றிலும்பாகிஸ்தான் அதிக முதலீடு செய்கிறது. இந்த வழியில் பாகிஸ்தானும் இரானும் சீனாவுடன் நெருங்கி வருகின்றன. இது முதலீடு அல்லது புவிசார் அரசியல் உறவுகள் தொடர்பானது '' என்று அவர் கூறுகிறார்.
உண்மையில், இஸ்லாமிய உலகில் செளதி அரேபியாவுக்கு மாற்றாக சீனா உருவெடுக்கவிரும்புகிறது. இதற்காக அந்நாடு இரான், மலேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன்நெருங்கிய உறவுகளை வளர்க்கிறது.. மலேசியாவிலும் ஒரு பெரிய இஸ்லாமிய உச்சி மாநாடு நடந்துள்ளது. அதில், பாகிஸ்தானும் இரானும் பங்கேற்றுள்ளன, ஆனால், செளதி அரேபியா இடம்பெறவில்லை."
இது தவிர, 2013 -ல் சீனாவுடன் செய்து கொண்ட சுமார் 50 பில்லியன் டாலர் சிபிஇசி-யில் பாகிஸ்தான் அரசு செளதி அரேபியாவை 2018 இல் சேர்ப்பதாக அறிவித்தது. இது தொடர்பாக இம்ரான் கான் அரசு, எதிர்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் பின்னர் பாகிஸ்தான் அரசாங்கம் தனது முடிவை முழுவதுமாக மாற்றிக்கொண்டு, சிபிஇசி இரு தரப்பு ஒப்பந்தமாக இருக்கும் என்று தெளிவுபடுத்தியது.
கடந்த பல ஆண்டுகளில், வளைகுடா நாடுகளுடன், குறிப்பாக செளதி அரேபியாவுடன் இந்தியாவின் நெருங்கிய தொடர்பு அதிகரித்துள்ளது. இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,செளதி அரேபியா ஆகியவற்றுக்கு இடையிலான பொருளாதார உறவுகளைத் தவிர, இப்போது பாதுகாப்புக் கொள்கை தொடர்பாகவும் உறவுகள் ஆழமடைந்து வருகின்றன.
இரானும் ஒரு பிரச்சனை
"இந்த மாறிவரும் சமன்பாடுகளில் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இயற்கை பங்காளிகளாக மாறி வருகின்றன. செளதி அரேபியாவையும்இரானையும் ஒருபோதும் ஒன்றிணைக்க முடியாது. செளதி அரேபியா அமெரிக்காவுடன்இருப்பதால், அது இந்தியாவுக்கும் நெருக்கமாகி வருகிறது. உண்மையில், இந்த மாறிவரும்சமன்பாடுகள் உலக அளவில் நிகழும் மாற்றங்களின் விளைவாகும். " என்று பேராசிரியர்சஞ்சய் பரத்வாஜ் விளக்குகிறார்,
ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு நெருக்கமாக இருப்பதால் வளைகுடா நாடுகளின்சந்தையில் சீனா தனது நலன்களை சமரசம் செய்ய தயாராக உள்ளது.
வளைகுடா நாடுகளின் சந்தையில் சீனா அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்வது நிச்சயம்தான், ஆனால் புவிசார் அரசியலைப் பொருத்தவரை செளதி அரேபியாவை விட இரானும் பாகிஸ்தானும் முக்கியம். அமெரிக்காவின் செல்வாக்கிலிருந்து செளதி அரேபியாவை வெளியேற்ற சீனா நிச்சயமாக விரும்புகிறது. ஆனால் அது ஒருபோதும் பாகிஸ்தான் மற்றும் இரானை இழக்க விரும்பவில்லை. இது தவிர, பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் ஒன்றிணைக்க சீனாவும் முயற்சிக்கிறது என்று பேராசிரியர் சஞ்சய்பரத்வாஜ் கூறுகிறார்.
ஆசியாவில் அமெரிக்கா மற்றும் சீனாவின் மாறிவரும் சமன்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த விஷயத்தைப் பார்க்கவில்லை, செளதி அரேபியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் எந்தவொரு விரோத உறவும் தொடங்காமல் இல்லை என்றும், தற்போது இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுவதாக அவர்கள் நம்புவதாகவும் மூத்த பிபிசிஉருது பத்திரிகையாளர் சக்லைன் இமாம் கூறுகிறார்.
மாறிவரும் தற்போதைய சமன்பாடுகளில் இஸ்ரேல் மற்றும் இரானின் பங்கையும் கவனிக்க வேண்டும் என்று கூறும் அவர், "முதல் முறையாக, செளதி அரேபியாவில் மன்னர் ஒருவர் நீண்ட காலம்இருக்கப்போகிறார்." எனவே இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு, அமெரிக்கா அதன் உத்தியை எதிர்காலத்திற்கு ஏற்ப தீர்மானிக்கிறது. மறுபுறம், மன்னருக்கு எப்போதும் வெளிநாட்டு ஆதரவும் உள்ளூர் ஆதரவும் தேவை.
ஏனென்றால் பழங்குடி சமூகத்தில்உள்ளூர் மட்டத்தில் கிளர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே வெளிநாட்டு சக்தியின்ஆதரவு தேவை. அமெரிக்கா தற்போது இளவரசர் முகமது பின் சல்மானுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில், எதிர்காலம் தொடர்பான பாதுகாப்பின்மை உணர்வு நிலவுகிறது. இதற்கு முக்கியமாக இஸ்ரேல் மற்றும் இரான் காரணமாகும்" என்று அவர்கூறுகிறார்.
அவர் மேலும் கூறுவது என்னவென்றால் "இந்த நாடுகள் அனைத்தும் பரஸ்பர உறவுகளின்சமன்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கின்றன, இதன் பின்னணியில் இஸ்ரேலும் இரானும் உள்ளன."
அமெரிக்காவும் சீனாவும் அந்நாடுகளுக்கு பின்னால் உள்ளன. இவை அனைத்திலும், யார்மிக முக்கியமான பங்களிக்கிறார்கள் என்றால் அது இஸ்ரேல் தான். முகமது பின் சல்மான்வந்த பிறகு, இஸ்ரேலுடனான சவுதி அரேபியாவின் உறவு வரலாற்றில் மிகச் சிறந்தகட்டத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இதற்கு முன்பு அவ்வளவு சிறப்பாகஇருந்ததில்லை. ஆனால் இன்று இந்த இரு நாடுகளும் இரானுக்கு
எதிராகஒன்றுபட்டுள்ளன. இதன் மூலம், இஸ்ரேல் மிகவும் பயனுள்ள முஸ்லிம் நாடுகளில் ஒன்றான செளதி அரேபியாவின் ஆதரவைப் பெறுகிறது."
"முன்பு செளதி அரேபியா ஒரு வஹாபி நாடாக அடையாளம் காணப்பட்டது, ஒரு சுன்னி நாடு அல்ல, ஆனால், இப்போது அது ஒரு சன்னி நாடு என்று அடையாளம்காணப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இரானுக்கு எதிராக யார் இருந்தாலும், அதற்கு செளதி அரேபியா "கூட்டாளி" என்பதை மறைமுகமாக தெரிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இப்போது செளதி அரேபியா, இந்தியா, இஸ்ரேல் ஆகியவை ஒரு பக்கத்தில்உள்ளன. ஏனெனில் அது அமெரிக்காவுடன் உள்ளது. மறுபுறம், முஷாரப்பின் காலத்தில் இருந்து, பாகிஸ்தான் படிப்படியாக சீனாவுடன் நெருக்கமாகி வருகிறது. இந்த சமன்பாட்டை உருவாக்குவதில் இஸ்ரேல் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது, அது இரானுக்குஎதிரானது."
செளதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மாறிவரும் உறவைப் பற்றி அவர் கூறுகையில், அறுபதுகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் செளதிஅரேபியாவை பாதுகாத்ததாக கூறுகிறார்.
செளதி அரேபியாவுடனான ராணுவ உறவு இன்னும் நிறுவப்பட்டுள்ளது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், முகமது பின் சல்மான் தனது எதிர்காலத்தைப் பாதுகாக்க மேற்கு நாடுகளுடன் நெருக்கமாகி விட்டார், ஆனால் அவர் இன்றும் பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்றவில்லை.
எனவே, இந்த இரு நாடுகளுக்கும் இடையே நிச்சயமாக ஒரு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது, ஆனால் அது பகைமைக்குரிய விவகாரமாக இல்லை.