சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பது ஏன்?

புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:46 IST)
சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பதை நீக்க வேண்டும் என இந்து மதம் சார்ந்த கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்திருக்கும் கருத்து சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகிவருகிறது. ராஜாவின் தலையில் சிலுவைக் குறி வைப்பது எப்போது துவங்கியது?

சமீபத்தில் வீடியோ நேர்காணல் ஒன்றில் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பதை மாற்ற வேண்டுமெனக் கூறியிருந்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், "செஸ் காயின்களில் குறிப்பாக ராஜாவின் அடையாளமாக ஏன் சிலுவை வந்தது! சிவன் காலம்தொட்டே ஆடப்படும் ஆட்டத்தில் எப்படி ராஜாவின் அடையாளமாக சிலுவை வந்தது! மிஷனரிகளின் நரித்தனமான வேலையே இது!" என்றும் கூறியிருக்கிறார்.

அர்ஜுன் சம்பத்தின் இந்தக் கருத்து சமூகவலைதளங்களில் பரவலாக கேலிசெய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படும் சதுரங்க ஆட்டம், இங்கிருந்து பெர்ஷியாவுக்கும் (தற்போதைய ஈரான்) அங்கிருந்து பிற அரேபிய இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவியது. அங்கிருந்து ஸ்பெயினுக்கும் ஸ்பெயினிலிருந்து தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் இந்த ஆட்டம் பரவியது.

சதுரங்க விளையாட்டைப் பொறுத்தவரை, எல்லா விளையாட்டுகளைப் போலவும் அவையும் தொடர்ந்து மாறி வந்திருக்கின்றன. சதுரங்கக் காய்களின் உருவமும் தொடர்ந்து மாறியிருக்கிறது. இந்தியாவில் துவக்கத்தில் இந்த ஆட்டம் விளையாடப்பட்டபோது, காய்களுக்கு மிருகங்கள், மனிதர்களின் உருவங்கள் இருந்தன. ஆனால், அரேபிய நாடுகளில் இந்த ஆட்டம் பரவியபோது, அவை சிலைகளைப்போல கருதப்படக்கூடும் காய்கள் அரூப வடிவத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால், ஐரோப்பாவிற்கு ஆட்டம் பரவியபோது இந்தக் காய்களுக்கு மீண்டும் மனிதர்களின் உருவம் அளிக்கப்பட்டது.

12ஆம் நூற்றாண்டுவாக்கில், சதுரங்கத்தின் எல்லாக் காய்களுக்கும் ராஜா, ராணி, வீரர்கள் என மனிதர்களின் உருவம் கொடுக்கப்பட்டுவிட்டது. 13ஆம் நூற்றாண்டுவாக்கில், ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதிகளில், சதுரங்கக் காய்களின் வீரர்களுக்கு knight வீரர்களின் உருவம் அளிக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டுவாக்கில் சதுரங்க ஆட்டமும் அவற்றுக்கான விதிகளும் உலகம் முழுவதும் நிலைபெற்றுவிட்ட நிலையில், சதுரங்கக் காய்கள் அவை ஆடப்படும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் இருந்தன. பல சமயங்களில் இது குழப்பங்களையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், உலகம் முழுவதும் சதுரங்க ஆட்டதை விளையாடக்கூடிய வீரர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையிலான காய்களை லண்டனைச் சேர்ந்த 'ஜான் ஜாக் ஆஃப் லண்டன்' என்ற விளையாட்டு பொருட்களை தயாரித்து விற்கும் நிறுவனம் வெளியிட்டது. 1849ல் வெளியிடப்பட்ட இந்த காய்களுக்கு 'ஸ்டாண்டன் சதுரங்கம்' (Staunton Chess set) எனப் பெயரிடப்பட்டது.

இந்த ஸ்டாண்டனின் முழுப் பெயர் ஹோவர்ட் ஸ்டாண்டன் (1810 - 1874). இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 1843லிருந்து 1851வரை மிக வலுவான சதுரங்க ஆட்டக்காரராக இருந்தவர். இவர் ஒரு எழுத்தாளரும்கூட. மிகப் புகழ்பெற்ற சதுரங்க ஆட்டக்காரர் என்பதால் அவருடைய பெயர் அந்த புதிய வடிவமைப்பிற்குச் சூட்டப்பட்டது. ஆனால், இந்த புதிய வடிவத்தில் காய்களை உருவாக்கியவர் நதேனியர் கூக்.

இந்த புதிய வடிவமைப்பில்தான் ராஜாவைக் குறிக்க க்ரீடமும் அந்தக் க்ரீடத்தில் சிலுவையும் பொறிக்கப்பட்டது. இந்த வடிவமைப்பிற்கான காப்புரிமை அந்த ஆண்டிலேயே இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வடிவமைப்பில் காய்கள் எளிதில் அடையாளம் காணும்வகையில் இருப்பதால், உலகம் முழுவதும் எளிதில் பரவியது. இதையடுத்து பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) இந்த வடிவமைப்பில் உள்ள காய்களையே, தரநிலைப்படுத்தப்பட்ட காய்களாக அங்கீகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்