மருத்துவர் லார்னா ப்ரீனா, மன்ஹாட்டனில் உள்ள நியூயார்க்-ப்ரெஸ்பிடேரியன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுத் துறையின் மருத்துவ இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஞாயிறன்று தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு உயிரிழந்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
லார்னா ப்ரீனாவுக்கு 49 வயதாகிறது. இவரின் தந்தை மருத்துவர் ஃபிலீப் ப்ரீன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில், "லார்னா தன் வேலையை செய்ய முயற்சித்தார் ஆனால் அதுவே அவரைக் கொன்றுவிட்டது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 56,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதில் 17, 500 உயிரிழப்புகள் நியூயார்க்கில் நிகழ்ந்துள்ளன.
இதுவரை தன்னுடைய மகளுக்கு எந்த விதமான மன நோயும் இல்லை என்கிறார் மருத்துவர் ஃபிலிப்.
லார்னா தனது குடும்பத்துடன் விர்ஜீனியாவில் வசித்து வந்துள்ளார்.
லார்னா ப்ரீன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் ஒருவாரம் கழித்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பினார் என்கிறார் அவரின் தந்தை.
ஆனால் லார்னாவை வீட்டிற்கு அழைத்துவர அவரின் குடும்பம் முயற்சி செய்வதற்கு முன்னரே மருத்துவமனை அவரை மீண்டும் வீட்டிற்கு அனுப்பியது.
தனது மகளிடம் கடைசியாக பேசியபோது, அவர் "எதிலும் ஈடுபாடு இல்லாத" மனநிலையில் இருந்ததாக தெரிவிக்கும் அவர், தனது மகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவசர ஊர்தியிலிருந்து மருத்துவனைக்கு அழைத்து செல்வதற்கு முன்னதாகவே உயிரிழப்பது குறித்து தன்னிடம் பேசியதாக தெரிவிக்கிறார்.
200 படுக்கைகள் கொண்ட அந்த மன்ஹாட்டன் மருத்துவமனையில் டஜன் கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
"தனது மகள் கொரோனா வைரஸை எதிர்த்து பணியாற்றும் முதன்மை பணியாளர்களில் ஒருவர்," என அவர் நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.
"அவர் ஹீரோவை போன்று புகழப்பட வேண்டும்," என்றும் அவரின் தந்தை கூறுகிறார்.
மேலும் லார்னா ப்ரீன் தனது குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கக்கூடியவர் என்றும், பனிச்சறுக்கு, சால்சா நடனம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தவர் என்றும் கூறுகிறது நியூயார்க் டைம்ஸின் அந்த செய்தி. மேலும் முதியோர் இல்லத்திற்கு வாரம் ஒரு முறை சென்று அங்கு தொண்டுகளை ஆற்றி வந்துள்ளார் லார்னா.
லார்னா பணியாற்றிய மருத்துவமனை, அவர் ஒரு ஹீரோ என்றும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு பல மருந்துகளை வரவழைத்தவர் என்றும் தெரிவித்துள்ளது.
லார்னா உயிரிழந்ததை உறுதிப்படுத்திய போலீஸ் துறையும் அவர் ஹீரோ என்று புகழ்ந்துள்ளது.
ஏப்ரல் 26 அன்று உதவி எண்ணுக்கு அழைப்பு வந்ததும் உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையில் லார்னா தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டதற்காக அனுமதிக்கப்பட்டார். பின் அவர் உயிரிழந்தார் என காவல்துறை கூறியது.
போலீஸ் தலைமையதிகாரி ராஷல் ப்ராக்னி, "முதன்மை பணியாளர்களான மருத்துவ பணியாளர்கள் தற்போதைய சூழலால் ஏற்படும் நெருக்கடியால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர் மேலும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை" என தெரிவித்தார்.
மேலும் அவர், "மருத்துவ பணியாளர்கள் அன்றாடம் மனஅழுத்தத்தில் பணியாற்றி வருகின்றனர் மேலும் தற்போதைய சூழல் நிலைமையை மேலும் கடுமையாக்கியுள்ளது." என்றார்.
அமெரிக்காவில் மட்டும் சுமார் பத்து லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.