இந்தியா, பாக். இரு நாடுகளிலும் போற்றப்படும் கங்கா ராம் - யார் இவர்?

திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (13:37 IST)
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இன்றளவும் போற்றப்படுகிறவர்கள் ஒரு சிலரே. அந்த வெகுசிலரில் ஒருவர்தான், பொறியாளரும் வள்ளலுமான சர் கங்கா ராம். யார் இவர்?

 
இந்திய தலைநகர் டெல்லியிலும் பாகிஸ்தான் தலைநகர் லாகூரிலும் உள்ள மருத்துவமனைகளில் இன்றும் இவருக்கான மரபு தொடர்கிறது. காரணம், இரண்டு மருத்துவமனைகளும் இவரது பெயரில் இவரது குடும்பத்தால் கட்டித்தரப்பட்டவை. லாகூரில் வசித்து வந்த இவரது குடும்பம் 1947ஆம் ஆண்டு பிரிவினையின்போது டெல்லிக்கு குடிபெயர்ந்தது.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதோடு, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் பிரிக்கப்பட்டன. இந்த சமயத்தில் நடைபெற்ற மதக்கலவரங்களில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். 1 கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாயினர்.

1927இல் கங்காராம் இறந்தார். ஆனால், எழுத்தாளர் ஹசன் மாண்டோவின் 'தி கார்லேண்ட்' சிறுகதையின் மூலம், இவருக்கும் லாகூருக்குமான மரபுத்தொடர்ச்சி எப்படிப்பட்டது என்பது விளக்கப்பட்டது.

அந்தகதையில், "இந்துப் பெயரை அழிப்பதற்காக கங்கா ராமின் சிலையை கலவரக்காரர் ஒருவர் தாக்குகிறார். அதே நபர், அருகில் இன்னொரு கலவரக்காரர் காயமடைந்ததைக் கண்டதும், விரைந்து கங்கா ராம் மருத்துவமனைக்கு போ என்று கத்தினார்" என குறிப்பிடப்பட்டிருந்தது .

இயல்பிலேயே ஒழுக்கசீலரான கங்கா ராம், கனிவான மனிதராகவும் அறியப்பட்டார். விவசாயம், பொறியியல், கட்டடக்கலை, பெண்கள் உரிமை ஆகியவற்றில் தன் பங்களிப்பை அளித்திருக்கும் கங்காராம், கைம்பெண் நலத்திலும் கூடுதல் கவனத்துடன் பணியாற்றினார்.

இவரை பற்றி நமக்கு தெரியவந்தவற்றில், 1940ஆம் ஆண்டு பாபா பியாரே லால் பேசியால் எழுதப்பட்ட 'சர் கங்கா ராம்:வாழ்க்கையும் பணிகளும்' என்ற புத்தகத்தின் மூலம் கிடைத்த தகவல்களே பெரும்பான்மையானவை.

லாகூரிலிருந்து 64 கி.மீ தூரத்திலுள்ள மங்டன்வாலா கிராமத்தில் 1851ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை, உத்தரபிரதேசத்தின் காவல்துறையில் இளநிலை சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பின்னர், அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்த அரசுப்பள்ளி ஒன்றில் கங்காராம் படித்தார்.

பின் மேற்படிப்புக்காக லாகூர் அரசுக்கல்லூரிக்கும் பின்னர் உதவித்தொகையுடன் பொறியியல் படிக்க தற்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி பகுதியில் உள்ள தாம்சன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது அவர் பெற்ற உதவித்தொகையான 50 ரூபாயில், பாதியை தன் குடும்பத்துக்கு அனுப்பி விடுவார்.

பொறியியல் படிப்பு முடிந்த பிறகு, லாகூரின் முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்த ராய் பஹதூர் கன்னையா லாலிடம் உதவியாளராக சேர்ந்தார். லாகூரின் கட்டடக்கலையில் கங்காராமின் காலம் இங்கிருந்துதான் தொடங்கியது.

லாகூர் அருங்காட்சியகம், அய்ட்ச்சிசன் கல்லூரி, மாயோ கலைக்கல்லூரி (தற்போது நேஷனல் கலைக்கல்லூரி), பொது தபால் நிலையம், மாயோ மருத்துவனையில் ஆல்பர்ட் விக்டர் பகுதி, அரசுக்கல்லூரியின் வேதியியல் ஆய்வகம் என குறிப்பிடத்தக்க கட்டடங்களை வடிவமைத்ததாகவும் கட்டியதாகவும் இவர் பெருமையுடன் நினைவுகூரப்படுகிரார்.

இந்திய மரபிலான கட்டடக்கலையயும், வளைவுகளையும் பயன்படுத்திய இவர், பஞ்சாப் பகுதியின் வெப்பம்,குளிர் நிலவும் சூழலை சமாளிக்கும் விதமாக ஒரு சிறந்த மற்றும் முறையடக்கம் வாய்ந்த நீர்ப்பாசனம் கொண்ட கட்டுமானத்தை உருவாக்க, மேற்கத்திய கட்டுமான உபகரணங்களையும் பயன்படுத்தினார் என்று தன் நூலில் எழுதுகிறார் பேடி.

நகரில் இவர் உருவாக்கிய அழிக்கமுடியாத தடத்துக்காக, பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் காலித் அஹமது, "நவீன லாகூரின் தந்தை" என்று கங்கா ராமைக் குறிப்பிடுகிறார்.

கங்காபூர் கனவு

லாகூரின் நகரப்பகுதிகளை தன் பொறியியல் அறிவால் புத்தாக்கம் செய்து கொண்டிருந்தாலும், கங்கா ராமின் இதயம் அவர் வளர்ந்த ஊரக பஞ்சாப் பகுதியில் ஊன்றியிருந்தது.

எனவே, தனது அரசாங்கப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபோது, தனது கடந்த கால சேவைகளுக்கு வெகுமதியாக செனாப் காலனியில் (பின்னர் லியால்பூர் மற்றும் பைசலாபாத் என அழைக்கப்பட்டது) இவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 1903ஆம் ஆண்டு அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். இந்த ஊரில், புதிய விதமான நீர்ப்பாசனம் மற்றும் விவசாய முறைகளைக் கொண்ட கங்காபூர் என்ற மாதிரி கிராமத்தை உருவாக்கினார்.

கங்காபூரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த புச்சியானா ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு ஒரு தனித்துவம் வாய்ந்த அமைப்பையும் அவர் உருவாக்கினார். அதாவது, இரண்டு தள்ளுவண்டிகளை இணைத்து, குதிரையால் இழுத்துச் செல்லும்படியாக ஒரு குறுகிய பாதையை அமைத்தார்.

ஆனால், கங்காபூரில் தான் அமைத்த நீர்ப்பாசன முறையை பெரிய அளவில் முயற்சி செய்ய மிகவும் ஆர்வமாக இருந்தார் கங்காராம். பஞ்சாப் மாகாணத்தின் ரெனாலா குர்தில் உள்ள நீர்மின் திட்டம் அவருடைய லட்சிய திட்டங்களில் ஒன்றாகும்.

1925ஆம் ஆண்டு, அலுவல்பூர்வமாக திறக்கப்பட்ட இந்த திட்டம், 360 சதுர கிமீ நிலங்களுக்கு ஐந்து விசையாழிகளைப் பயன்படுத்தி பாசன வசதி தந்து அவற்றை வளமான பகுதிகளாக மாற்றியது.

தினமும் அதிகாலை எழுந்து தன் நிலத்துக்கு செல்வது அவரது வழக்கம். சில சமயங்களில், உருது கவிஞர் மௌலானா அல்தாஃப் எழுதிய கைபெண்ணின் பிரார்த்தனை என்ற கவிதையை சொல்லிக்கொண்டிருப்பார் என்றும் பேசி தன் நூலில் எழுதுகிறார்.

இதை சொல்லும்போது அடிக்கடி இவர் கண்ணீர் சிந்துவதும் உண்டு. இந்தக் கவிதைதான் இவர், இந்து மதத்தில் கைம்பெண் நலம் குறித்து பணியாற்றுவதற்கான தொடக்க உந்துதலாக அமைந்தது.

இதன் விளைவாக, பஞ்சாபின் அம்பாலா நகரில் 1917ஆம் ஆண்டு நடந்த இந்து மாநாடு ஒன்றில், கைமெண் மறுமணத்துக்கான தீர்மானத்தைக் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால், அது தோல்வியுற்றது. பின்னர், கைம்பெண் திருமண கூட்டமைப்பை உருவாக்கி அதற்கு நன்கொடையாக தன் சொந்தப் பணத்திலிருந்து 2000 ரூபாயும் வழங்கினார்.

சமூகத்தில் கைம்பெண்கள் படும் பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த அமைப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால், பெரும்பாலான பெண்கள் வயது மூப்பை அடைந்தவர்களாகவும், மறுமணம் செய்துகொள்ள விரும்பாதவர்களாகவும் இருந்ததை அவர் விரைவிலேயே உணர்ந்து கொண்டார்.

1921ஆம் ஆண்டு அரசு அனுமதியுடன் சுமார் 2.5லட்ச ரூபாய் மதிப்பில் கைம்பெண்களுக்கான இல்லம் ஒன்றைக் கட்டினார். இங்கு, அவர்களுக்கு திறன் வளர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.இந்த விடுதிக்குள் இரண்டு பள்ளிகளும் ஒரு தங்கும் விடுதியும் இருக்கும். அவர்கள், தேர்வுகளில் வெற்றி பெறவும் கைவினைக்கலை ஆசிரியர்களாக மாறுவதற்கும் இந்த இல்லத்தில் உதவிகள் வழங்கப்படும்.

இதுமட்டுமன்றி, இந்து, சீக்கிய பெண்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை கையாளும் விதத்தில் லேடி மேனார்ட் தொடங்கிய தொழிற்பள்ளிக்கும் இவர் நிதி அளித்தார்.

சர் கங்கா ராம் அறக்கட்டளை

1923இல் கங்காராம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதே ஆண்டில், லாகூரில் சர் கங்கா ராம் மருத்துவமனை மற்றும் மருந்துக்கிடங்கு கட்டப்பட்டது.பின்னர், முழுவீச்சில் சிகிச்சைகளுக்கான வசதிகள், மருத்துவ் துறைகள் கொண்ட மருத்துவமனையாக மாறியது என்று பேசி எழுதிய நூல் தெரிவிக்கிறது.

பஞ்சாபில் இருந்த மாயோ மருத்துவனைக்கு (பழமையான, பெரிய) அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய மருத்துவமனையாக இருந்தது. 1924ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை சார்பில் 'இந்து மாணவர்கள் வேலைவாய்ப்பு குழாம்' தொடங்கப்பட்டது. இதன் மூலம், இந்து மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற உதவி செய்யப்பட்டது. அதேபோல, சர் கங்கா ராம் தொழில் பிரிவு மற்றும் நூலகமும் திறக்கப்பட்டன.

கங்கா ராம் வாழ்வில் கடைசி நலத்திட்ட நடவடிக்கை அவர் உருவாக்கிய இந்து அபாஹஜ் ஆஷ்ரம் தான். சுமார், 2 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்ட இந்த இல்லத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனளிகள் ஆகியோர் தங்கினர்.

1927ஆம் ஆண்டு லண்டனில் இருந்த இவரது இல்லத்தில் இறந்தார். இவரது அஸ்தியின் ஒருபகுதி லாகூருக்கு கொண்டுவரப்பட்டு ஆஷ்ரமத்துக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. இப்போது, அந்த ஆஷ்ரமம் அங்கு இல்லை என்றாலும், கங்கா ராமின் சமாதி இன்னும் அங்குதான் இருக்கிறது.

கங்காராமின் மரணம் குறித்து பிரபல உருது எழுத்தாளர் க்வாஜா ஹசன் நிஸாமி எழுதும்போது, " ஒருவர் தன் ஆயுட்காலத்தை இன்னொருவருக்கு தானமாக வழங்க முடியும் என்றால், என் ஆயுட்காலத்தை கங்கா ராமுக்கு வழங்கியிருப்பேன். அதன்மூலம், அல்லபடும் பெண்களுக்கு இன்னும் ஏராளமான சேவைகளை அவர் நெடுங்காலம் வாழ்ந்து ஆற்றியிருக்கக்கூடும்" என்று எழுதி முடித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்