நித்யானந்தா எங்கே? - இன்னும் 2 நாட்களில் தெரிய வாய்ப்பு

செவ்வாய், 10 டிசம்பர் 2019 (10:48 IST)
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: நித்யானந்தா எங்கே தங்கி இருக்கிறார்?
நித்யானந்தா தங்கி இருக்கும் இடம் குறித்த விவரங்களை 12 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்குப் பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா சாமியார். இவரது ஆசிரமத்தில் சீடராக இருந்த ஆர்த்திராவ், நித்யானந்தா மீது கொடுத்த பாலியல் வழக்கு ராமநகர் மாவட்ட 3-வது குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
 
இதைத்தொடர்ந்து நித்யானந்தாவிடம் கார் ஓட்டுநராக இருந்த லெனின் கருப்பன் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'நித்யானந்தா மீது ஆர்த்திராவ் கொடுத்துள்ள பாலியல் வழக்கில் 44 முறை விசாரணைக்கு ஆஜராகாமல் நித்யானந்தா இருந்துள்ளார். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். எனவே அவர் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
 
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த மனு நேற்று (திங்கள்கிழமை) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா இருக்கும் இடம் குறித்த விவரங்களை வருகிற 12-ந்தேதிக்குள் கர்நாடக அரசும், காவல்துறையும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இந்த மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 
இதற்கிடையே நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு நேற்று மீண்டும் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கி இருப்பதால், நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஆர்த்திராவ் மற்றும் அரசு வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.
 
ஆனால் இந்த வழக்கில் நித்தியானந்தா நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்று பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த ஆவணங்களை நித்தியானந்தா சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் நீதிபதியிடம் அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் நித்யானந்தா இல்லாமலேயே சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் என்று கூறி விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்