தமிழ்நாடு பாஜகவில் புதிய ஒருங்கிணைப்புக் குழு - அண்ணாமலை திரும்பி வரும் போது என்ன நடக்கும்?

Prasanth Karthick

புதன், 4 செப்டம்பர் 2024 (14:08 IST)

தமிழக பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை படிப்பு ஒன்றுக்காக வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் மாநிலத்தில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எச். ராஜா தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது தேசியத் தலைமை. இந்த அறிவிப்பிற்குப் பிறகு பல்வேறு யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.

 

 

பா.ஜ.கவின் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை 'செவனிங் குருகுல்' நிதி நல்கையில் (Chevening Gurukul Fellowship) ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வழங்கும் அரசியல் தொடர்பான படிப்பு ஒன்றுக்காக ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று இங்கிலாந்திற்குப் புறப்பட்டுச் சென்றார். மூன்று மாதப் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் மாத இறுதியில் அவர் இந்தியா திரும்புகிறார்.

 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே அண்ணாமலை மூன்று மாத காலம் படிப்பதற்காக வெளிநாடு செல்வது குறித்து பேச்சுகள் அடிபட்டு வந்தன. அண்ணாமலை வெளிநாடு செல்லும் சமயத்தில் மாநில பா.ஜ.கவின் தலைமைப் பொறுப்பு தற்காலிகமாக வேறு யாருக்காவது வழங்கப்படுமா என்பது குறித்த விவாதங்களும் நடந்துவந்தன.

 

இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படலாம் அல்லது வெளிநாட்டில் இருந்தபடியே கட்சிப் பணிகளை அண்ணாமலை கவனிக்கலாம் எனச் சொல்லப்பட்டு வந்தாலும் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. அண்ணாமலை இங்கிலாந்திற்குப் புறப்பட்டுச் சென்ற தினத்தில்கூட, இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

 

6 பேர் கொண்ட குழு அறிவிப்பு

 

இந்த நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி பா.ஜ.கவின் தேசிய தலைமை, தமிழ்நாட்டில் கட்சி நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காக ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்பதாக அறவித்தது.



 

இது தொடர்பாக பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா இருப்பார் என்றும் மாநில துணைத் தலைவர்கள் எம். சக்கரவர்த்தி, பி. கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் எம். முருகானந்தம், ராம சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

 

இந்த குழு, மாநில மையக் குழுவுடன் கலந்தாலோசித்து கட்சி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

 

கே. அண்ணாமலை வெளிநாட்டிற்கு புறப்படும் வரை இதுபோல எந்தப் பேச்சும் இல்லாத நிலையில், இப்படி ஒரு குழு அமைக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பை ஒட்டி பல்வேறு யூகங்களும் உலவத் துவங்கின.

 

பா.ஜ.கவை நீண்ட காலமாக கவனிக்கும் சிலர், "அண்ணாமலை இங்கே இருக்கும் வரை இதுபோன்ற குழு குறித்து எந்தப் பேச்சும் அடிபடாத நிலையில், அவர் சென்ற பிறகு இதுபோன்ற குழு அமைக்கப்பட்டிருப்பது அவரைத் தாண்டியும் விஷயங்கள் நடப்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, நீண்ட காலமாக கட்சியில் ஒதுங்கியிருந்த எச். ராஜா அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதும் பல்வேறு செய்திகளைச் சொல்கிறது" என்று கூறினர்.

 

ஆனால், அரசியல் நோக்கர்களைப் பொருத்தவரை இது குழப்பமான சமிக்ஞைகளையே தருகிறது என்கிறார்கள்.

 

‘குழுவின் பின்னணியில் மூன்று நோக்கங்கள்’
 

"அண்ணாமலை தான் புறப்படுவதற்கு முந்தைய சில நாட்களில் அ.தி.மு.க. மீது மிகக் கடுமையாக தாக்குதல் தொடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியை அவமரியாதையான வார்த்தையில் குறிப்பிட்ட அவர், 'கொலை வழக்கில் தொடர்புடையவர்' என்றும் கூறினார். ஆனால், அவர் சென்ற பிறகு அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குழுவில் பெரும்பாலும் அ.தி.மு.க. கூட்டணியை விரும்பக் கூடிய, கடும் தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டவர்களே இடம்பெற்றிருக்கின்றனர். அண்ணாமலை திரும்புவதற்குள், அ.தி.மு.க. எதிர்ப்பில் சற்று மென்மையான போக்கை கடைப்பிடிக்கலாம். ஆனால், அண்ணாமலை திரும்பிய பிறகு என்ன ஆகும் என்ற கேள்வியும் இருக்கிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

 

எடப்பாடி பழனிச்சாமி 'கொலை வழக்கில் தொடர்புடையவர்' என்ற தனது குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.

 

கே. அண்ணாமலையின் ஆதரவாளர்களைப் பொருத்தவரை அவரது அனுமதியுடனேயே இந்தக் குழுவில் இருப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனாலும், அப்படி இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

 

"அண்ணாமலையைக் கேட்டு இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தால் கட்சிக்குள் அவரது தீவிர ஆதரவாளரான கரு. நாகராஜன் இடம்பெற்றிருப்பார். அண்ணாமலை தீவிர அ.தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில், குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைவரும் அ.தி.மு.க. கூட்டணியை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தவிர, இவர்கள் அனைவருமே தீவிரமான ஆர்.எஸ்.எஸ். பின்னணியையும் கொண்டவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்" என்கிறார் ப்ரியன்.

 

இந்தக் குழுவின் பின்னணியில் மூன்று நோக்கங்கள் இருக்கலாம் என்கிறார் ப்ரியன்.

 

"அதாவது, அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் 2026 தேர்தலில் கணிசமான இடங்களை வெல்லலாம் என பா.ஜ.கவில் பலர் நினைக்கிறார்கள். அதை நோக்கி நகர இந்தக் குழு உதவலாம். அதேபோல, இந்தக் குழு ஒரு தீவிரமான தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுக்கும். மூன்றாவதாக, கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவைப் பேணவும் இந்தக் குழு உதவும். இந்த மூன்று நோக்கங்களின் பின்னணியில்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் ப்ரியன்.

 

பாஜக கூறுவது என்ன?

 

ஆனால், கட்சி சார்ந்த பணிகளைக் கவனிக்க மட்டுமே இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர்.

 

"அடுத்த நான்கு மாதங்களுக்கு கட்சியில் பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. பா.ஜ.கவில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள். ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இது தவிர புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடக்கும்.”

 

“செப்டம்பரில் துவங்கி நவம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 25ஆம் தேதிவரை இந்தப் பணிகள் நடக்கும். நவம்பர் மாதத்திற்குப் பிறகு, உட்கட்சித் தேர்தல்கள் நடக்க ஆரம்பிக்கும். இந்தப் பணிகளைச் செய்யவும் முடிவுகளை எடுக்கவுமே புதிதாக குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. வேறு காரணங்கள் இல்லை" என்கிறார் சேகர்.

 

குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் பொதுவாக அ.தி.மு.க. கூட்டணியை விரும்பக் கூடியவர்கள் என்ற பார்வையை புறம்தள்ளுகிறார் சேகர்.

 

"அவையெல்லாம் யூகங்கள். நாங்கள் எல்லோரும் பா.ஜ.கவினர்தான். எங்களுடைய பதில் என்பது Rejoinder - Reaction - Response என்றுதான் இருக்கும். அ.தி.மு.க. சார்பு, தி.மு.க. சார்பு என எதுவும் கிடையாது. எல்லாமே எங்கள் கட்சியை, அதன் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும். தலைவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கருத்துகளை தெரிவிக்கும் பாணியில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கட்சியின் நலனை முன்வைத்தே எல்லோருடைய நிலைப்பாடுகளும் இருக்கும்" என்கிறார் அவர்.

 

அண்ணாமலை புறப்படும் வரை இதுபோன்ற குழு குறித்து எந்தப் பேச்சும் இல்லாத நிலையில், இப்போது குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்துக் கேட்ட போது, "யாரும் என்ன யூகங்களை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக மட்டுமே இந்தக் குழு. அவ்வளவுதான்" என்கிறார் சேகர்.

 

அண்ணாமலை திரும்பி வரும்போது என்ன நடக்கும்?

 

மூன்று மாதங்களுக்குப் பின் அண்ணாமலை திரும்பி வரும் போது என்ன நடக்கும் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டபோது, "அதை இப்போதே சொல்ல முடியாது. இப்போதைய சூழலில், 2026-இல் தி.மு.கவை தோற்கடிக்க அ.தி.மு.கவை உள்ளடக்கிய பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும்.”

 

“இந்த மூன்று மாதத்தில் அந்தத் திசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டால், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவியைக் கொடுத்துவிட்டு, குழுவின் செயல்பாடுகள் தொடரலாம். அதில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், அண்ணாமலையின் தலைமை தொடரக்கூடும். ஆனால், இப்போது எதையும் சொல்வது கடினம்" என்று கூறினார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்