இந்திய விண்வெளி திட்டத்தில் தனியார் துறையின் புதிய பங்கு என்னவாக இருக்கும்?

திங்கள், 18 மே 2020 (15:25 IST)

விண்வெளித் துறையில் தனியார் துறைக்கு ஒரு மிகப் பெரிய பங்கை வழங்கும் இந்தியாவின் சமீபத்திய முடிவு, மேலும் பல தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் “கோவிட்-19க்கு பிந்தைய காலத்தில், மக்கள் நகரங்களில் உள்ள வீடுகளுக்கு பதிலாக தங்கள் ஊரிலிருந்தே வேலை செய்யலாம்.”


இப்போதுவரை, இந்தியா ஏவும் செயற்கைக்கோள்களின் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை உள்ளிட்டவற்றை இஸ்ரோவுக்கு சொந்தமான இடத்தில் தனியார் துறை நிறுவனங்கள்தான் மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில்தான், இந்தியாவின் தடங்காட்டி சேவைக்கு உதவும் ஜிசாட்-30 மற்றும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ ஆகிய இரண்டு செயற்கைகோள்களும் தனியார் நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டன.

“தனியார் நிறுவனங்களுக்கு எங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இஸ்ரோவால் ஒரு சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதுதான் எங்கள் முதலீடு. இப்போது அந்த தனியார் நிறுவனங்கள் தாங்களாகவே முழு தயாரிப்பையும் மேற்கொண்டு அதை இஸ்ரோவிற்கு கொண்டுவந்து சோதனை செய்ய தயாராக உள்ளனர்” என்று பிபிசியிடம் கூறுகிறார் சந்திரயான்-1 திட்டத்தின் முன்னாள் திட்ட இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை.

இஸ்ரோவில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கும் மத்திய அரசின் சமீபத்திய முடிவு, பெரும்பாலும் கடந்த 2017ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதன் மூலம் இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவூர்தியை வடிவமைக்கவும், பிறகு அதை இஸ்ரோவிடம் கொடுத்து பரிசோதனை செய்யவும் வழிவகை செய்கிறது.

“தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்கள் இஸ்ரோவுக்கு சொந்தமான கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு வகை செய்யும் கொள்கை ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்” என்று சமீபத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

ஆனால், உண்மை என்னவென்றால், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ ஏற்கனவே தனது கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் அனுமதியை வழங்கி வருகிறது.

“நாங்கள் ஏற்கனவே பூட்டான் மற்றும் மாலத்தீவில் எங்களது இருப்பை விரிவுப்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி தொடங்கிய சார்க் செயற்கைக்கோளுக்கான திட்டத்தை மேற்கொள்வதற்காக வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கையில் விரைவில் கால்பதிக்கவுள்ளோம்” என்று ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான சங்கர் பிபிசியிடம் பேசியபோது தெரிவித்தார்.

இந்தியாவின் விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவங்களின் பங்களிப்பு இருப்பது ஒன்றும் புதிதல்ல. 1985ஆம் ஆண்டில் இஸ்ரோவின் தலைவராக இருந்த பேராசிரியர் யு.ஆர்.ராவின் பதவிக் காலத்தில் தனியார் துறை ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்றது.

கே.ராதாகிருஷ்ணன் இஸ்ரோவின் தலைவராக இருந்த (2009-2014) காலத்தில்தான் செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவூர்திகளை உற்பத்தி செய்வதற்கு தனியே ஒரு நிறுவனம் அமைக்க திட்டமிடப்பட்டது.

“அதுவரை, சுமார் 125 தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் அடிப்படையான பங்களிப்புகளை செய்து கொண்டிருந்தன. இப்போது உள்ள வித்தியாசம் என்னவென்றால், தனியார் துறையால் ஒரு படி மேலே சென்று எதிர்கால திட்டங்களிலும் பங்கு வகிக்க முடியும்'' என்று ராதாகிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
பிபிசியிடம் பேசிய இஸ்ரோவின் மற்றொரு முன்னாள் தலைவரான மாதவன் நாயர், “தற்சமயத்தில் ஒரு செயற்கைக்கோள் உருவாக்கத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை தனியார் நிறுவனங்களே அளித்து வருகின்றன. ஆனால், இதற்கு முன்புவரை தனியார் நிறுவனங்கள் நீண்டகால அடிப்படையில் விண்வெளி துறையில் முதலீடு செய்வதற்கு முனைப்பு காட்டாமல் இருந்துவந்தன. இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் அந்த குறையை நிவர்த்தி செய்து, மிகப் பெரும் முதலீடுகளை ஈர்க்கும்” என்று அவர் கூறினார்.

“மத்திய அரசின் இந்த அறிவிப்பு, சட்டரீதியில் மாற்றத்தை கொண்டுவருவதால், அது இஸ்ரோ மீதான சுமையை குறைக்கும். அண்டை நாடுகள் இஸ்ரோவின் உதவியை எதிர்நோக்கி இருப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, கொரோனா வைரஸுக்கு பிந்தைய காலத்தில், தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களுக்கான தேவையில் ஒரு மிகப் பெரும் எழுச்சி இருக்குமென்று எதிர்பார்க்கிறேன். இப்போது எங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தை கொண்டு, நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம், ஆனால் உங்கள் ஊரிலிருந்து அல்ல” என்று அண்ணாதுரை கூறுகிறார்.

இதுபோன்ற அறிவிப்புகளால், பெல்லாட்ரிக்ஸ் போன்ற செயற்கைக்கோள்களுக்கான உந்துவிசை அமைப்புகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புகளை மேற்கொண்டு வரும் துளிர் நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்) உற்சாகம் அடைந்துள்ளன.

“விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான கொள்கை மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பலாம். இதன் மூலம், அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் நாசாவின் கட்டமைப்பு பயன்படுத்திக்கொள்வதை போன்று இந்தியாவில் தனியார் நிறுவனங்களால் இஸ்ரோயாவின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்” என்று பெல்லாட்ரிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் யஷாஸ் கரணம் பிபிசியிடம் கூறினார்.

மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பானது, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தனியார் துறை நிறுவனங்கள் இஸ்ரோவுக்கு சொந்தமான செயற்கைக்கோள்களின் தொலைநிலை உணர்திறன் தரவை அணுக அனுமதிக்கிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்