"எப்போது திரும்பும் இயல்பு நிலை?" - களையிழந்த உதகை சுற்றுலா சீசன்: வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள்
வெள்ளி, 25 ஜூன் 2021 (11:20 IST)
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகத் திகழும் நீலகிரி மாவட்டத்தின் உதகையில், 'சுற்றுலா சீசன்' மாதங்களான ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகியவற்றில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்ததோடு, சுற்றுலா துறையைச் சார்ந்த வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் சுற்றுலாத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு இது ஒரு சோதனைக் காலம் என குறிப்பிடுகிறார் உதகையில் 35 வருடங்களாக தங்கும் விடுதிகள் நடத்தி வரும் என்.சந்திரசேகர்.
"நான் பிறந்து வளர்ந்தது உதகையில் தான். இப்போது எனக்கு 59 வயதாகிறது. இதுவரை உதகையில் உள்ள சாலைகளையும், சுற்றுலாத்தலங்களையும் இவ்வளவு வெறுமையாக பார்த்ததில்லை. கொரோனா பரவலுக்கு முன்புவரை ஆண்டு முழுவதும் திருவிழாவைப் போல மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்த சுற்றுலாத்தலங்கள், இன்று மூடப்பட்டு மனித நடமாட்டமில்லாமல் இருக்கும் காட்சிகள் ஏதோ ஒரு அச்ச உணர்வை தருகின்றன" என்கிறார் அவர்.
"நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை மற்ற தொழில்களை விட சுற்றுலாத்துறை சார்ந்த வணிகம் தான் பிரதானம். இங்குள்ள பெரும்பாலானோர் சுற்றுலா துறையை சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர். இம்மாவட்டத்திற்கு வரக்கூடிய பெரும்பான்மையான மக்கள் சுற்றுலா பயணிகளாக வந்து செல்பவர்கள் தான்.
சென்ற ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது உதகையின் சுற்றுலா துறை வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய ஊரடங்கு, செப்டம்பர் வரை நீடித்தது. அக்டோபர் மாதத்தில் பெரிதாக சுற்றுலா பயணிகள் வரவில்லை. நவம்பர், டிசம்பர் மற்றும் இந்த ஆண்டின் ஜனவரி மாதங்களில் தான் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த சூழலில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் சுற்றுலா துறை தொழிலாளர்கள் வருவாயின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனது தங்கும் விடுதிகளில் 60 நபர்கள் வேலை செய்து வந்தனர். வெளியூரைச் சேர்ந்த பலர் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர்.
உள்ளூரில் இருக்கும் சில பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணிகளை மட்டும் மேற்கொண்டு வருகிறோம். வெளியாட்கள் வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணியாளர்களுக்கான சம்பளம், மின் கட்டணம், சொத்து வரி போன்ற வரியினங்களை தொடர்ந்து செலுத்த வேண்டியுள்ளது. மேலும், இங்குள்ள 70 முதல் 80 சதவீத தங்கும்விடுதிகள் வங்கிகளில் கடன் பெற்று நடத்தப்படுபவை. கடனுக்கான மாத தவணையை செலுத்த முடியாமல் பலர் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
மீண்டும் இயல்பு நிலை திரும்பினாலும் இந்த ஓராண்டாக ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய ஐந்து வருடங்கள் வரை தேவைப்படும். எனவே, சுற்றுலாத்துறையை நம்பி இருக்கக்கூடிய வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும். வரும் காலங்களில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். சுற்றுலா துறையை சார்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் சந்திரசேகர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இதில் 60 முதல் 70 சதவீதத்தினர் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் என இங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர். பள்ளி விடுமுறை, குளிர்ச்சியான காலநிலை, சமவெளிப் பகுதிகளில் நிலவும் வெப்பம் காரணமாக இம்மாதங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் உதகைக்கு வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் இந்த காலங்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதாக தெரிவிக்கின்றனர்.
உதகையில் உள்ள லவ்டேல் சந்திப்பின் அருகே தங்கும் விடுதி நடத்தி வருகின்றனர் ஜெ.பி.ராஜேஷ் மற்றும் தே.கவின்.
'சுமார் 11 ஆண்டுகளாக உதகையில் காட்டேஜ் வகை தங்கும் விடுதிகள் நடத்தி வருகிறோம். ஒரு வருடத்திற்கும் மேலாக முறையான வருமானம் இல்லாமல் தவித்து வருகிறோம். கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கையிலிருந்த சேமிப்பு தொகையை வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுகளை சமாளித்து வந்தோம். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக வருமானம் இல்லாததால், கடந்த இரண்டு மாதமாக பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்' என்கிறார் ராஜேஷ்.
'நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறோம். ஒப்பந்ததாரருக்கு உரிய நேரத்தில் தொகையை செலுத்த வேண்டும். இப்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று அதற்கான இஎம்ஐ தொகையை செலுத்தவேண்டும். சென்ற ஆண்டு இஎம்ஐ செலுத்துவதில் சலுகைகள் வழங்கினர். இந்த ஆண்டு தற்போது வரை சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கடன் தொகையை செலுத்துவதற்கு வங்கிகளில் இருந்து நெருக்கடி தரப்படுகிறது. எனவே, முறையான கட்டுப்பாடுகளுடன், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளோடு குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாப் பயணிகளை இ-பாஸ் முறையில் அனுமதிக்க அரசு உத்தரவிட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள முக்கியமான மற்றும் விசாலமான பரப்பளவு கொண்ட சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே சுற்றுலாத்துறையை சார்ந்து இருக்கக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் இழப்பிலிருந்து தப்பமுடியும். அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறையாத நிலையில் உள்ளது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து கொரோனா பரவலை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த ஆண்டு கொரோனா குறித்த உயிர் பயம் எங்களுக்கு ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு சுற்றுலாத் துறையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் உயிர் பயம் ஏற்பட்டுள்ளது' என கூறுகிறார் கவின்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை, இம்மாதத் தொடக்கத்தில் 500 ஆக இருந்தது. இப்போது, சுமார் 200 ஆக உள்ளது.
இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 154 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை வரை மாவட்டத்தில் 1175 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுபது ஆண்டுகளாக உதகையில் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வரும் முரளிதரன் ராவ், கொரோனா நோய்த்தொற்று காரணமாக சாக்லேட் தயாரிப்பு தொழில் 95 சதவீதம் முடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார்.
"எனது கடையில் 55 நபர்கள் பணி செய்து வருகின்றனர். பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்ட சூழலிலும் பணியாளர்களுக்கான சம்பளம், பராமரிப்பு செலவுகளை வழங்கி வருகிறேன்.
சுற்றுலாத்துறை சார்ந்த மற்ற தொழில்களுக்கும், சாக்லேட் தயாரிப்பு தொழிலுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மூலப்பொருட்களை குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உணவாக மாற்றி விற்பனை செய்யவில்லை என்றால் வீணாகிவிடும். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது சுமார் 800 கிலோ அளவிற்கு சாக்லேட் தயாரிப்புகள் வீணானது. இந்த ஆண்டு 250 கிலோ சாக்லேட் மற்றும் உணவு பொருட்கள் வீணாகியுள்ளது.
ஆன்லைன் விற்பனையின் மூலம் ஓரளவுக்கு சாக்லேட்டுகள் மற்றும் உணவுப்பொருட்களை விநியோகித்து வந்தோம். ஆனால், கொரியர் அனுப்புவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதால் அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை நம்பியுள்ள சாக்லேட் தயாரிப்பு தொழில் 95 சதவீதம் முடங்கியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் போது வங்கிக் கடன்கள் பெற்று மீண்டும் தொழிலை துவங்கினோம். இந்த ஆண்டு வங்கிகளில் கடன்கள் மறுக்கப்படுகிறது. அதனால், இத்தொழிலில் உள்ளவர்களின் நிலை ஊரடங்கு நீட்டித்தால் மேலும் மோசமடைய அதிக வாய்ப்புள்ளது" என்கிறார் சாக்லேட் தயாரிப்பாளர் முரளிதரன் ராவ்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, ஏப்ரல் 20ஆம் தேதி சுற்றுலா துறையை சார்ந்த சிறு, குறு வியாபாரிகள் பலர் தாவிரவியல் பூங்காவில் இருந்து சேரிங்கிராஸ் பகுதி வரை ஊர்வலமாக நடந்து வந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அதேபோல், 24ஆம் தேதி இரண்டாம் கட்ட போராட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா துறை சார்ந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து 'உதகையில் சுற்றுலாத்தலங்களை திறந்து, பயணிகளை அனுமதிக்க வேண்டும்' என உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.
சுற்றுலாப் பயணிகளின் முக்கியத் தேவைகளில் ஒன்றான போக்குவரத்து சேவை வழங்கிவரும் தனியார் நிறுவனங்கள் பல, தங்களது வாகனங்களை விற்று வருவதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"உதகை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாடகை கார் நிறுவன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்கள் என சுமார் 80,000 குடும்பத்தினர் போக்குவரத்து சேவை தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது" என கூறுகிறார் வாடகை கார் நிறுவனம் நடத்தி வரும் ஆர்.பாபு
"கொரோனா பாதிப்பிற்கு முன்பு 22 வாகனங்கள் எனது நிறுவனத்தில் இருந்தன. இப்போது 14 வாகனங்கள் மட்டுமே உள்ளன. வருவாய் இழப்பு காரணமாக 8 வாகனங்களை கிடைத்த விலைக்கு விற்று விட்டேன். அதாவது ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை, ரூ.6 லட்சத்திற்கு கொடுத்துவிட்டேன். காரணம் பொருளாதார நெருக்கடி தான்.
ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இயக்கப்படாமல் இருப்பதால், பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகி வருகிறது. ஒரு வாகனத்தின் பேட்டரி பழுதாகிவிட்டால், புதிய பேட்டரி மாற்றுவதற்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவாகும். அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த செலவு பெரும் தொகையாக உள்ளது.
ஓட்டுநர்கள் பலர், லாரி ஓட்டுவதற்கும் காய்கறி ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கும் சென்று விட்டனர். ஆனால், உரிமையாளர்களால் அப்படி எந்த வேலைக்கும் செல்ல முடியாது. எங்களை நம்பியுள்ள பணியாளர்களின் குடும்பத்தையும் காப்பாற்றி, எங்களது குடும்பத்தையும் கவனித்து வருகிறோம்.
மேலும், இங்குள்ள பலரும் சுமார் 30 ஆண்டுகளாக சுற்றுலாப்பயணிகளுக்கு வாகனங்கள் ஓட்டும் வேலையை மட்டும் செய்தவர்கள். திடீரென்று மற்ற வேலைக்கு எங்களை போகச் சொன்னால், எப்படி முடியும்? இதைத்தவிர மற்ற வேலை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எனவே, வங்கி கடன் திரும்ப செலுத்துவதிலும், வாகனத்திற்கான வரியினங்கள் கட்டுவதிலும் அரசு சலுகைகள் வழங்கிட வேண்டும்" என்கிறார் இவர்.
"தனியார் நிதி நிறுவனங்கள், கடன் வசூலிப்பில் சலுகை காட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளபோதும், அவர்கள் தொடர்ந்து கடன் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் இயல்புநிலை திரும்பினாலும் எங்களது தொழில் பழைய நிலைக்கு வர மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகிவிடும்" என்கிறார் பாபு.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தாவரவியல் பூங்கா மூடப்பட்டது சுற்றுலாத்துறையினருக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்கான பணிகள் 6 மாதங்களுக்கு முன்னரே அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் துவங்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டதால், உதகை தாவரவியல் பூங்காவிலும் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்காக சுமார் 5 லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்றது.
ஆனால், கொரோனா இரண்டாம் அலை பரவலால் கடந்த ஏப்ரல் 2ம் தேதிமுதல் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாவட்டத்துக்குள் சுற்றுலாப் பயணிகள் வரத்தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மலர் கண்காட்சியை காண பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும், யுடியூப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி ஒளிபரப்பட்டது.
ஆனால், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் பூங்காக்களை சுற்றிலும் அமைந்துள்ள கடை உரிமையாளர்கள், சாலையோரக் கடை நடத்துபவர்கள்,
படகு இல்லத்தில் படகு ஓட்டுபவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், உணவு விடுதி நடத்துபவர்கள், குதிரை வளர்ப்பவர்கள் என ஏராளமான தொழிலாளர்களுக்கு பெரும் அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிய வருகிறது.