விஜய் மல்லையா கடன் பாக்கி: ரூ. 5,646.54 கோடி சொத்துகளை விற்க எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி
வியாழன், 24 ஜூன் 2021 (14:01 IST)
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாங்கிய கடன்களை, விஜய் மல்லையா செலுத்தத் தவறியதால், அவரது சில ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளை விற்று, கடனை மீட்டுக் கொள்ளலாம் என மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் எஸ்பிஐ தலைமையிலான கடன் கொடுத்த வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
எஸ்பிஐ உட்பட 11 வங்கிகள் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்கிற விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனத்துக்கு சுமார் 6,900 கோடி ரூபாய் கடன் கொடுத்தது.
இதில் அதிகபட்சமாக 1,600 கோடி ரூபாய் கடனை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்தது. 800 கோடி ரூபாயை பஞ்சாப் நேஷனல் வங்கியும், 800 கோடி ரூபாயை ஐடிபிஐ வங்கியும், 650 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் இந்தியாவும், 550 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் பரோடாவும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சரியாக கடனை திருப்பிச் செலுத்தாததால், விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க முயன்றன வங்கிகள். அவரோ கடனைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிச் சென்றார்.
விஜய் மல்லையா சுமார் 9,000 கோடி ரூபாய் வரை பணச் சலவை மோசடி (கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தை சட்டபூர்வமான வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சி) செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதில் அவரது கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அடக்கம்.
விஜய் மல்லையாவின் பல சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அச்சொத்துகளை விற்று தங்கள் கடனை மீட்டுக் கொள்ள எஸ்பிஐ தலைமையிலான, விஜய் மல்லையாவுக்கு கடன் கொடுத்த வங்கிகள் கூட்டமைப்பு மும்பையில் உள்ள பணச் சலவை தடுப்பு நீதிமன்றத்தை நாடியது.
வங்கிகள் விஜய் மல்லையாவிடமிருந்து வசூலிக்க வேண்டிய கடன் பாக்கியை, அவரது 5,646.54 கோடி ரூபாய் சொத்துகளை விற்று மீட்டுக் கொள்ள, கடந்த செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியது அந்நீதிமன்றம்.
கடந்த ஆண்டு, விஜய் மல்லையா தன்னுடைய 100 சதவீத கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த முன் வந்தார். அதை ஏற்றுக் கொள்ளுமாறு அரசையும் வலியுறுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.
65 வயதாகும் விஜய் மல்லையா தற்போது லண்டனில் பிணையில் இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவரை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டனின் முன்னாள் உள்துறைச் செயலர் சஜித் ஜாவித் கடந்த பிப்ரவரி 2019-லேயே அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா உட்பட, நீரவ் மோதி, மெஹுல் சோக்சி ஆகியோர், இந்திய அரசு வங்கிகளை ஏமாற்றி, சுமார் 22,585 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை 18,170 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி அல்லது பறிமுதல் செய்து வைத்துள்ளதாக அத்துறையின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விஜய் மல்லையா, நீரவ் மோதி, மெஹூல் சோக்சி கடன் தொடர்பாக, அமலாக்கத் துறை 8,441 கோடி ரூபாயை வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த சொத்துகள் போலி நிறுவனங்கள், போலி டிரஸ்டுகள், குற்றம்சுமத்தப்பட்டு இருப்பவர்களின் உறவுக்காரர்களின் பெயரில் இருந்ததாக, தங்கள் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக அமலாக்கத் துறை குறிப்பிட்டு இருக்கிறது.
விஜய் மல்லையா, நீரவ் மோதி, மெஹூல் சோக்சி ஆகியோரை இந்தியா அழைத்து வருவதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், விஜய் மல்லையா இந்தியாவுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அச்செய்தியறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.