வீரப்பனின் நிறைவேறாத இறுதி ஆசை - எப்படியிருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்?

திங்கள், 18 அக்டோபர் 2021 (11:27 IST)
தமிழ்நாடு அதிரடிப்படையால் `சந்தனக் கடத்தல்' வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ` காடுகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போதும் அதே சூழலில்தான் பழங்குடிகள் வசிக்கின்றனர்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம். என்ன நடக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில்?
 
2004 அக்டோபர் 18. தமிழ்நாடு அதிரடிப்படையினரின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே `ஆபரேஷன் கக்கூன்' என்ற பெயரில் தமிழ்நாடு அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜய்குமார் ஐ.பி.எஸ், வீரப்பனுக்கு முடிவு கட்டிய நாளாகவும் இதனைக் கொண்டாடுகின்றனர். அதேநேரம், வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தாலும், அதுகுறித்து அதிரடிப்படை தரப்பிலோ அந்தக் காலகட்டத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டைக்காகச் சென்றவர்களிடம் இருந்தோ எந்தப் பதிலும் வெளிவரவில்லை. அன்றைய காலகட்டத்தில் தனது ஆட்சியின் சாதனையாகவும் இதனை ஜெயலலிதா கருதினார்.
 
184 வழக்குகள்; 15 கொலைகள்
சந்தன மரம் கடத்தல், யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் எனப் பல்வேறு முகங்களைக் கொண்ட வீரப்பன், 108 நாள்கள் `கன்னட சூப்பர் ஸ்டார்' ராஜ்குமாரை சிறை வைத்ததை மிகப் பெரிய கடத்தலாக காவல்துறையினர் கருதுகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மூன்று மாநில வனத்துறைக்கும் சிம்ம சொப்பனமாக வீரப்பன் இருந்தாலும் கேரளாவில் ஒரே ஒரு குற்ற வழக்கு மட்டுமே அவர் மீது பதிவாகியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடியில் பதிவாகியுள்ள அந்த வழக்கு, அந்தப் பகுதியில் அவர் ஆயுதங்களோடு சுற்றியதாக விவரிக்கிறது.
 
வீரப்பன் மீது பதிவாகியுள்ள 184 வழக்குகளில் 99 வழக்குகள் தமிழ்நாட்டிலும் 84 வழக்குகள் கர்நாடகாவிலும் ஒரே ஒரு வழக்கு கேரளாவிலும் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் பதிவான வழக்குகளில் 15 வழக்குகள் கொலைகள் தொடர்புடையவை. மற்றவை ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இதில் முக்கியமான வழக்குகள் என்றால் தமிழ்நாடு டி.எஸ்.பி சிதம்பரநாதன் கடத்தல், கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தல், நடிகர் ராஜ்குமார் கடத்தல் ஆகியவை.
 
`தமிழ்நாட்டின் ஒகேனக்கல், பாலக்கோடு முதல் கர்நாடகாவின் குடகு மலை வரையிலும் கேரள மாநிலம் வரையில் சுமார் 200 கிலோமீட்டருக்கு மேல், வீரப்பனைப் போல காடுகளை அளந்து நடந்தவர் யாருமில்லை' என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். காடுகளில் வாழும் மக்களின் பழக்கவழக்கம், விலங்குகள், பறவைகள், நீர்வழிப் பாதைகள் என அனைத்தையும் துல்லியமாக அறிந்தவராகவும் பார்க்கப்படுகிறார். வீரப்பன் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் ஆனாலும், தற்போதும் அவரை கொண்டாடும் வழக்கம், வட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் உள்ளது.
 
அதிகரித்த நிலங்களின் மதிப்பு
 
`` வீரப்பன் இல்லாத காடுகளின் தற்போதைய நிலை என்ன?" என மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். இவர் பலமுறை வீரப்பனை பேட்டி எடுத்தவர். இதற்காக சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது, அரசு தூதுவராக காட்டுக்குள் சென்றவர். தற்போது `வீரப்பன்; வாழ்ந்ததும் வீழ்ந்ததும்' என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக புத்தகங்களை எழுதியுள்ளார்.
 
`` வீரப்பன் உயிரோடு இருந்தவரையில், தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதி, பர்கூர் ஆகிய பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் நிலம் என்பது 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரையில் விலை போனது. 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மறைவுக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டில் இருந்து ஒரு ஏக்கர் நிலம் 2 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரையில் விலை போனது. அதாவது, சமவெளியில் வசித்த மக்கள், காடுகளில் உள்ள பழங்குடிகளிடம் இருந்து நிலங்களை வாங்கினார்கள். தற்போது 25 லட்ச ரூபாய் வரையில் ஒரு ஏக்கர் நிலம் விலை போகிறது. நிலத்தின் விலை உயர்ந்தாலும் பூர்வகுடி மக்களின் நிலங்கள் பறிபோய்விட்டன" என்கிறார் சிவசுப்ரமணியம்.
 
தொடர்ந்து பேசியவர், `` காடுகளில் வசித்த மக்கள் தங்களின் உணவுத் தேவைக்காக ராகியை பயிரிட்டு வாழ்ந்தனர். கொஞ்சம் தேவைப்பட்டால், மொச்சை, தட்டைப் பயிர் எனப் பணப் பயிர்களை பயிரிடுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. தங்களின் உணவுக்காக மட்டும் விளைவித்து வாழ்ந்த அந்த சமூகத்திடம் பண ஆசை உள்பட பல்வேறு காரணங்களைக் காட்டி சமவெளியில் உள்ளவர்கள் நிலம் வாங்கிக் கொண்டனர். தற்போது பழங்குடி மக்களின் நிலங்கள் என ஓரளவுக்கு மட்டுமே உள்ளன. பழங்குடிகளுக்கு என கொடுக்கப்பட்ட செட்டில்மெண்ட் நிலங்களும் உள்ளன.
 
வனக்கொள்ளை அதிகரித்ததா?
அவர்களிடம் நிலங்கள் இருந்த வரையில் மானாவாரி பயிர்களை மட்டும் விளைவித்தனர். சமவெளியில் இருந்து அங்கு சென்றவர்கள், 1,200 அடி வரையில் போர் போட்டு வாழை, கரும்பு, உருளைக் கிழங்கு, இஞ்சி எனப் பணப் பயிர்களை விளைவிக்கின்றனர். இதனால் கடந்த 2,3 ஆண்டுகளாக வனப்பகுதியில் உள்ள பெரும்பாலான சிற்றோடைகள் எல்லாம் வறட்சியை நோக்கிச் செல்கின்றன. மழைக்காலத்தில் மட்டுமே அங்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் விலங்குகள் எல்லாம் மடைமாற்றப்படுகின்றன.
 
பழங்குடிகளின் மேய்ச்சல் தொழிலும் அருகிப் போய்விட்டது. அடுத்த தலைமுறை பழங்குடிகள் எல்லாம் லாரி டிரைவர்களாகவும் ஜே.சி.பி இயந்திரம் ஓட்டுபவர்களாகவும் மாறிவிட்டனர். அவர்களின் பாரம்பரியமான ராகி, கம்பு, சோளம் என்பது கடந்துபோய் ரேசன் அரிசியை வாங்கி சாப்பிடத் தொடங்கிவிட்டனர். மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் விலங்குகளும் உணவுக்காக ரெவின்யூ நிலங்களுக்கு வரத் தொடங்கிவிட்டன. வீரப்பன் இருந்த வரையில் அங்கு நிலம் வாங்குவதற்கே சமவெளி மக்கள் அச்சப்பட்டனர்" என்கிறார்.
 
``யானை தந்தம் கடத்தல் உள்பட வனக் கொள்ளைகளும் அதிகரித்துவிட்டதை அறிய முடிகிறதே?" என்றோம். `` உண்மைதான். வீரப்பன் என்ற தனி நபரைத் தேடி கர்நாடகா அதிரடிப்படை தரப்பில் ஆயிரம் போலீஸாரும் தமிழ்நாடு அதிரடிப்படையில் 750 போலீஸாரும் இருந்தனர். அந்த 1,750 பேரும் காட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்ததால் வனக் கொள்ளை என்பது அறவே இல்லாமல் இருந்தது. வீரப்பன் மறைவுக்குப் பிறகு இவர்கள் 1,750 பேரும் வெளியே வந்துவிட்டதால் வனக்கொள்ளை அதிகரித்துவிட்டது.
 
பழங்குடிகளுக்கு பாதிப்பா?
 
வீரப்பன் உயிரோடு இருந்த வரையில் கர்நாடகா அரசியல் தலைவர்களும் வனத்துறையும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி காட்டுக்குள் சென்றது கிடையாது. தற்போது அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் செல்கின்றனர். வீரப்பன் இருந்திருந்தால் மேக்கேதாட்டு பக்கம் அணை கட்டுவதற்கு அவர்கள் வந்திருக்க மாட்டார்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிரடிப்படை அதிகாரிகளே வருத்தப்படுகின்றனர்" என்கிறார்.
 
இதையடுத்து, காடுகளில் வசிக்கும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக பேசிய சிவசுப்ரமணியம், `` கடந்த ஒரு வாரகாலமாக தருமபுரி வனக்கோட்டத்தில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு வனத்துறையினர் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். 1847 ஆம் ஆண்டு வன உயிரின சட்டத்தின்படி, `இந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது, நீங்கள் எல்லாம் குடும்பத்துடன் வெளியேற வேண்டும்' எனக் கூறி வருகின்றனர். அங்கு 180-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் குடும்பத்தினர் அனைவரும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளையொட்டி வசிக்கின்றனர். தண்ணீர் வடிந்த பிறகு விவசாயம் செய்வது அவர்களின் வழக்கம். மற்ற நேரங்களில் ஆடு, மாடுகளை மேய்ப்பது அவர்களின் வழக்கம்.
 
இவர்களில் பலர் 100 மாடுகளை வைத்திருக்கிறார்கள். இந்த மாடுகள் சராசரியாக ஆண்டுக்கு 40 கன்றுக் குட்டிகளை போடும். பால் கறப்பதற்கு இவர்கள் மாடுகளை பயன்படுத்த மாட்டார்கள். இவர்கள் மாடுகளை விட்டு வெளியேறினால் நாட்டு மாடு இனங்கள் அழியும். வீரப்பன் இல்லாததால்தான் வன எல்லையைப் பெருக்குகிறோம் என்ற பெயரில் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர்" என்கிறார்.
 
வீரப்பனின் நிறைவேறாத ஆசை
``வீரப்பனோடு நீங்கள் நெருங்கிப் பழகியவர். அவருக்கு என்று எதாவது விருப்பங்கள் இருந்ததா?" என்றோம். `` ஆமாம். வீரப்பனுக்கு நிறைவேறாத ஆசை ஒன்றும் இருந்தது. வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டை குறித்தும் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் 2000 ஆம் ஆண்டில் சதாசிவம் கமிஷன் அமைக்கப்பட்டது.
 
இப்படியொரு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 97 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டது. ஆணையமானது, 2004 வரையில் விசாரணை நடத்தியது. 2007 ஆம் ஆண்டில் 89 குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக 295 பேர் கொடுத்த புகார்களை வடிகட்டி அதில் 195 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அதிரடிப்படையின் நடவடிக்கையால் கண் பார்வை பறிபோனது, கால் இழந்தது, நடை பிணமாக மாறியவர்கள் என 89 பேரின் துயரங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டது. மற்றவர்களின் பாதிப்புகளுக்கு போதிய ஆதாரம் இல்லை.
 
இதற்குக் காரணம், காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது போலீஸ் அழைத்துச் சென்றது மட்டுமே தெரியும். அவர்கள் கொல்லப்பட்டு எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரால் நிரூபிக்க முடியவில்லை. `அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும்' என்பது வீரப்பனின் விருப்பமாக இருந்தது. அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. இந்தக் கொடூர சம்பவங்களுக்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும் சதாசிவம் கமிஷன் முன்வைத்தது. அது இன்றளவும் கிடப்பில்தான் உள்ளது" என்கிறார்.
 
வீரப்பனின் கடைசி நிமிடங்கள்
 
தொடர்ந்து வீரப்பனின் கடைசி நிமிடங்கள் குறித்துப் பேசிய சிவசுப்ரமணியம், `` அவர் பலமிழந்த நிலையிலும் உடல் மெலிந்த நிலையிலும் தடுமாற்றத்தில் இருந்ததாக காவல்துறையினர் சொல்கின்றனர். அது நம்பும்படியாக இல்லை. அவரின் கூட்டாளிகளின் எண்ணிக்கையும் நான்காக குறைந்துவிட்டது. தமிழ்நாடு மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் புரட்சிகர எண்ணம் கொ
 
ண்ட இளைஞர்களைக் காட்டுக்குள் கூட்டி வந்து ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இருந்தார். அதற்காக ஆயுதங்கள் வாங்குவது, ஆள்களை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்" என்கிறார்.
 
அடுத்ததாக, வீரப்பனின் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்த `ஆபரேஷன் கக்கூன்' குறித்துப் பேசியவர், `` கைகள் கட்டப்பட்ட நிலையில் வீரப்பன் பிடிபட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாடகம்தான் அது. 2002 ஆம் ஆண்டு `ஆபரேஷன் ரூட்ஸ்' என்ற பெயரில் வீரப்பனின் வேர்களைத் தேடி என்ற நடவடிக்கையை அதிரடிப்படை தொடங்கியது. அது 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மரணத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. வீரப்பனுக்குத் தேவையான ஆயுதங்களை ஒரு பிரிவினர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு நடந்த குண்டு வெடிப்பு பயிற்சியில் ஒரு கிரானேடை வெடிக்கச் செய்து வீரப்பனை சாய்த்துள்ளனர். பின்னர் ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் அவரை வைத்த பிறகு மறுநாள் அதிரடிப்படை அரங்கேற்றிய நாடகம்தான் `ஆபரேஷன் கக்கூன்'.
 
டி.எஸ்.பி உசேன் தலைமையிலான 12 பேர் கொண்ட கமாண்டோ படையினர், பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீரப்பன் சென்றதாகச் சொல்லப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த 12 பேரில் 7 பேரை நான் சந்தித்துப் பேசிவிட்டேன். அந்த ஏழு பேரும், `எங்களை எதற்காக சுடச் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், ஆம்புலன்ஸில் இருந்து வீரப்பன் எதிர்த் தாக்குதல் நடத்தவில்லை' என்றனர். அந்த ஆம்புலன்ஸில் வீரப்பன் உயிரோடு இருந்ததற்கான எந்தத் தடயங்களும் இல்லை. அந்த ஆம்புலன்ஸில் இருந்து கைப்பற்றப்பட்ட நான்கு துப்பாக்கிகளும் கடைசி நேரத்தில் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த முரண்பாடுகளை எல்லாம் `வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்' புத்தகத்தில் விரிவாகக் கூறியிருக்கிறேன்" என்கிறார் சிவசுப்ரமணியம்.
 
வீரப்பன் புதைத்து வைத்த பணம்
 
``ஆள் கடத்தல் மூலம் கிடைத்த பெரும் பணத்தை காடுகளுக்குள் வீரப்பன் புதைத்து வைத்திருந்ததாகவும் அதனைத் தேடி சிலர் சென்றதாகவும் கூறப்பட்டதே, உண்மையா?" என்றோம். `` ஆமாம். வீரப்பன் புதைத்து வைத்த பணத்தைத் தேடி பொதுமக்களில் சிலர் சென்றனர். அவர் வழக்கமாக தங்கும் பாறைகள், நீர் நிலைகளையொட்டியுள்ள பகுதிகளில் சென்று பார்த்தனர். ஒரு சில இடங்களில் அரிசி, பேட்டரி செல்கள், மைக்ரோ டேப்ரிகார்டர் போன்றவற்றை எடுத்துள்ளனர். ஆனால், பணம் யாருக்கும் கிடைக்கவில்லை.
 
அவருடைய பணம் அதிகப்படியாக சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் புதைத்து வைக்கப்பட்டதாகவும், ` எனக்கு உதவி செய்தவர்களுக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை' என 2004 ஆம் ஆண்டு வாக்கில் பென்னாகரம் காட்டுப்பகுதியில் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் வீரப்பன் கூறியிருக்கிறார். மேலும், `இனி சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்குச் சென்று வந்தால்தான் பணம் கிடைக்கும்' எனவும் கூறியுள்ளார்.
 
அந்தப் பணத்தை தற்போது கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். காட்டுப்பகுதிகளில் நீர் நிலைகளின் அருகில் புதைத்து வைத்திருந்தால் மண் சரிவு, மண் அரிப்பு போன்றவற்றால் அந்தப் பணம் புதைந்து போயிருக்கும். இவர்கள் எப்போதும் மேட்டுப்பகுதிகளில் மண் மூடாத பகுதிகளில்தான் புதைத்து வைப்பார்கள். தொடர்ந்து மழை பெய்தாலும் அந்தப் பணத்துக்கு எந்த சேதாரமும் ஏற்படாது. அந்தப் பகுதிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கும் வாய்ப்பில்லை. அவை மண்ணோடு புதைந்து போவதற்கே வாய்ப்புகள் அதிகம். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அந்தப் பணமும் செல்லாததாக ஆகிவிட்டன" என்கிறார்.
 
அரசு செய்யத் தவறியது என்ன?
 
``காடுகள் மற்றும் காடுகளையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போது அதே சூழலில்தான் அந்தப் பகுதிகள் உள்ளன. அங்குள்ள பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. காட்டுக்குள் பாதுகாப்பாக அவர்கள் வாழ்வதற்கான சூழல்கள் இல்லை. அங்குள்ள இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. வனத்துறையில் பழங்குடிகளை பணியமர்த்தினால், அவர்கள் காட்டுக்கு விசுவாசமாக இருப்பார்கள். இதன்மூலம் வெளியில் இருந்து வருகிறவர்கள் நடத்தும் வனக்கொள்ளை தடுப்பதில் அவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
 
காட்டில் மூங்கில்களை வெட்டவே கூடாது என தமிழ்நாடு வனத்துறை சொல்கிறது. ஒரு மூங்கிலை வெட்டினால் அது ஆறாகப் பெருகும். அதை வெட்டி கூடை பின்னி விற்பார்கள். காடு காடாகவே இருக்க வேண்டும் என வனத்துறை நினைப்பதால் அவர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதேநேரம், காட்டைவிட்டு பழங்குடிகள் வெளியே செல்லாதவாறு அவர்களின் வாழ்வாரத்தை கர்நாடக அரசு பாதுகாக்குகிறது. ஆனால், தமிழ்நாடு வனத்துறை அவர்களை வெளியே தள்ளுவதற்கே விரும்புகிறது. வீரப்பனை போன்று இன்னொரு நபர் உருவாகக் கூடாது என்றால், அதற்கான பிரச்னைகளை களைவதுதானே சிறப்பான ஒன்றாக இருக்கும்?" என்கிறார் பெ.சிவசுப்ரமணியம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்