இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுரா ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இம்முறை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இயல்பைவிட 151 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக திரிபுரா அமைச்சர் ஒருவர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழப்பட்டு சுமார் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு வியாழக்கிழமை மாலை தெரிவித்தது.
இந்த மாதத்தில் கோமதி மாவட்டத்தில் மட்டும் 656.6 மிமீ மழை பதிவாகி உள்ளதாக திரிபுரா மின்சாரத்துறை அமைச்சர் ரத்தன்லால் நாத் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.
இது இயல்பான அளவைவிட 234 சதவீதம் (196.5 மிமீ) அதிகம். இந்த மாவட்டத்தில்தான் கோமதி நீர்மின் நிலையத்தின் கீழ் தம்பூர் (Dambur) தடுப்பணை உள்ளது.
திரிபுரா தலைநகர் அகர்தலா உட்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனுடன், ஹவுரா, கோவைஸ் முஹுரி, தலாய் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து ஆறுகளும் அபாய அளவைத் தாண்டிப் பாய்கின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தம்பூர் அணை உண்மையில் திறக்கப்பட்டதா?
திரிபுராவின் அணை திறக்கப்பட்டது மற்றும் வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை குறித்து இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திரிபுரா மாநில அரசும் தம்பூர் அணை தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல வங்கதேச அமைப்புகள் தங்கள் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம்சாட்டி வருகின்றன. திரிபுராவில் உள்ள தம்பூர் அணை திறக்கப்பட்டதால் வங்கதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக இந்த அமைப்புகள் கூறின.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிபுராவின் கும்டி ஆற்றில் தம்பூர் அணை திறக்கப்பட்டதால் வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மை கிடையாது.”
மேலும், இந்தியா மற்றும் வங்கதேசம் வழியாகப் பாயும் கும்டி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது” என்று கூறியுள்ளது.
இந்தப் பகுதிகளில் இருந்து தண்ணீர் கீழ் நோக்கிப் பாய்ந்ததால் வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக இந்தியா கூறுகிறது.
திரிபுரா தம்பூர் அணை வங்கதேச எல்லையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது உயரம் குறைவான அணை, வங்கதேசத்துக்கு 40 மெகாவாட் மின்சாரம் வழங்குகிறது.
தற்போதைய வெள்ளத்தால் அதிக சேதம் ஏற்பட்ட மாவட்டங்களில் கோமதியும் இடம் பெற்றுள்ளது. இதே மாவட்டத்தில் உள்ள கும்டி நீர்மின் நிலையத்தின் தம்பூர் ஸ்லூஸ் கேட் (Dumbur sluice gate) திறக்கப்பட்டதால், வங்கதேசத்தின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த நீர்மின் திட்டம் திரிபுரா மின்சாரத் துறையின் கீழ் உள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "தம்பூர் அணையின் கதவணை திறக்கும் விவகாரத்தில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வெறும் பொய்ப் பிரசாரம். இதுபோன்ற செய்திகள் ஆதாரமற்றவை. கோமதி நீர்மின் நிலையத்தின் கீழ் கட்டப்பட்ட தம்பூர் அணையின் எந்தக் கதவும் திறக்கப்படவில்லை" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்த மையத்தில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச சேமிப்புக் கொள்ளளவு, 94 மீட்டர். இதைத் தாண்டி நீர் பாயும்போது, உபரிநீர் தானாகவே கதவணையில் இருந்து வெளியேறும். நீர் மட்டம் குறையும்போது, கதவுகள் தானாக மூடப்படும்" என்றார்.
தற்போது, நீர் இருப்பு கொள்ளளவைவிட அதிகமாக உள்ளதால், இரண்டு கதவணைகளில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதில் ஒரு கதவணையில் இருந்து, 50 சதவீதம் நீர் வெளியேறி வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுபற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளத்தை திரிபுரா கண்டதில்லை என்று அவர் கூறினார்.
திரிபுரா அமைச்சர் ரத்தன் லால் கூறுகையில், “கடந்த 1993ஆம் ஆண்டு அதிகபட்சமாக ஆகஸ்ட் 21ஆம் தேதி மாநிலத்தின் சப்ரூம் மாவட்டத்தில் ஒரே நாளில் 247 மி.மீ மழை பதிவானது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி நடக்கிறது. ஒரே நாளில் 24 மணிநேரத்தில் இவ்வளவு அதிகளவிலான மழை பெய்துள்ளது.
மாதாந்திர கணக்கீடுகளைப் பார்த்தால், வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 214 மிமீ மழை பெய்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். ஆனால் அதற்குப் பதிலாக 151 சதவீதம் கூடுதலாக 538.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்றார்.
இதுபோன்ற அதிக மழைப்பொழிவு காரணமாக, 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற பேரழிவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்றார்.
ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள்
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) தலைநகர் அகர்தலாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மாநில நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள 450 நிவாரண முகாம்களில் தற்போது 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாக மாநில நிவாரணம், மறுவாழ்வு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மேலாண்மையின் பல கூடுதல் குழுக்கள் மாநிலத்திற்கு வந்துள்ளன. இதுதவிர, மாநில பேரிடர் மேலாண்மைத் துறை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் திரிபுரா மாநில ரைபிள்ஸ் வீரர்களின் குழுக்களும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம், வெள்ளிக்கிழமை மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணித்தது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசத்தின் வடக்குப் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
டீஸ்டா படுகையில் நிலவரம் என்ன?
மேற்கு வங்கத்தை ஒட்டிய மலைப்பகுதியான சிக்கிம் மாநிலத்தில் இருந்து உற்பத்தியாகும் டீஸ்டா நதியின் நீர்மட்டமும் அபாய அளவை எட்டியுள்ளதாக வங்கதேச நாளிதழ்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் ஓடும் ஆறுகள் குறித்த நிபுணரும், அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலருமான ராஜு பாசு, சிக்கிமில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், ஆனால் தற்போது கனமழை பெய்து வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது டீஸ்டா படுகையில் கன மழை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அவர் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "தற்போது வெயிலும் மழையும் மாறி மாறி வருகிறது. இதனால், நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், ஆற்றுப் படுகையிலோ அல்லது கஜல்தோபா தடுப்பணையிலோ ஆபத்துக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை."
டீஸ்டா - கஜல்தோபா மற்றும் கலிஜோடாவில் கட்டப்பட்டுள்ள இரண்டு அணைகளின் நீர்மட்டம் இயல்பான நிலையில் உள்ளதாக மேற்கு வங்க அரசின் நீர்ப்பாசனத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் கஜல்தோபா அணையில் இருந்து 1045.92 கன அடி தண்ணீரும், கலிஜோடா அணையில் இருந்து 1027 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டதாக அணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டீஸ்டா பிரச்னை மிகவும் பழையது என்கிறார் ராஜ் பாசு. இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த ஆண்டு அக்டோபரில் பனிமலை ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், டிஸ்டா ஆற்றில் அதிக அளவில் கற்கள், மண், வீட்டுக் குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் ஆற்றின் ஆழம் குறைந்துள்ளது."
"சிறிது மழை பெய்தாலே ஆற்றங்கரைகளில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு இதுவே காரணம். ஆனால் தற்போது அப்படியொரு நிலை ஏற்படவில்லை."
"இந்தப் பிரச்னையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. இதற்கு நீண்டகாலத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது மத்திய அல்லது இரு மாநில அரசுகளான சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து அத்தகைய முயற்சி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை" என்றார்.
மறுபுறம், ஃபராக்கா ஆற்றின் நீர்மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளதால், புதன்கிழமை முதல் தடுப்பணையின் சில கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக ஃபராக்கா அணையின் வட்டாரங்கள் தெரிவித்தன. இதை உறுதிப்படுத்த முயன்ற போதிலும், ஃபராக்கா நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை.