முத்தலாக் தீர்ப்பு இந்திய முஸ்லிம் பெண்களுக்கு உதவியிருக்கிறதா?
வியாழன், 15 செப்டம்பர் 2022 (22:43 IST)
தலாக் (விவாகரத்து) என்ற வார்த்தையை மூன்று முறை வெறுமனே சொன்னால் சில நிமிடங்களில் மனைவியிடம் இருந்து இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஆண் விவாகரத்து பெற்று விடலாம் என்பதை அனுமதிக்கும் முத்தலாக் எனும் இஸ்லாமிய நடைமுறை, சட்டவிரோதம் என 2017ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வந்த சமயத்தில் பெண்ணுரிமையாளர்களால் அது கொண்டாடப்பட்டது. தீர்ப்பு வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் பல இஸ்லாமிய பெண்கள் இந்த தீர்ப்பின் காரணமாக தங்கள் வாழ்க்கை நிச்சயமற்றதாகி விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அஃப்ரீன் ரெஹ்மான் உற்சாகமடைந்தார். தீர்ப்பு வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கணவர் ஒரு தலைபட்சமாக உடனடி விவாகரத்து பெற்றது சட்டப்படி செல்லாது என்பதால் அவர் உற்சாகத்தில் இருந்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாகவே எல்லாம் நடந்தது. தீர்ப்பு காரணமாக எந்த ஒரு விஷயமும் மாறவில்லை. அவரது கணவர் அவருடன் சேர்ந்து வாழ அவரை அழைக்கவில்லை.
ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த வழக்கினை தொடர்ந்த ஐந்து பெண்களில் ஒருவரான ரெஹ்மானுக்கு தான் இன்னும் திருமணமான பெண்தானா அல்லது விவாகரத்து பெற்றவரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய இதர மூன்று பெண்களின் நிலையும் இதே கதையாகத்தான் இருக்கிறது. அவர்கள் இன்னும் விவாகரத்து ஆனவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுடைய கணவர்களால் அவர்கள் இன்னும் சேர்ந்து வாழவருமாறு அழைக்கப்படவில்லை.
பாரதிய இஸ்லாம் மகிளா அந்தோலன் என்ற மகளிர் உரிமை அமைப்பின் துணை நிறுவனர் ஜைகியா சோமான் என்பவரும் இந்த வழக்குத் தொடர்ந்த மனுதாரர்களில் ஒருவராவார். அவர், "2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு , அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் முத்தலாக் நடைமுறையை குற்றமாக கருதியது. இஸ்லாமிய பெண்களிடம் கலவையான வரவேற்பை பெற்றது," என்றார்.
"அவர்களின் கணவர்கள் சந்தோஷமாக மறு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். ஆனால், இந்த பெண்களோ தொடர்ந்து தனியாக வாழ்கின்றனர்," என்றார் சோமான்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாக, முத்தலாக்கை அனுமதிக்கும் கணிசமான நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருந்தது. இஸ்லாமிய பெண்கள், தன்னார்வலர்கள் மேற்கொண்ட முத்தலாக் சட்டவிரோதம் என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திரமோதி தலைமையிலான இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி அரசு முன்னெடுத்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்னணி மனுதாரரான ஷாயாரா பானு, பாஜக ஆளும் வடக்கு மாநிலமான உத்தராகண்ட்டின் பெண்கள் உரிமை குழுவின் துணை தலைவராக ஆக்கப்பட்டார். இன்னொரு மனுதாரரான இஸ்ராத் ஜான் பாஜகவில் இணைந்தார்.
முத்தலாக்
ஆனால், இந்த வழக்கில் தொடர்புடைய இதர மனுதாரர்கள் போராட்டத்தின் பிடியில் இருக்கின்றனர். ரெஹ்மான், இத்தனை வருடங்களாக நிலையான வருவாய் தரும் வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறார். அதியா சாபாரி, தன் கணவர் மீது தொடுத்த விவாகரத்து வழக்கில் பாதியளவு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், தொடர்ந்து அவர் அவரது பெற்றோரிடமே தங்கியிருக்கிறார்.
எனினும், முத்தலாக் நடைமுறை குற்றம் என்ற சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகியவை சமூக மட்டத்தில், மாற்றத்தை கொண்டுவந்திருப்பதாக சமூக நோக்கர்கள் சொல்கின்றனர்.
"முத்தலாக் என்பது கடவுளின் சட்டம் அல்ல என்ற விழிப்புணர்வை சமூகத்தில் இது கொண்டு வந்திருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள எங்களின் தன்னார்வலர்களின் தகவல்களின்படி முத்தலாக் குறித்த வழக்குகள் எண்ணிக்கை இப்போது குறைந்திருப்பது தெரியவந்துள்ளது," என்றார் சோமான்.
ஆனால், அதே நேரத்தில் ஆண்கள் தங்கள் மனைவியரை அனாதையாக விட்டு சென்றிருப்பது அதிகரித்திருக்கிறது. சட்டத்தின்படி விதியை மீறும் கணவர்கள் தங்களின் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை பெற முடியும் . ஆனால் இது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக பல இஸ்லாமிய ஆண்கள், தங்களது மனைவிகளை கொஞ்சம் கூட பொறுப்புடைமை இன்றி ஆதரவின்றி அனாதையாக விட்டுள்ளனர்.
தென்மாநில நகரங்களில் ஒன்றான ஐதராபாத்தில் உள்ள ஷகீன் பெண்கள் வளம் மற்றும் நல சங்கத்தை நடத்தி வரும் ஜமீலா நிஷாத், முத்தலாக் தடை சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அது குறித்து ஆய்வு செய்ய ஐதராபாத்தில் உள்ள 20 குடிசைப்பகுதிகளில் திருமணம் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்ய தன்னார்வலர்களை அனுப்பினார்.
"2,106 குடும்பத்தினரிடம் புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டதில் 683 பெண்கள் அவர்களின் கணவர்களால் அனாதைகளாக விடப்பட்டுள்ளனர்," என்றார். "முன்பு இரண்டு-மூன்று சம்பவங்களில்தான் இதுபோல அனாதைகளாக விடப்பட்டனர். ஆனால், இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து வழக்குகள் திடீரென அதிகரித்து விட்டன, " என்றார் நிஷாந்த்.
நீதிமன்றத்தில் முத்தலாக் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைப்பான அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் உஷ்மா நகீத், மும்பையிலும் இதே போன்ற நிலை இருப்பதாக கூறினார்.
"பெண்களை பராமரிப்பதை ஆண்கள் தவிர்க்க நினைப்பதால் இது நிகழ்கிறது," என்றார் நகீத். "இது மிகவும் வலி தரக்கூடியது. இந்த சட்டம் அவர்களுக்கு உதவவில்லை" என்றார் வேதனையுடன்.
பெண்களால் முன்னெடுக்கப்படும் குலா என்று அழைக்கப்படும் விவாகரத்து கோரும் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது என்று இந்த வழக்குகளை உற்றுநோக்குவோர் கூறுகின்றனர். குலா விவாகரத்து கேட்கும் பெண்களுக்கு அது கொடுக்கப்படுவதால் உடனடி விவாகரத்து கேட்கும் கடமையை ஆண்கள் கொண்டிருக்கமுடியாது.
ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் களத்தில் இருக்கும் சமூக மத அமைப்பான இமாராத்-இ-ஷரியா அமைப்பின் தலைமை மதத் தலைவரான அன்சார் அலாம் குவாஸ்மி, "இரண்டு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தையை ஒருங்கிணைப்பதன் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண எங்களால் ஆன முயற்சிகளை செய்கின்றோம். பெரும்பாலான வழக்குகளில் சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது," என்றார். ஆனால், "பெண்கள் விவாகரத்து கேட்கும் நிகழ்வுகள் உண்மையில் அதிகரித்திருப்பதாக எங்கள் மையங்களில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன," என்றார்.
உடனடி தலாக், குலா ஆகியவை குறித்த நாடு முழுவதற்குமான ஒட்டுமொத்த தரவுகளின் தனித்தனி அம்சங்கள் கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களாக குலா கோரும் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதால் தாருக் குவாஷாஸ் எனும் பல இஸ்லாமிய தீர்வு மையங்கள் ஆங்காங்கே காணப்படுவதாக தி இந்து நாளிதழ் கூறுகிறது.
தீர்க்கமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய பெண்கள் இருப்பதையும், நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. ஆனால், தவிர இந்த நடைமுறையும் ஆண்களால் அடிக்கடி சுரண்டலுக்கு உள்ளாகிறது.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கலீதியா பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடினமான சூழலை கடந்து வந்திருக்கிறார். 2021ஆம் ஆண்டு அக்டோபரில் அவருக்கு திருமணம் ஆனது. அவருடைய கணவரின் உறவினர்களின் வன்முறையால் அவர் விவகாரத்துக் கோரினார். கணவர் விவாகரத்து தர மறுத்தார். அதற்கு பதில் குலா கேட்கும்படி கணவர் சொன்னார். இதன் மூலம் மனைவி ஜீவனாம்சம் கோரும் உரிமையை இழந்து விடுகிறார்.
ஒரே ஒரு நிபந்தனையுடன் இதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்தார். அவருடைய கணவரும், அவருடைய குடும்பத்தினரும் அவருக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை ஏவியதே குலாவுக்கு காரணம் என எழுத்துபூர்வமாக எழுதித் தர வேண்டும் என்று கேட்டார். எதிர்பார்த்தபடி அதற்கு அந்த கணவர் சம்மதிக்கவில்லை. முட்டுக்கட்டையில் இருந்து வெளியே வரும் வகையில் அந்த நிபந்தனையை கைவிடும்படி கலீதியாவின் தாய் அவருக்கு யோசனை கூறினார். ஆனால், அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை.
"நான் ஏன் குற்றத்தை சுமக்கவேண்டும். அவர் என்னதான் செய்யவில்லை? அவர்தான் அதில் இருந்து வெளியே வரவேண்டும். ஆனால், சகிப்புத்தன்மை மற்றும் எல்லாவற்றுக்கும் மத்தியில், நானே மோசமான ஒரு நபராகப் பார்க்கப்பட்டேன்," என்று பிபிசியிடம் கலீதியா கூறினார். இப்போதும் கூட அவரது போராட்டம் தொடர்கிறது.