டோக்யோ ஒலிம்பிக்: தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை

செவ்வாய், 27 ஜூலை 2021 (09:48 IST)
டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ( Street Skateboarding) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானின் மோம்ஜி நிஷியா.
 
"நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பாக்கவில்லை. ஆனால் என்னை சுற்றியிருந்தவர்கள் எனக்கு உற்சாகமூட்டினர். நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்கிறார் அந்த 13 வயது வீராங்கனை.

ஸ்கேட்போர்டிங் இந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் ஒலிம்பிக் வரலாற்றின் முக்கிய பக்கங்களில் இடம்பெறுகிறார் நிஷியா.
 
"ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இளம் வீராங்கனை என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி" என்கிறார் நிஷியா.
 
இந்த போட்டியில் 13 வயது பிரேசில் வீராங்கனை ரேய்சா லீல் வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் 16 வயது ஃபனா நகாயாமா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
 
எதிர்காலத்தின் நிகழ்காலம்
 
இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் என்ற பெருமை மர்ஜோரி ஜெஸ்ட்ரிங்கிடம் இருந்தது. ஸ்பிரிங்போர்ட் விளையாட்டிற்காக 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்ற இவருக்கு வயது 13 வருடம் 267 நாட்கள் அதாவது நிஷியாவை காட்டிலும் 63 தினங்கள் இளையவர்.
 
ஆண்களுக்கான ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ஜப்பானை சேர்ந்த 22 வயது யூடூ ஹோரிகோம் தங்கப் பதக்கம் வென்றார்.
 
தனது அண்ணனால் இந்த விளையாட்டுக்கு கவர்ந்திழுக்கப்பட்ட போது நிஷியாவுக்கு வயது ஐந்து.
 
வெள்ளிப் பதக்கம் வென்ற 13 வயது ரேசா லீலும் சளைத்தவர் அல்ல.
 
"இது எனது கனவு. எனது தந்தையின் கனவு என்பதை நான் உணர்ந்தேன்" என்றார் அவர்.
 
பெண்களால் ஸ்கேட்போர்டிங்கில் ஈடுபட முடியாது என்று கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதலளித்த ரேய்சா, "விளையாட்டை பொறுத்தவரை ஆண் பெண் என்ற பேதம் இருக்ககூடாது. ஸ்கேட்போர்டிங் என்பது அனைவருக்குமானது" என்றார்.
ஒலிம்பிக்கில் சாதனை படைக்கவிருக்கும் பிற இளம் வீரர்கள்
ஜெஸ்ட்ரிங்கின் சாதனையை இதே ஒலிம்பிக் போட்டியில் முறியடிக்க மேலும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது. ஆம்.. பார்க் ஸ்கேட் போர்டிங்கில் பிரிட்டனை சேர்ந்த ஸ்கை ப்ரவுன் பங்கு பெறுகிறார். இந்த போட்டி ஆகஸ்டு 4ஆம் தேதி நடைபெறும். இவருக்கு வயது 13 வருடம் 28 நாட்கள்.
 
ஜப்பானின் கோகோனா ஹிராகி இதே போட்டியில் பங்கேற்கவுள்ளார். இவருக்கு வயது 12 வருடம் 343 நாட்கள். இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இரண்டாவது இளம் வீராங்கனை ஆவார்.
 
இருக்கும் வீரர்களில் குறைந்த வயது சிரியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஹென் சாசாவுக்கு. இவருக்கு 12 வயது.
 
இவர் ஆஸ்டிரியாவை சேர்ந்த லியூ ஜியாவிடம் சனிக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றார்.
 
இவர்களை அடுத்து பிரிட்டனை சேர்ந்த இரண்டையர் ஜிம்நாஸ்டிக் வீராங்கனைகள் ஜேசிகா மற்றும் ஜெனிஃபர் காடிரோவுக்கு 16 வயது.
 
சீனாவை சேர்ந்த 14 வயது குவாங் ஹாங் சான் 10மீட்டர் டைவிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
 
கனடாவை சேர்ந்த 14 வயது மெக்இன்டோஷ் 400மீட்டர் ஸ்ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் கனடா நீச்சல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தார்.
 
அமெரிக்காவை சேர்ந்த 15 வயது நீச்சல் கேட்டி க்ரிம்ஸும் களத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்