ஒரு கிராம் உலோகம் கூட சுரங்கத்திலிருந்து வரவில்லை - உலகை ஈர்த்த ஒலிம்பிக் பதக்கங்கள்

திங்கள், 26 ஜூலை 2021 (10:55 IST)
ஐவர்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் போட்டியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்கள் மட்டுமே பாரம்பரியமாக வழங்கப்பட்டு வருகின்றன.
 
இரண்டாம் உலகப் போரில், இரு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை மார்பில் வாங்கிய நாடு, தன் உழைப்பாலும், புதிய சிந்தனைகளாலும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.
 
பல்வேறு தடைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் பதக்கங்களைச் செய்வதிலும் ஜப்பான் சில புதுமைகளைப் புகுத்தி இருக்கிறது.
 
ஜப்பான் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல்
 
ஒலிம்பிக் பதக்கங்களில் சாமானிய ஜப்பானிய மக்களின் பங்களிப்பு இருக்கும் படி செய்திருக்கிறது. அது எந்த அளவுக்கு சிறப்பானதாக பாராட்டப்பட்டதோ, அதே அளவுக்கு பதக்கத்துக்குத் தேவையான சுமார் 5.7 டன் உலோகத்தில் ஒரு கிராம் கூட சுரங்கத்தில் இருந்து கொண்டு வரவில்லை என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலும் பாராட்டப்பட்டது.
 
ஜப்பான் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதால், மொத்தம் சுமார் 5,000 தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை செய்ய திட்டமிட்டது.
 
டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்களை கிராஃபிக் டிசைனரான ஜுனிச்சி கவனிஷி (Junichi Kawanishi) என்பவர் வடிவமைத்தார். பதக்கங்களின் விட்டம் 85 மில்லி மீட்டர், தடிமன் 12.1 மில்லி மீட்டர் என எல்லாமே ஒரே போலத்தான் இருக்கும்.
 
ஆறு கிராம் தங்கத்தோடு தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் இருக்கும். முழுக்க முழுக்க சுத்த வெள்ளியால் செய்யப்பட்ட வெள்ளிப் பதக்கத்தின் எடை 550 கிராம். 95 சதவீதம் காப்பர் மற்றும் 5 சதவீத ஜிங்க் கொண்ட வெண்கலப் பதக்கம் 450 கிராம் எடை இருக்கும் என்கிறது ஒலிம்பிக்ஸ்.காம் என்கிற வலைதளம்.
 
"டோக்யோ 2020 பதக்கத் திட்டம்" என ஒரு திட்டம் தொடங்கப்பட்டு ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2019 வரையான காலம் வரை 78,985 டன் எலெக்ட்ரானிக் சாதனங்களை ஜப்பானில் இருக்கும் நகராட்சி அதிகாரிகள் திரட்டினர். ஜப்பானில் இருக்கும் மொத்த 1,741 நகரங்கள் மற்றும் நகராட்சிகளில், 1621 நகராட்சிகள் இத்திட்டத்தில் பங்கெடுத்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறது அவ்வலைதளம்.
 
இதில் சிறிய சிறிய எலெட்ரானிக்ஸ் பொருட்கள் தொடங்கி மொபைல் ஃபோன்கள் வரை பலதும் அடங்கும்.இத்திட்டத்துக்காக 62.1 லட்சம் மொபைல் ஃபோன்களை என்.டி.டி டொகொமோ என்கிற நிறுவனம் திரட்டியது.
 
திரட்டிய எலெக்ட்ரானிக் பொருட்களிலிருந்து 32 கிலோ தங்கம், 3,500 கிலோ வெள்ளி, 2,200 கிலோ வெண்கலம் பிரித்து எடுக்கப்பட்டு பதக்க தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டன.
 
இதற்கு முந்தைய 2016 ரியோ ஒலிம்பிக்கில் பாதரசம் இல்லாத தங்கம் பயன்படடுத்தப்பட்டது. பொதுவாக தங்கத்தை பிரித்தெடுக்க பாதரசம் பயன்படுத்தப்படும். ஆனால் ஒலிம்பிக் பதக்கங்களுக்கான தங்கத்தை பிரித்தெடுக்க பாதரசம் பயன்படுத்தப்படவில்லை. வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களில் 30 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.

 
2016 ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை குலுக்கினால் உள்ளே இருக்கும் சிறிய இரும்பு குண்டுகளால் சத்தம் வரும்.
 
தங்க பதக்கத்தில் 28 குண்டுகளும், வெள்ளியில் 20 குண்டுகளும், வெண்கலப் பதக்கத்தில் 16 குண்டுகளும் இருந்தன. எனவே அப்பதக்கத்திலிருந்து வரும் சத்தத்தை வைத்தே அது எந்த பதக்கம் என கண்டுபிடித்து விடலாம்.
 
2017 மே மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது.
2016 ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பல வீரர்கள், தங்களின் ஒலிம்பிக் பதக்கம் உரிந்து வருவதாகவும், கருப்புப் புள்ளிகள் ஏற்படுவதாகவும், பல பிரச்சனைகளை குறிப்பிட்டனர்.
 
பதக்கங்களை மாற்றிக் கொடுக்குமாறு அமெரிக்கா சார்பாக பதக்கம் வென்ற 80 ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள், அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டிக்கு தங்கள் பதக்கங்களை அனுப்பி வைத்ததாக செய்தி வெளியானது.
 
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்
 
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கொடுக்கப்பட்ட பதக்கங்களுக்கு பயன்படுத்திய 99 சதவீத உலோகம், ரியோ டின்டோ என்கிற அமெரிக்க சுரங்க நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்கிறது தி கார்டியன் பத்திரிகையின் செய்தி.
 
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களில், தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்கள் போக ஜேட் என்கிற கல் பயன்படுத்தப்பட்டது என்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமை.
 
ஒலிம்பிக் வரலாற்றிலேயே பதக்கங்களில் கற்கள் பயன்படுத்தப்பட்டது அதுவே முதல் முறை.
 
ஜேட் கற்கள் சீனாவில் ஒரு அந்தஸ்தாக பார்க்கப்படுவதாகவும், அது தீய சக்திகளை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கை பரவலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்