இவ்வறிக்கையை லுகாஸ் சான்செல், தாமஸ் பிக்கெட்டி, இம்மானுவல் சயிஸ், கேப்ரியல் சுக்மென் ஆகிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் ஒருங்கிணைந்து தயாரித்துள்ளனர்.
பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் எழுதிய சமீபத்திய ஆய்வு அறிக்கைகளிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த ஆய்வறிக்கைக்கு நோபல் பரிசு வென்ற பொருளாதார வல்லுநர்களான அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டஃப்லோ ஆகியோர் முன்னுரை எழுதியுள்ளனர்.
2021ஆம் ஆண்டில், உலக அளவில் டாப் 10 சதவீதத்தினர் 52% வருமானத்தையும், 40 சதவீத நடுத்தர மக்கள் 39.5% வருமானத்தையும், மீதமுள்ள 50 சதவீத மக்கள் வெறும் 8.5% வருமானத்தையும் ஈட்டுகின்றனர் என்கிறது இந்த அறிக்கை. இந்த வருமானம் வாங்கும் திறன் அடிப்படையில் கணக்கிடப்படுள்ளது.
2021ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த சொத்து மற்றும் வளங்களை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், டாப் 10 சதவீத பணம் படைத்த மக்கள் 76% வளத்தையும், 40 சதவீத நடுத்தர மக்கள் 22% வளத்தையும், மீதமுள்ள 50% மக்கள் வெறும் 2% வளத்தையும் வைத்துள்ளனர்.
1945 அல்லது 1950 முதல் 1980 வரையான காலத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் சமத்துவமின்மை குறைந்து வந்தது. ஆனால் 1990களிலிருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.
உலக அளவில் டாப் 10 சதவீத பணம் படைத்த மக்களுக்கும் அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்களுக்கும் இடையிலான வேறுபாடு 20 மடங்குக்கு மேல் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டாப் 10 சதவீத மக்கள் மற்றும் அடிமட்டத்தில் உள்ள 50 சதவீத மக்களுக்கு மத்தியில் உள்ள வருமான இடைவெளி 22 மடங்காக இருக்கிறது. 50 சதவீத அடித்தட்டு மக்களின் சராசரி வருமானத்தோடு, டாப் ஒரு சதவீதத்தினரின் வருமானத்தை ஒப்பிட்டால், இடைவெளி 80 மடங்காக உள்ளது.
இந்தியாவின் 50 சதவீத மக்கள் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் வெறும் 13.1% ஈட்டுகின்றனர். டாப் ஒரு சதவீத மக்கள் மட்டும் 21.7% வருமானத்தை ஈட்டுகின்றனர்.
இந்த உலக சமத்துவமின்மை அறிக்கை 2022-ல், இந்தியாவின் வருமான விவரத்தில் காணப்படும் மற்றொரு சுவாரஸ்ய தரவு என்னவெனில், இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 90 சதவீத மக்கள், இந்திய சராசரி வருமானமாக அதில் கணக்கிடப்பட்டுள்ள ஆண்டுக்கு 7,400 யூரோவை (இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் ரூபாய்) விடவும் குறைவாகவே ஈட்டுகின்றனர். அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்கள் ஆண்டுக்கு 2,000 யூரோவும் (சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம்), நடுத்தர 40 சதவீத மக்கள் ஆண்டுக்கு 5,500 யூரோவும் (சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) ஈட்டுகின்றனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து வளத்தில் டாப் ஒரு சதவீதத்தினரிடம் 33% வளமும், அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்களிடம் வெறும் 5.9% வளமும் இருக்கிறது. டாப் 10 சதவீத மக்களிடம் இந்தியாவின் ஒட்டுமொத்த வளத்தில் 64.6% வளத்தை தங்கள் வசம் வைத்துள்ளனர். டாப் ஒரு சதவீதத்தினர் மட்டும் இந்தியாவின் ஒட்டுமொத்த வளத்தில் 33% வைத்துள்ளனர்.
1995ஆம் ஆண்டு முதல் டாப் 10 சதவீத இந்தியர்களின் வளம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கு நேர்மாறாக அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்களின் வளம் குறைந்து கொண்டே வருகிறது என அவ்வறிக்கை கூறுகிறது.
இவ்வறிக்கையில் இந்தியா குறித்த விவரங்களில் ஆறுதல் அளிக்கும் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் பெண்கள் தொழிலாளர் பங்கு கடந்த 1990 முதல் நிலையாக அதிகரித்து வருகிறது. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் பெண்கள் தொழிலாளர்களின் வருமானப் பங்களிப்பு 18.3%ஆக அதிகரித்துள்ளது.