கோவா அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உயிர் பெறும் ஓர் ஊரின் கதை
செவ்வாய், 11 ஜூன் 2019 (20:28 IST)
இப்போது இந்த கிராமம் சிலரின் நினைவில் மட்டுமே வாழ்கிறது. இந்த கிராமம் குறித்து பசுமையான நினைவுகள் அந்த மக்களின் மனதில் இப்போதும் இருக்கிறது. அதனால்தான், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உயிர்பெறும் இந்த கிராமத்தை காண, முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் திரள்கிறார்கள்.
அது எந்த கிராமம்? அந்த கிராமத்திற்கு என்ன ஆனது? - விரிவான தகவல்களை வழங்குகிறார் பிபிசிக்காக செய்தி வழங்கும் கோவாவை சேர்ந்த பத்திரிகையாளர் சுப்ரியா வோரா.
ஒரு நதி, இரு குன்றுகள்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரு குன்றுகளுக்கு மத்தியில் சலவ்லிம் நதிக்கு மத்தியில் உள்ளது கர்டி எனும் கிராமம்.
ஒரு காலத்தில் தென் கிழக்கு கோவாவில் மிகவும் வளமாக இருந்த கிராமம் இது.
அதன் வளம், அதன் செல்வாக்கு என அனைத்தும் கடந்த காலமாகிவிட்டது.
இனி இந்த கிராமம் எப்போதும் இருக்கப்போவதில்லை என 1986ம் ஆண்டு அந்த மக்கள் முடிவுக்கு வந்தனர். இதற்கு காரணம் அந்த பகுதியில் கட்டப்பட்ட கோவாவின் முதல் அணை. ஆம், அந்த அணை கட்டப்பட்ட பின்பு, இந்த கிராமம் முழுவதுமாக நீரில் மூழ்கியது.
அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால், மே மாதத்தில் தண்ணீர் வற்றும் போது, அங்கு ஒரு கிராமம் இருந்ததும் அங்கு மக்கள் வசித்தார்கள் என்பதற்கான தடயமும் வெளியே தெரியும்.
உடைந்த மண் வீடுகள், மரங்கள், கோயில் கட்டடங்கள் என அங்கு பெரும் மக்களின் வாழ்க்கை இருந்ததற்கான சாட்சியங்கள் வெளிப்படும்.
வளமே வாழ்வு
ஒரு காலத்தில் அந்த கிராமம் வளமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ 3000 மக்கள் அங்கு வசித்திருக்கிறார்கள். தென்னை, முந்திரி, மாங்காய், பலா என விவசாயம் அங்கு உயிர்ப்புடன் நடந்திருக்கிறது.
இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அங்கு ஒற்றுமையாக வாழ்ந்திருக்கிறார்கள்.
அங்கு ஒரு கோயில், ஒரு தேவாலயம், மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலம் இருந்திருக்கிறது.
கிளாசிக்கல் பாடகர் மொகுபாய் குர்திகரின் சொந்த ஊர் இது.
ஆனால், 1961ம் ஆண்டு போர்ச்சுகலிடமிருந்து கோவா விடுதலை பெற்ற பின் நிலைமை மாறியது.
முதல்வரின் செய்தி
கோவாவின் முதல் முதல்வர் தயானந்த் பண்டோட்கர் அந்த கிராமத்திற்கு இந்த அணை கட்டுமானம் குறித்த செய்தியை எடுத்து கொண்டு சென்றார்.
மக்களை திரட்டி இந்த அணை கட்டப்பட்டால் தெற்கு கோவா வளர்ச்சி அடையும், மக்கள் பயனடைவார்கள் என்றார்.
இந்த கிராமம் குறித்த நினைவுகளை சுமந்திருக்கும் 75 வயதான கஜனன் குர்டிகர், "இந்த கிராமம் மூழ்கும் என்று எங்களிடம் கூறினார். ஆனால் எங்களின் தியாகம், பெரும் நன்மையை கொண்டு வரும்" என்றார்.
குர்டிகர் உள்ளிட்ட 600 குடும்பங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு வேறு நிலமும், இழப்பீடும் வழங்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிய திட்டம் அது. தெற்கு கோவாவின் குடிநீர் தேவை, விவசாயம் மற்றும் தொழிற்சாலை தேவைக்காக கட்டப்பட்ட அணை அது.
ஒரு நாளுக்கு 400 மில்லியன் லிட்டர் குடிநீர் மக்களுக்கு இந்த அணை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த கிராமம் குறித்து நினைவுகூரும் இனைகியோ, "இந்தப் புதிய கிராமத்திற்கு வந்தபோது எங்களிடம் எதுவுமே இல்லை" என்கிறார்.
அணை கட்டப்பட்ட போது 1982ம் ஆண்டு குடிபெயர்க்கப்பட்ட சில குடும்பங்களில் இவர் குடும்பமும் ஒன்று. அப்போது அவர் தற்காலிக வீடுகளில் தங்கவைக்கப்பட்டார். பின் சிதிலங்களை திரட்டி அதிலிருந்து தன் சொந்த வீட்டை கட்டினார். அதற்கு அவருக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது.
குருசரண் குர்டிகருக்கு தங்கள் நிலத்திலிருந்து குடிப்பெயர்ந்த போது பத்து வயது.
எனக்கு இன்னும் எங்கள் நிலத்திலிருந்து குடிபெயர்ந்த தருணங்கள் பசுமையாக நினைவில் இருக்கிறது என்கிறார் அவர்.
நீரோடிகள்
இதில் விசித்திரம் என்னவென்றால் இவர்கள் எதற்காக தங்கள் வாழ்விடத்தை அளித்தார்களோ அதன் பலனை இவர்கள் அனுபவிக்கவே இல்லை.
ஆம். கர்டி மக்களுக்கு வேறிடத்தில் நிலம் வழங்கப்பட்ட இடத்திற்கு இந்த அணையின் நீர் வந்து சேரவே இல்லை.
இப்போது குர்டிகர் வசிக்கும் வடம் பகுதியில் இரண்டு கிணறுகள் உள்ளன. ஏப்ரல், மே மாதங்களில் அந்த கிணறு வற்றிவிடும். அந்தசமயங்களில், குடிநீர் தேவைக்காக பெரும்பாலும் அரசின் தண்ணீர் தொட்டிகளையே சார்ந்து இருப்பதாக கூறுகிறார்.
நினைவுகளை காண
மே மாதத்தில் அந்த அணை வற்றும் போது, சிதிலங்கள் தெரியும். அதனை காண, தமது நினைவுகளை மீட்டு எடுக்க மக்கள் கர்டி கிராமத்தில் திரள்வார்கள்.
கிறிஸ்தவர்கள் அங்கு மிச்சமாக தெரியும் தேவாலயத்திலும், இந்துக்கள் கோயிலிலும் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
கோவாவை சேர்ந்த சமூகவியலாளர் வெனிஷா ஃபெர்ணாண்டஸ், "இன்று நம் பையை தூக்கிக் கொண்டு வேறு இடங்களுக்கு குடி பெயர்வது எளிது. ஆனால், கர்டியில் வாழ்ந்த மக்களுக்கு நிலம்தான் அடையாளம். அதனை துறப்பது எளிதல்ல. அதனால், ஒவ்வொரு ஆண்டும் தம் நிலத்திற்கு வருகிறார்கள்" என்கிறார்.