கத்தோலிக்க திருச்சபையின் பாகுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டார் போப் பிரான்சிஸ்

திங்கள், 3 ஜூன் 2019 (21:18 IST)
ருமேனியாவில் பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக ரோமா மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ருமேனியாவில் பயணம் மேற்கொண்ட கடைசி நாளில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், 'வரலாற்றில் பாகுபாட்டோடும், தவறாகவும், சந்தேகத்துடன் நடத்திய தருணங்களுக்காக' மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ்.
 
பல நூற்றாண்டுகளாக ரோமா மக்கள் ஐரோப்பாவில் சித்ரவதைகளை அனுபவித்து வந்துள்ளனர்.
 
யூத இன படுகொலையின்போது, லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக நம்ப்படுகிறது.
 
இப்போது ரோமா மக்கள் ஐரோப்பாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வாழ்கின்றனர். ருமேனியாவின் மொத்த மக்கள்தொகையில் இவர்கள் 10 சதவீதமாகும்.
 
தங்கள் மீது காட்டப்படும் பாகுபாடு காரணமாக வேலை கிடைக்காமல் வாழ்வதற்கு போராடி வருவதாக முறையிடும் ரோமா மக்களில் பலர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
 
"திருச்சபையின் சார்பாகவும், கடவுளின் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன்" என்று போப் பிரான்சிஸ் ருமேனியாவின் மத்தியில் அமைந்துள்ள பலாஜ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார்.
 
"மக்களை அலட்சியமாக நடத்துவது தவறான அபிப்ராயத்தை உருவாக்குகிறது. கோபத்தையும், மனவருத்தத்தையும் வளர்க்கிறது" என்று போப் பிரான்சிஸ் கூறினார்.
 
ருமேனியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ரோமா இனத்தை சேர்ந்த ஒருவரான தமியான் டிராக்ஹிசி போப் தெரிவித்த மன்னிப்பு பற்றி கருத்து தெரிவிக்கையில், "எனக்கும், எனது மக்களுக்கும் இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இந்த செய்தி எமது மக்களுக்கு எதிராக ஐரோப்பிய மக்களின் அணுகுமுறையை மாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்