மஹிந்தவின் 'வைக்கோல்-நாய்' உவமைக்கு விக்னேஸ்வரன் கண்டனம்

வியாழன், 16 அக்டோபர் 2014 (15:28 IST)
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண சபையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதில்லை என்று வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டிற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் புதனன்று காட்டமாகப் பதிலளித்திருக்கின்றார்.

 
யாழ்ப்பாணம் தொண்டமானாறு நீர்ப்பாசனத் திணைக்கள வளாகத்தில் வடபகுதிக்கான நீரியல் ஆய்வு மையத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
 
நாட்டில் சுமூக நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக தன்னைத் தெரிவு செய்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முன்வந்த போதிலும் வடமாகாண சபையின் சுமூகமான செயற்பாடுகளுக்கு அவர் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்பதற்காகவே ஜனாதிபதியின் வடபகுதி விஜயத்தைத் தாங்கள் புறக்கணித்திருந்தாக அவர் தெரிவித்தார்.
 
வடமாகாண மக்களை வைக்கோல் என்றும் வடமாகாண சபையை நாய் என்றும் ஜனாதிபதி உவமித்திருந்ததாகக் குறிப்பிட்ட விக்னேஸ்வரன் அவர்கள், வரப் போகின்ற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடபகுதியில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
 
இதற்கிடையில் வவுனியாவில் செய்தியாளர்களைச் சந்தித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதி வடமாகாண சபையையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் வைக்கோல் பட்டறை நாய் என குறிப்பிட்டிருந்ததைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டார்.
 
நாட்டின் தலைவராக உள்ள ஜனாதிபதி இவ்வாறு தரக் குறைவான முறையில் கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்