இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெறும் சூழல் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், அதற்கான கதவுகள் அடைக்கப்பட்டே இருந்தது. சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பணியில் ஜவஹர்லால் நேருவும், சர்தார் படேலும் ஈடுபட்டிருந்தனர்.
சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கு, அளவுக்கு அதிகமான நிபந்தனைகளை விதித்தன. ஏகாதிபத்திய சக்திகளால் மேலும் ஒரு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. அது இங்கிலாந்திலிருந்து தொடங்கி அமெரிக்கா வரை சென்றது. இந்த சக்திகள் ஆசிய அரசியலில் தாங்கள் பங்கு பெறுவதற்கு ஏதுவாக, அவர்களின் நழுவும் செல்வாக்கை அடைவதில் கவனம் செலுத்தின. அதே சமயம் சுதந்திரம் பெறவுள்ள இந்தியாவின் மீது அவர்களின் பார்வையை செலுத்த விரும்பினர்.
ஏற்கனவே பாகிஸ்தான் உருவாவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. காஷ்மீரும் இந்த தந்திரத்துக்கு உகந்ததாக இருந்தது.
1881ஆம் ஆண்டிலிருந்து ஏகாதிபத்திய சக்திகள் ஒரு வலையை பின்னிக்கொண்டு வருகின்றன. இது தொடர்பான ஆவணங்கள் இப்போது கிடைத்து வருகின்றன.
எனவே காஷ்மீர் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. முடியாட்சியை எதிர்த்தும், காங்கிரஸுக்கு ஆதரவாகவும் ஷேக் முகமது அப்துல்லா என்ற இளம் தலைவர் போராட்டிக் கொண்டிருந்தார். அவர் ஜவஹர்லால் நேருவுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
உள்ளூரில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டதற்காக மகாராஜா ஹரி சிங் அவரை சிறையில் அடைத்தவுடன், அதற்கு பதிலடி வழங்க நேரு காஷ்மீருக்கு சென்றார். அவரை அவரது சொந்த விருந்தினர் விடுதியில் வீட்டுக்காவலில் வைத்தார் மகாராஜா. மகராஜாவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஒருவராக மாறினார் நேரு.
எனவே பிரிவினை மற்றும் சுதந்திரம் என இரண்டும் உடனடியாக நிகழ வேண்டும் என்ற சூழல் நிலவும்போது, சமாதான முயற்சியில் யார் ஈடுபடுவார்?
எனவே காந்தி அங்கு செல்லவேண்டுமென கோரிக்கை விடுக்க முடியுமா என கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் மவுண்ட்பேட்டன் வினவினார்.
அதுவரை மகாத்மா காந்தி காஷ்மீருக்கு சென்றதில்லை. அங்கு செல்வதற்கு திட்டமிடும்போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் வந்துவிடும். ஜின்னா ஒரே ஒரு முறை காஷ்மீருக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது அவர்மீது தக்காளியும் முட்டைகளும் வீசப்பட்டன. நில உரிமையாளர்களுக்கும், இளவரசர்களுக்கும் அவர் நண்பராக உள்ளார் என்ற எண்ணத்தால் அவ்வாறு நடந்தது.
மவுண்ட்பேட்டன் கேட்டுக்கொண்டதற்கு மகாத்மா பதிலளிக்க வேண்டும். அப்போது காந்தியின் வயது 77. அந்தப் பயணம் கடினமானதாக இருந்தது. ஆனால் தேசம் என்று வரும்போது காந்திக்கு அது பெரிய விஷயமாக இல்லை. சுதந்திர இந்தியாவின் வரைபடத்துக்கான அடித்தளம் வலுவாக இல்லையென்றால், எதிர்காலத்தில் சமஸ்தானங்கள் பிரச்சனைகளை கிளப்பும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. எனவே அவர் போக முடிவு செய்தார். சிலர், "நீங்கள் அப்படி ஒரு கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமா? மகாராஜாவுக்கு கடிதம் ஒன்றை எழுதலாமே," என்று கோரினார்கள்.
அவர்களின் கண்களை பார்த்து காந்தி, "அவ்வாறானால், நான் நவகாளிக்கும் (தற்போது வங்கதேசம்) போயிருக்க வேண்டாம். அங்கேயும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கலாம்," என்றார்.
சுதந்திரம் கிடைப்பதற்கு 14 நாட்களுக்கு முன், மகாத்மா காந்தி ராவல்பிண்டி வழியாக ஓர் ஆபத்தான வழியில் காஷ்மீரூக்கு முதலும் கடைசியுமாக பயணம் மேற்கொண்டார். அங்கு செல்வதற்கு முன், ஜூலை 29, 1947 அன்று நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில், தான் காஷ்மீருக்கு செல்வதாக அவரே தெரிவித்தார்.
"இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று அவர்களிடம் கூற நான் காஷ்மீருக்கு செல்லவில்லை. அந்த முடிவை காஷ்மீர் மக்கள்தான் எடுக்க வேண்டும். நானோ அல்லது காஷ்மீர் மகராஜாவோ அல்ல. காஷ்மீரில் மகாராஜாவும் மக்களும் உள்ளனர். மகாராஜா இறந்தால்கூட அங்கு மக்கள் இருப்பார்கள். அவர்கள்தான் காஷ்மீரின் விதியை முடிவு செய்ய வேண்டும்," என்றார்.
1947ஆம் ஆண்டு ஆகஸ்டு ஒன்றாம் தேதி மகாத்மா காந்தி காஷ்மீர் சென்றடைந்தார். அந்த சமயத்தில் அதுவரை இல்லாத அளவு அங்கு கூட்டம் சேர்ந்தது. கூட்டம் கூடியதால் ஜீலம் நதியின் பாலத்தில் சிறிதும் இடமில்லை. அந்த பாலத்தின் வழியாக காந்தியின் கார் செல்ல முடியவில்லை. அவர் காரில் இருந்து இறங்கியபின், படகின் மூலம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொலைதூரத்தில் இருந்து வந்த காஷ்மீர் மக்கள் காந்தியை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
"இதுதான் எங்களுக்கு தேவை. நாங்கள் ஒரு புனிதரை கண்டுவிட்டோம்," என்று தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் ஷேக் அப்துல்லா சிறையில் இருந்தார். மகராஜா காந்தியை தனது அரண்மனைக்கு வரவேற்க ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். பேகம் அக்பர் ஜெஹான் அப்துல்லா வேறொரு வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
மகராஜா ஹரி சிங், மகாராணி தாரா தேவி மற்றும் இளவரசர் கரன் சிங் காந்தியை வரவேற்க அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். பேகம் அக்பர் ஜெஹான் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசினார் மகாத்மா காந்தி.
"இந்த சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளர்கள் இந்த மக்கள்தான். இவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் உலகின் எந்த சக்தியாலும் இவர்களை தடுக்க முடியாது. ஆனால், இவர்களின் கருத்தை நீங்கள் எவ்வாறு கேட்பீர்கள்? அதற்கான தகுந்த சூழல் உருவாக்க வேண்டும். எளிமையாகவும், சுதந்திரமாகவும் மக்கள் தங்களது கருத்தை தெரிவிப்பதற்கு ஏற்ற காஷ்மீரை நாம் உருவாக்க வேண்டும்."
"அவர்களின் கிராமங்களையும், வீடுகளையும் கொளுத்தி நாம் அவர்களின் கருத்தை கோர முடியாது. அவர்கள் நாங்கள் முஸ்லிம்களாக இருந்தும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று கூறினால் எந்த சக்தியாலும் அதை தடுக்க முடியாது. பாகிஸ்தானியர்கள் இங்கு நுழைந்து, அவர்களின் ஆட்சியை கொண்டுவருவதை இவர்கள் நிறுத்த வேண்டும். அவர்களால் நிறுத்த முடியவில்லை என்றால், பின்னர் பழியை தடுக்க முடியாது," என்று மகாத்மா காந்தி தெரிவித்தார்.
காந்தி இந்தியாவின் நிலையை மீண்டும் தெளிவுபடுத்தினார்: "காங்கிரஸ் என்றுமே முடியாட்சிக்கு எதிரானதாகதான் இருந்துள்ளது. அது இங்கிலாந்தால் இருந்தாலும் சரி அது இந்தியாவாக இருந்தாலும் சரி. ஷேக் அப்துல்லா ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார் அதற்காக போராடுகிறார். நாங்கள் அவருடன் இருக்கிறோம். அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். இங்கிருக்கும் மக்கள் காஷ்மீர் குறித்து முடிவு செய்ய வேண்டும்."
அதன்பின் காந்தி, இங்குள்ள மக்கள் என்று யாரை குறுப்பிட்டார் என்று தெளிவாக கூறினார். அவர், முஸ்லிம், இந்துக்கள், காஷ்மீர் பண்டிதர்கள், டோக்ரா மற்றும் சீக்கியர்களை குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
இதுதான் காஷ்மீர் குறித்து இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ நிலை. சுதந்திர இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக உருவாகவில்லை என்பதால் காந்தி அரசாங்கத்தின் குரல் இல்லை. இந்திய சுதந்திர போராட்ட பன்புகளின் தந்தை அவர், சுதந்திர இந்தியாவின் பங்கின் மிகவும் அதிகாரமிக்க மற்றும் சட்டப்பூர்வமான செய்தி தொடர்பாளர் அவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
காந்தியின் காஷ்மீர் பயணம் நம்பிக்கையை விளைத்தது என்பது ஷேக் அப்துல்லாவின் விடுதலையில், இந்தியாவுடன் காஷ்மீர் இணைவது குறித்த அவரது கருத்து மற்றும் பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் முஸ்லிம்களை பிரித்து வைப்பதில் தெரிகிறது.
நேரு, படேல், மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய தலைவர்களுக்கு காந்தியின் அங்கீகாரம் கிடைத்தது. அங்கிருந்துதான் இந்த கதை தொடங்குகிறது. அதைத்தான் தற்போதைய அரசு அழிக்க முயற்சிக்கிறது.
இந்த கதையில் தொடக்கத்தில் எந்த பங்கும் வகிக்காதவர்கள், அதனை அழிக்கு பணியில் தங்களுக்கு பங்கு உண்டு என்கின்றனர்.
மேலும் பாகிஸ்தான் தனது ராணவ சக்தியை கொண்டு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்பியபோது இந்தியா அதற்கு ராணுவத்தை கொண்டு பதிலடி கொடுத்தது. காந்தியும் அதை ஆதரித்தார்.