கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
"தாலிபன்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பதற்காக தாலிபான்களை நாங்கள் அங்கீகரிப்பதாக பொருளாகாது" என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பின்பு ஆப்கானிஸ்தானில் நடந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு மறுநாள் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடரவுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் நகரில் இருக்கும் ஒரு மசூதியில் வெள்ளியன்று நடத்தப்பட் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்கானிஸ்தானில், தாக்குதல் நடந்த மசூதி சிறுபான்மை இனமான ஷியா முஸ்லிம்களால் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் தாங்கள்தான் இருந்ததாக இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு தெரிவித்துள்ளது.
இருதரப்பும் 2020ஆம் ஆண்டு தோஹாவில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை பின்பற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக தாலிபன்கள் அரசால் நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவித்துள்ளார்.
அல்-காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதைத் தாலிபன்கள் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தின் அம்சமாக உள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை விநியோகம் செய்ய அமெரிக்க அதிகாரிகள் தாலிபன்களுக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளனர் என்றும் ஆமிர் கான் முத்தாக்கி தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று நடந்த இந்த பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் குறித்து அமெரிக்க அரசு இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.
பெண்களின் உரிமைகளை மதிப்பது, ஆப்கானிஸ்தானில் அனைத்து இனத்தையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பது, மனிதாபிமான உதவிகள் வழங்கும் அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் இயங்க அனுமதிப்பது உள்ளிட்டவற்றை தாலிபன்களிடம் வலியுறுத்த இந்தப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்று இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்துடனான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள தாலிபன் விரும்புகிறது. ஆனால் எங்கள் நாட்டின் உள்நாட்டு கொள்கைகளில் யாரும் தலையிட முடியாது என்று ஆமீர் கான் முத்தாக்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேச நலன் தொடர்பான விவகாரங்களிலேயே தாலிபன்களுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்க அரசு தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் நிறுவியுள்ள அரசை அங்கீகரிப்பது தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.
கத்தார் தலைநகர் தோஹாவில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தன.
"எங்களுக்கு வேறு வழியில்லாததால் உடல்களை அடுத்தடுத்ததாகப் புதைக்க வேண்டிய கட்டாயத்தில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் திரளான கல்லறைகளை உருவாக்க வேண்டியிருந்தது," என்ற அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரே வாரத்தில் மத நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகத் தோன்றும் 3வது தாக்குதல் இது என்று வெள்ளிக்கிழமை தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் மன்றம்.