கொரோனா வைரஸுக்கு மருந்து: அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையும், இந்தியாவின் முடிவும்
கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தை, தாங்கள் கேட்டபடி இந்தியா கொடுக்க முன்வராவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும், இந்தியாவை நம்பியிருக்கும் அண்டை நாடுகளுக்கும் இந்த மருந்தை வழங்க இருப்பதாகவும், அதை அரசியலாக்க வேண்டாம் என்றும் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்சிக்ளோரோகுவின் (Hydroxychloroquine) என்ற அந்த மருந்தை 'கேம் சேஞ்சர்' என்று டிரம்ப் குறிப்பிடுகிறார். ஆனால், அது கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கான எந்த ஆய்வு முடிவும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் மோதியுடன் டிரம்ப் தொலைபேசி மூலமாக உரையாடினார்.
அப்போது, ஹைட்ராக்ஸி க்ளோரிகியூன் மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியா இந்த மருந்தை பெருமளவில் தயாரிக்கிறது.
டிரப்பின் கோரிக்கையைப் பரிசீலித்து வருவதாக இந்தியா கூறி உள்ளது. இது குறித்த முடிவு இன்று (செவ்வாக்கிழமை) எடுக்கப்படும்.
'எதிர் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்'
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "அமெரிக்காவுக்கு இந்தியா இந்த மருந்தை அனுப்பவில்லை என்றால், அப்படியே இருக்கட்டும். அதற்கான எதிர் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்'' என்று எச்சரித்துள்ளார்.
மோதியும், டிரம்பும் நல்ல நட்பில் உள்ளனர். பிப்ரவரி மாதம் டிரம்ப் இந்தியா வந்தபோது அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தது இந்தியா.
ஹைட்ராக்சிக்ளோரோகுவின் என்றால் என்ன?
ஹைட்ராக்சிக்ளோரோகுவின் என்பது மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் க்ளோரோகுவின் மருந்தைப் போன்றதுதான்.
முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மருந்து, கடந்த சில பதிற்றாண்டுகளாக வைரஸுக்கு எதிரான மருந்தாகவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கொரோனாவுக்கான மருந்தாக இதனைப் பயன்படுத்த அனுமதி தந்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவின் மருந்து ஒழுங்கற்று அமைப்பான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதனை மறுத்தது. அதையடுத்து, மீண்டும் ஒரு விளக்கத்தைக் கொடுத்த டிரம்ப், ஒரு குறிப்பிட்ட மருந்தை அரசு அனுமதிக்காத நிலையிலும், உயிர் காக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு மருந்தை மருத்துவரால் பரிந்துரைக்க முடியும் என்றும், அப்படிப்பட்ட வகையிலானதுதான் இந்த மருந்தும் என்று குறிப்பிட்டார்.
இந்தியா உதவும் நிலையில் உள்ளதா?
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த மருந்து ஏற்றுமதிக்கு கடந்த சனிக்கிழமை இந்தியா தடை விதித்தது.
ஆனால், டிரம்பின் கோரிக்கையை அடுத்து அந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியது. அந்த முடிவை அறிவிக்கும் முன்னரே, டிரம்பின் எச்சரிக்கை வெளியானது.
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அசோக் குமார் மதன் , "உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவிடம் அதிக மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது," என்று கூறுகிறார்.
அதே நேரத்தில், அந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் ஏர்றுமதியை சீனா நிறுத்துவிட்டதாகக் கூறப்படும் தகவலையும் அவர் மறுத்தார். இந்தியாவின் 70 சதம் மூலப் பொருள் சீனாவிலிருந்து வருகிறது என்றும், அவை கப்பல் மற்றும் விமானம் மூலம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், இந்தியா தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் திறனை நம்பியிருக்கும் அண்டை நாடுகளுக்கு தேவையான அளவு பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மருந்துகளை ஏற்றுமதி செய்யப் போவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கோவிட்-19 நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கும் இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 27 IST
அதே நேரத்தில், இந்த விடயத்தை அரசியலாக்கும் முயற்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் அந்த மருந்து பயனுள்ளதா?
இந்த மருந்து குறித்து அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
'ஆய்வக பரிசோதனைகளின்போது, க்ளோரோகுவின் கொரோனோ வைரஸை தடுப்பதற்கான சமிக்ஞைகள் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் என பிபிசி சுகாதார செய்தியாளர் ஜேம்ஸ் கல்லகெர் கூறுகிறார். ஆனால், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும்
இந்த மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பது தொடர்பாக தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இதுதொடர்பான பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.