இலங்கையில் கைதிகளுக்குத் தொலைபேசி வசதி

வியாழன், 16 அக்டோபர் 2014 (15:49 IST)
இலங்கையில் சிறைக் கைதிகளுக்குத் தொலைபேசி வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான திட்டம் ஒன்றை இலங்கைச் சிறைச்சாலைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
 
இந்தத் திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதாக இலங்கையின் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரசிறி பல்லேகம தெரிவித்துள்ளார்.
 
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு கைதிக்கு ஒரு வாரத்துக்கு 10 நிமிடங்கள் வரை வெளியாருடன் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும், அந்தக் கைதியின் உறவினர்கள் அந்த அழைப்புக்கான கட்டணத்தை சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சிறைச்சாலைகளுக்குச் சட்டவிரோதமாகக் கைத் தொலைபேசிகள் கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பதற்கும், கைதிகள் தமது உறவினர்களுடன் தடையின்றித் தொடர்புகளைப் பேணுவதற்கும் இந்தத் திட்டம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கைதிகளுக்கான தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் ஒரு சிறைக்காவலரின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் என்பதாலும், அனைத்து தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படும் என்பதாலும் இந்தத் திட்டத்தால் சிறைச்சாலையின் பாதுகாப்புக்குச் சிக்கல் ஏதும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்தத் திட்டம் நேற்று கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
அது ஏனைய சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்