இப்படி ஒரு திரையரங்கில் நீங்கள் படம் பார்த்ததுண்டா?
புதன், 13 நவம்பர் 2019 (13:54 IST)
இப்போது நாம் திரைப்படங்கள் பார்க்கும் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் டூரிங் டாக்கீஸ் அல்லது டென்ட் கொட்டாயிலிருந்து பரிணமித்து வந்தவை.
இப்போது அடம் ஒலி, 3டி காட்சி எனத் திரையரங்குகள் வித்தியாசமான திரையனுபவத்தை தருகின்றன. ஆனால், தொடக்க கால திரை அனுபவம் இப்படியாக இல்லை. யாரோ ஒருவர் சினிமா புரஜக்டருடன் ஊர் ஊராகச் சென்று தற்காலிக திரைக் கொட்டகை அமைத்து திரைப்படங்களைத் திரையிடுவார்.
தமிழகத்தில் அதற்கு முன்னோடி சாமிக்கண்ணு வின்செண்ட். தமிழகத்தில் டூரிங் டாக்கீஸை அறிமுகப்படுத்தியவர் சாமிக்கண்ணு வின்சென்ட்தான். கோயம்புத்தூரில் அப்போது அவர் அமைத்த திரையரங்கத்தின் பேரில் ஒரு சாலை இருக்கிறது, 'வெரைட்டி ஹால் ரோடு'. டிலைட் திரையரங்கம் என்று இப்போது அறியப்படுகிறது.
யார் இந்த சாமிக்கண்ணு வின்செண்ட்?
"சாமிக்கண்ணு தம் வாழ்வை, ரயில்வே வரையாளராக துவங்கியவர். 1905ஆம் ஆண்டு அப்போது திருச்சியில் ரயில்வேயில் பணியாற்றி கொண்டிருந்தார். ஃபிரான்சை சேர்ந்த டுபாண்ட் என்பவர் அப்போது ஊர் ஊராக சலனப்படங்களை திரையிட்டு கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து திருச்சி வந்த அவருக்கு, எதிர்பாராத விதமாக உடல்நிலை மோசமானது. அவரிடமிருந்து பிரொஜக்டரை ரூபாய் 2250க்கு வாங்குகிறார் சாமிக்கண்ணு.
எடிசன் சினிமாடோகிராப் என்ற பெயரில் தென்னகத்தின் முதல் டூரிங் சினிமாவை திருச்சி செயின்ட் ஜோஃசப் கல்லூரி அருகே ஆரம்பித்து 'Life of Jesus' என்ற படத்தைத் திரையிடுகிறார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்குப் பின் அவர் மதுரை, திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம், பம்பாய், லக்னோ, லாகூர், பெஷாவர் என திரைப்படங்களைத் திரையிடப் பயணிக்கிறார்," என்று குறிப்பிடுகிறார் தமிழ்த் திரைப்பட வரலாற்று ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.
1909ஆம் ஆண்டு சென்னை பாரீஸ் கார்னரில் திரைப்படங்களைத் திரையிடுவதற்காக டென்ட் கொட்டாய் ஒன்றை நிர்மாணிக்கிறார்.
கோவையில் வெரைட்டி ஹால் மட்டுமல்ல, பாலெஸ் மற்றும் எடிசன் திரையரங்கங்களையும் வின்செண்ட் உருவாக்கினார்.
சாமிக்கண்ணு குறித்து விரிவான ஆய்வு செய்த அண்மையில் மறைந்த அறிஞர் பாவேந்தன், "வெரைட்டி ஹாலில் இந்தி படங்கள் திரையிடப்பட்டன என்றும், பாலெஸ் திரையரங்கில் ஆங்கில திரைப்படங்களும், எடிசன் திரையரங்கில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன" என்றும் கூறினார்,
திரைப்பட இயக்குநர் மற்றும் மாற்று வாழ்வியல் பிரசாரகர் ம.செந்தமிழன், சாமிக்கண்ணு வின்செண்ட் குறித்து, "பேசா மொழி" என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த ஆவணப்படம் சலன திரைப்படம் குறித்தும், சாமிக்கண்ணு வின்செண்ட் குறித்தும் விரிவாகப் பேசுகிறது.
டென்ட் கொட்டாய்
சாமிக்கண்ணு வின்செண்ட் தூக்கிச் சுமந்த டெண்ட் கொட்டாயிலிருந்து மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் பரிணமித்திருந்தாலும், இப்போதும் எங்கோ ஓர் இடத்தில் டென்ட் கொட்டாய் இயங்கத்தான் செய்கிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பூட்டுத்தாக்குப் பகுதியில் உள்ளது கணேஷ் திரையரங்கம் அல்லது டென்ட் கொட்டாய். சுற்றிலும் சுவர் வைத்துப் அடைக்கப்படாமல் மேற்கூரையுடன் மட்டுமே கடந்த 35 வருடங்களாக இயங்கி வருகிறது இந்த திரையரங்கம்.
பிபிசி தமிழிடம் பேசிய திரையரங்க உரிமையாளர் கணேசன் தாம் திரையரங்க தொழிலுக்கு வந்தது தற்செயலானது என்கிறார்.
"வேலூர் சாலையில் தேநீர் கடை நடத்தி வந்தேன். நல்ல வியாபாரம், வளமான லாபம். அந்த சமயத்தில்தான் இந்த திரையரங்கம் விற்பனைக்கு வந்தது. என்னை வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டார்கள். எந்த யோசனையும் இல்லாமல் நானும் வாங்கிக் கொண்டேன்," என்கிறார் கணேசன்.
மேலும் அவர், "பெரிய லாபம் எல்லாம் இல்லை. ஒரு நாளுக்கு எப்போதாவது அதிகபட்சமாக 20 ஆயிரம் வரும்," என்கிறார்.
குறைந்தபட்ச டிக்கெட்டை ரூ. 25க்கு விற்கிறார்கள்.
ரஜினி, விஜய், அஜித் படம் திரையிடப்பட்டால் முதல் நாள் அதிகபட்சமாக 400 பேர் வரை வருவார்கள் என்று கூறுகிறார் கணேசன்.
கணேசன், "இந்தப் பகுதியில் அதிகமாக இருப்பவர்கள் விவசாயத் தொழிலாளர்கள். அவர்களால் காலை காட்சிக்கெல்லாம் வர முடியாது,"என்கிறார்.
திரையரங்க வடிவம் பழமையானதாக இருந்தாலும், க்யூப் தொழில்நுட்பத்தில்தான் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மாலை மற்றும் இரவுக் காட்சி மட்டுமே திரையிடுகிறார்கள்.