தமிழ்நாடு: "டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர்" - பாஸ்போர்ட் வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவு
புதன், 27 ஜூலை 2022 (21:43 IST)
போலி ஆவணங்கள் அடிப்படையில் இந்திய கடவுச்சீட்டுகளை முறைகேடாக சரிபார்த்ததாக தொடரப்பட்ட தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு வழக்கில் அப்போதைய மதுரை மாநகர காவல்துறை ஆணையரும் தற்போதைய உளவுப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதமும் குற்றமற்றவர் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.
மதுரை கோச்சடையைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமது கடவுச்சீட்டு புதுப்பிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பிரதிவாதிகளாக மதுரை மண்டல கடவுச்சீட்டு அதிகாரியும், இரண்டாவது பிரதிவாதியாக தமிழ்நாடு காவல்துறை க்யூ பிரிவு ஆய்வாளரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
அதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் க்யூ பிரிவு காவல்துறை விசாரித்து வரும் போலி ஆவண கடவுச்சீட்டு தொடர்பான வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட உளவுப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் ஆசீர்வாதத்தை குற்றமற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
மனுதாரர் சுரேஷ் குமார், மதுரை கடவுச்சீட்ட அதிகாரி அலுவலகத்தில் தனது கடவுச்சீட்டை புதுப்பிக்கக் கோரி 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி விண்ணப்பம் செய்துள்ளார். அதன் மீதான சரிபார்ப்பு நடவடிக்கையின்போது, நசீருதின் என்பவருக்கு எதிரான குற்றவியல் வழக்கில் மனுதாரருக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டதால் தனது கடவுச்சீட்டு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே தமது விண்ணப்பத்தை கடவுச்சீட்டு அலுவலகம் பரிசீலிக்கவில்லை என்பதால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரித்தபோது, க்யூ பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், (குற்றவியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களை குறிக்க பயன்படுத்தப்படும்) "அட்வர்ஸ் நோட்டீஸ்' பட்டியலில் மனுதாரர் சுரேஷ் குமார் இடம்பெறவில்லை என்று கூறினார்.
மேலும், போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நசீருதின் ஒரு டிராவல் ஏஜென்ட். அவருக்கு எதிராக 2019இல் க்யூ பிரிவு காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. அவர் மனுதாரர் சுரேஷ் குமாரின் டிராவல் ஏஜென்ட் ஆக இருந்துள்ளார். அதைத் தவிர வேறு உறவு இருவருக்கும் இல்லை. எனவே, மனுதாரருக்கு கடவுச்சீட்டை வழங்க எவ்வித ஆட்சேபமும் இல்லை என்று க்யூ பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மனுவை அப்படியே அனுமதித்திருக்கலாம். ஆனால், அப்படி செய்ய எனது மனசாட்சி என்னை அனுமதிக்கவில்லை. காரணம், கடவுச்சீட்டு உள்ளிட்ட பிற விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் எனது விசாரணைக்காக தலைமை நீதிபதியால் ஒதுக்கப்பட்டுள்ளவை.
அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மற்றும் மதுரை, திருச்சியில் உள்ள பிறருடன் வைத்தியநாதன் என்பவர் சதியில் ஈடுபட்டு மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடவுச்சீட்டுகளை பல இலங்கையர்களுக்கும் இந்தியர்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததன் அடிப்படையில் மதுரை க்யூ பிரிவு சிஐடி காவல்துறை 2019ஆம் ஆண்டில் குற்ற வழக்கு எண்.1-ஐ பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்புடைய குற்றவியல் செயல்கள் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் 2019ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிவரை நடந்துள்ளன. 1967ஆம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம் 12(1A)(b) மற்றும் 12(2) 2021இன் படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் க்யூ பிரிவு காவல்துறை இந்த விவகாரத்தை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கால அவகாசம் பிறகு ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற டிவிஷன் அமர்வின் அந்த உத்தரவுக்கு கீழ்படியாததை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். தவறு செய்த சில அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி பெறாததால் அந்த வழக்கின் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.
நீதிபதிகள் எங்கோ வாழவில்லை. கள யதார்தத்தில் இருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை இதே விவகாரத்தை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தியிருப்பதை பத்திரிகைகளில் படித்தேன். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இதைக் கண்டும் காணாமல் என்னால் இருக்க முடியவில்லை.
மனுதாரருக்கு இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும் அதே சமயம், க்யூ பிரிவு காவல்துறை கடவுச்சீட்டு வழக்கில் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறேன். ஏன் சம்பந்தப்பட்ட துறைகள் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதை அறிய விரும்பினேன். அதன் பேரில் க்யூ பிரிவு காவல்துறை அதன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலக அலுவலர்கள், மாநில காவல் அலுவலர்கள் உள்பட 41 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்மொழியப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து 13 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய முன்மொழிவை நிராகரித்துள்ளது.
மதுரை நகர உளவுப்பிரிவில் அப்போதைய உதவி ஆணையர் சிவகுமார், ஒரு ஆய்வாளர், ஒரு தலைமை காவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி அறிக்கை மதுரை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் உள்ள குறைபாடுகளை சரிபார்க்க அந்த நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிடுகிறேன். அந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு விரைவாக முடிவெடுக்கும்படி உத்தரவிடுகிறேன்.
டேவிட்சனுக்கு சான்று, அண்ணாமலைக்கு பாராட்டு
டேவிட்சன் தேவாசீர்வாதம், தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் - உளவுப்பிரிவு
ஏற்கெனவே பல மாதங்கள் கடந்து விட்டன. இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு தாக்கத்தைக் கொண்டுள்ளது. மதுரை மாநகரில் ஒரு காவல் நிலையம் மட்டும் 54 கடவுச்சீட்டுகளை மோசடியாக வழங்குவதற்கு வழிவகுத்திருப்பது ஊழல்மிக்கது. ஊழல்வாதிகள் விரைவாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடவுச்சீட்டு நடைமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் தமது உத்தரவில் விவரித்துள்ள நீதிபதி, மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களும் நகரங்களில் காவல் ஆணையரும் இந்த கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை, சரிபார்க்கப்படும் அறிக்கைகள், நிலுவை அறிக்கைகள் போன்றவற்றை மாதாந்திர குற்றவியல் ஆய்வுக்கூட்டங்களில் சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் குறிப்பிடப்பட்ட அந்த காலகட்டத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை நகர காவல் ஆணையராக இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் 2021க்கு முன்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து, உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு வழங்கிய கால வரம்புக்குள் வழக்கு விசாரிக்கப்பட்டிருந்து, தாமதமின்றி உரிய துறைகளின் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியிருந்தால், தற்போதைய சர்ச்சையே எழுந்திருக்காது. நான் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதத்தை குற்றமற்றவர் என்று அறிவிக்கிறேன். அதே நேரம், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை இந்த விவகாரத்தை எடுத்ததற்காக அவரை நான் பாராட்டுகிறேன். ஜனநாயகத்தில் குற்றத்தை வெளிக்கொண்டு வரும் பணியை அவர் ஆற்றியுள்ளார். அவரில்லாவிட்டால், இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்று உத்தரவில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
க்யூ பிரிவு விசாரிக்கும் வழக்கு எது?
போலி ஆவண பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் தமது பொறுப்புகளை அவர் அலட்சியமாக கவனித்ததால் கீழ்நிலையில் இருப்பவர்கள் தவறு செய்துள்ளதாகவும் கூறி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை புகார் கூறியிருந்தார். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் இது தொடர்பான புகாரை அவர் நேரில் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்ட பிறகு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், எந்தெந்தத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று விவரிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்திக்குறிப்பில் விரைவில் இந்த வழக்கில் க்யூ பிரிவு சார்பில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த மனுதாரர் சுரேஷ் குமார் தனது கடவுச்சீட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோது, மதுரை கிளை க்யூ பிரிவு விசாரித்து வரும் போலி ஆவண கடவுச்சீட்டு வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட டேவிட்சன் ஆசீர்வாதத்தை குற்றமற்றவர் என்று அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.