ஆச்சரியப்படுத்தும் மேய்ப்பு நாய்: காது கேட்காது, ஆனால் சைகை புரியும்
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (11:56 IST)
விலங்குகளுக்கு எதிரான கொடுமையை தடுக்கும் ராயல் சொசைட்டி என்கிற அமைப்புக்கு, ஆடுகளை வளர்க்கப் பயன்படுத்தப்படும் மேய்ப்பு நாயை (Sheepdog) கொடுத்தார்கள். அந்த நாய் தன் கேட்கும் திறனை இழந்து இருந்தது. எனவே அதனால் தோட்டங்கள் மற்றும் பண்ணைகளில் வேலை பார்க்க முடியவில்லை.
அப்படிப்பட்ட நாய்க்கு ஒருவிதமான சைகை மொழி பயிற்றுவிக்கப்பட்டு, மீண்டும் மேய்ப்பு நாயாக பணியமர்த்தப்பட்டு இருக்கிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு காலி (Collie) ரக நாய் ஒன்றை விலங்குகளுக்கு எதிரான கொடுமையை தடுக்கும் ராயல் சொசைட்டி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தத்து எடுத்துக்கொண்டார். அந்த நாயின் பெயர் பெக்கி.
தத்தெடுத்துக் கொண்டவரின் கணவர் பிரிட்டனின் நார்ஃபோக் நகரத்தில் ஆடு மேய்த்து வருகிறார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து தத்தெடுத்த நாய்க்கு, வாய்மொழியாக பிறப்பிக்கும் உத்தரவுகளை கண்டு கொள்வதற்கு பதில், சைகை மொழியில் கொடுக்கும் உத்தரவுகளை கவனிப்பது எப்படி எனக் கற்றுக் கொடுத்தனர்.
பத்து வயதாகி இருக்கும் அப்பெண் நாய், தற்போது பகுதிநேரமாக அத்தம்பதியினரின் மற்ற இரு நாய்களோடு வேலை பார்த்து வருகிறது.
பெக்கி ஒரு திறமையான மேய்ப்பு நாய். அது தன் கேட்கும் திறனை இழந்தபின், அதை கையாள்பவரோடு தொடர்பு கொள்ளும் திறனையும் இழந்துவிட்டது என விலங்குகளுக்கு எதிரான கொடுமையை தடுக்கும் ராயல் சொசைட்டி அமைப்பு கூறியுள்ளது.
பெக்கிக்கு எட்டு வயது இருக்கும் போது, கடந்த 2018ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி அமைப்பின் மிட் நார்ஃபோக் - சஃபோக் கிளையில் ஒப்படைத்தார் ஒரு விவசாயி.
அங்குதான் க்ளோ ஷார்டென் என்கிற விலங்குகள் நல்வாழ்வு மேலாளர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பெக்கிக்கு தங்குமிடம் காலியாக இல்லாததால், ஷார்டென் அதை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
"பெக்கி வேலை பார்க்க விரும்புகிறாள் என்பதை நாங்கள் அறிந்தோம். எனவே வாய்மொழியாக தொடர்பு கொள்வது இல்லாமல், கை சைகைகளை எப்படிக் கண்டு கொள்வது, மேய்ப்பரோடு எப்படிப் பணியாற்றுவது என்கிற நீண்டகால செயல்பாட்டை கற்றுக்கொடுக்க தொடங்கினோம்" என்கிறார் ஷார்டென்.
"முதலில் கை சைகையை கண்டு பெக்கி எங்களை உற்றுநோக்குவதற்கு கற்றுக் கொடுத்தோம்."
"நாங்கள் மீண்டும் மீண்டும் நேர்மறையான முறையில் பெக்கி உடனான உறவை வலுப்படுத்தினோம். வாய்வழியாக பேசி புரிய வைப்பதற்கு பதிலாக கை அசைவுகளை புதிய வழியாக பயன்படுத்தினோம். ஒரு வேட்டை நாய் பயிற்றுநர் மூலமும் நாங்கள் செய்யும் கை சைகைகள் மற்றும் உடல் மொழிகளை பெக்கி புரிந்து கொள்ளத் தொடங்கினாள்."
இதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது என்கிறார் ஷார்டென். அதே போல பெக்கியை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை, பெக்கி புரிந்து கொள்ளவும் அதிக காலம் தேவைப்பட்டது.
நம் கையின் கட்டை விரலை உயர்த்திக் காட்டினால் (தம்ஸ் அப்) 'நல்ல பெண்' என்று பொருள் என்கிறார் ஷார்டென்.
இந்த காலி ரக நாய் ஓய்வு பெற்றுவிட்டாலும், அவ்வப்போது ஷார்டெனின் கணவரோடு வேலைக்கு வெளியே செல்கிறாள் பெக்கி.
"விளையாடும் நேரம் வந்துவிட்டால், பெக்கியின் உடலில் ஒரு ஜிபிஎஸ் ட்ராக்கரை பொருத்த வேண்டும். காரணம் விளையாடும் போது உற்சாகத்தில் அதிக தொலைவுக்கு ஓடிவிடுவாள் பெக்கி."
பெக்கியின் புதிய வாழ்க்கையைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது, அவள் தன் வாழ்க்கையை எங்களோடு மகிழ்ச்சியாக கழிக்கிறாள் என்கிறார் ஷார்டென்.
"ஒரு வயதான நாய்க்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்க முடியும் என்பதற்கு பெக்கியே சாட்சி. ஒரு நாய் தன்னுடைய புலன்களில் ஒன்றை இழந்தாலும், அதன் திறனுக்கான சான்று இது" என்கிறார் ஷார்டென்