மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணைக்கு ரணில் உத்தரவு

சனி, 31 அக்டோபர் 2015 (15:07 IST)
கொழும்பு நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட தாக்குதல் சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு உத்தரவிட்டுள்ளார்.


 

 
இந்த தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களை ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
 
பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சம்பந்தமாக மகஜரொன்றை சமர்ப்பிக்க உயர் கல்வி அமைச்சு நோக்கி சென்று கொண்டிருந்த பல்கலைகழக மாணவர்களின் பேரணி மீது போலீசார் கண்ணீர் புகைக்தாக்குதல்களை மேற்கொண்டு மாணவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
 
இவ்வாறான தாக்குதல்களின் முலம் தங்களது போராட்டத்தை முடக்க முடியாதென்று தெரிவித்தார் அனைத்து பல்கலைகழக பிக்குகளின் ஒன்றியத்தின் செயலாளர் மாகல்வேவ சிலரதன தேரர்.
 
நல்லாட்சி அரசாங்கமும் மாணவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டிய அவர் இதற்கு அரசாங்கம் முழு பொறுப்பு கூறவேண்டுமென்று தெரிவித்தார்.
 
இந்த தாக்குதல் முழுமையாக போலிசாரின் செயலென்றும் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
 
இதனை ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறிய சிலரதன தேரர், அரசாங்கத்திற்கு இந்த தாக்குதலுடன் தொடர்பு இல்லாவிட்டால் அதனை நடத்த உத்தரவிட்ட நபர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டு மென்றும் தெரிவித்தார்.


 
 
இதே வேளை இந்தத் தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட 39 பல்கலைக்கழக மாணவர்களை பிணையின் கீழ் விடுதலை செய்வதற்கு நீதிபதி தீர்மானித்ததாக அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய கமகே தெரிவித்தார்.
 
கைது செய்யப்பட்ட மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்கள் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
 
முன் வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி 39 மாணவர்களையும் பிணையில் விடுதலை செய்ய தீர்மானித்ததாகத் தெரிவித்தார் வழக்கறிஞர் சஞ்சய கமகே.

வெப்துனியாவைப் படிக்கவும்