கர்நாடகாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆளுநரின் பின்னணி என்ன?

புதன், 16 மே 2018 (14:20 IST)
கர்நாடக தேர்தல் முடிவுகள் மற்றும் தொகுதி எண்ணிக்கைப்படி, அதிக இடங்களில் வெற்றிபெற்று பா.ஜ.க தனி பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் தனிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும், மத சார்பற்ற ஜனதா தள கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

 
எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
 
இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு செய்யப்போவது கர்நாடக மாநில ஆளுநர் தான். முழுமையான முடிவுகள் கைக்கு வந்ததும், ஆளுநர் அரசு அமைக்க யாருக்கு அழைப்பு விடுப்பார் என்பதை பொறுத்தே இனி அரசியல் ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நடைபெறும்.
 
இந்நிலையில் கர்நாடக மாநில ஆளுநர் 80 வயது வஜுபாய் வாலாவை நோக்கி அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.
 
வஜூபாய் வாலாவின் பின்னணி என்ன?
 
பிரதமர் நரேந்திர மோதி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, வஜூபாய் நிதியமைச்சராக பதவி வகித்தார். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோதி 13 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தபோது, வஜுபாய் ஒன்பது ஆண்டுகாலம் நிதியமைச்சராக பதவி வகித்தார். பா.ஜ.கவின் குஜராத் மாநில தலைவராக 2005-2006 ஆண்டுகளில் பொறுப்பு வகித்தார்.
 
மாநில அரசின் பட்ஜெட்டை 18 முறை வழங்கிய ஒரே நிதியமைச்சர் என்ற சாதனையையும் வஜூபாய் வாலா செய்துள்ளார். குஜராத்தில் கேஷுபாய் படேலிடம் இருந்து நரேந்திர மோதிக்கு அதிகாரம் கைமாறுவதற்கு பின்னணியில் இருந்த சில தலைவர்களுள் வஜூபாய் வாலாவும் ஒருவர். அதிகாரம் மாறிய பிறகும் அவர் நிதியமைச்சராக தொடர்ந்து பணியாற்றினார்.

 
2001ஆம் ஆண்டில் நரேந்திர மோதி சட்டமன்றத் தேர்தல்களில் முதல்முறையாக போட்டியிட்டபோது, அவருக்காக ராஜ்கோட் தொகுதியில் இருந்து விலகி, அவருக்கு பாதையமைத்துக் கொடுத்தவர் வஜூபாய் வாலா.
 
ராஜ்கோட்டில் வணிகக் குடும்பத்தை சேர்ந்த வஜுபாய் வாலா, பள்ளி மாணவராக இருந்தபோதே, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தார். 26 வயதில் ஜன சங்கத்தில் இணைந்த அவர், விரைவிலேயே கேஷுபாயிக்கு நெருக்கமானவரானார். ராஜ்கோட் நகர மேயராகவும் பதவி வகித்தார் வஜுபாய் வாலா.
 
1985 சட்டசபை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட அவர், அதே தொகுதியில் இருந்து ஏழு முறை வெற்றி பெற்றார்.
 
வஜூபாய் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டது. ராஜ்கோட்டில் ரியல் எஸ்டேட் வர்த்தகர்களுடான நெருக்கமே, அவரது சொத்துக்கள் அதிகரிப்புக்கு காரணம் என பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அவரது ஆளுமையின் மீது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
 
வேடிக்கையாகவும், அனைவரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமை கொண்ட அவர் பேச்சாற்றலுக்காக அறியப்படுபவர். ஒரு கூட்டத்தில் அவர் பேசுகிறார் என்றால் அதை ரசிக்கும் மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி. அனைவரிடமும் இயல்பாக பழகக்கூடிய வஜூபாயி, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் விருப்பம் கொண்டவர். வஜூபாயின் சில பேச்சுகளும் அவர் வெளியிட்ட சில அறிக்கைகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
 
மைசூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வஜூபாயி வாலா, பெண்கள் 'பேஷன்' என்ற மாயையில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது மிகப்பெரிய சர்ச்சைகளையும், ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்